எலான் மஸ்க், எக்ஸ் தளத்தை வாங்கியதிலிருந்து, அதில் விளம்பரங்கள் வழங்குவதை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம். இப்போது மீண்டும் விளம்பரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

ட்விட்டர் செயலியைக் கடந்த 2022 ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியில் எலான் மஸ்க் வாங்கினார். அடைபட்டிருந்த குருவியைப் பறக்கவிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதன் பின்னர் ட்விட்டரின் பெயர் எக்ஸ் என மாற்றப்பட்டது. குருவி பறந்ததோ இல்லையோ, அதன் பயனர்கள் பிற செயலிகளைத் தேடிப் பறந்தனர். Mastodon மற்றும் Bluesky என வெவ்வேறு சமூக வளைதளங்களைத் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பிற தளங்களுக்குச் சென்றதற்கு மஸ்க்கின் நிர்வாக முறையும் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. எலான் மஸ்கின் அரசியல் கட்சி சார்ந்த ஆதரவும் ஒரு பக்கச் சார்பு நிலைப்பாடும் விவாதப்பொருளாகின.
எனவே ஆப்பிள் நிறுவனமும் இனிமேல் எக்ஸ் தளத்தில் எங்கள் விளம்பரங்கள் வராது எனக் கடந்த 2023 நவம்பரில் அறிவித்திருந்தது. எனினும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வந்தன. ஆப்பிளைப் போலவே அமேசான், டிஸ்னி(Disney), Comcast, Warner Bros. Discovery போன்ற பிற நிறுவனங்களும் விளம்பரங்களை வழங்குவதை நிறுத்தின. அதனால் எக்ஸ் தளத்தின் வருமானம் பெருமளவில் குறைந்தது.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்றுள்ளார். ட்ரம்ப் அரசாங்கத்தில், அரசாங்க செயல்திறன் துறை (DOGE) எனும் துறையின் முக்கியமான பொறுப்பாளராகவும் உள்ளார். ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது சொந்த பணத்தில் ஒரு மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் ட்ரம்பின் பதவியேற்பு நாளின் போது நடைபெற்ற இரவு விருந்தில் டிம் குக்கும் பங்கேற்றுள்ளார். எலான் மஸ்க்கும் கலந்து கொண்டிருந்த அந்நிகழ்வில், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓர் ஆண்டுக்கும் மேலாக எக்ஸ் தளத்திற்கு விளம்பரங்களை வழங்குவதை நிறுத்தியிருந்த ஆப்பிள், இப்போது மீண்டும் விளம்பரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. முதல் விளம்பரமாக சஃபாரி இணைய உலாவியின் தனியுரிமைக் கொள்கைகளைப் பற்றி விளக்கும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மு. இசக்கிமுத்து.
