அமேசான் கிண்டில் மின் படிப்பான் புதுப் பதிப்பில் யுஎஸ்பி மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதிக்குக் கட்டுப்பாடு வருகிறது.
கால மாற்றத்துக்கு ஏற்ப அச்சுநூல்களை விட மின் படிப்பான்களில் வாசிக்கும் பழக்கம் மிகுந்து வருகிறது. மின் படிப்பான்கள் பல இருந்தாலும் அமேசான் தயாரிப்பான கிண்டில் முதன்மையாக இருக்கிறது. பன்னிரண்டாவது தலைமுறை மின் படிப்பான் வந்தபிறகும் தலைமுறை தலைமுறையாக நூலைக் களவாடிப் படிக்கும் வழக்கம் மட்டும் நின்றபாடில்லை.

புத்தக விற்பனை மூலம் அதை எழுதிய எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் வருமானம் கிடைக்கும். இவர்களுக்குத் தொடர்பில்லாத யாரோ சிலர் அந்த வருமானத்தைக் களவாடுவது உண்டு. வெளியான அச்சுநூலைப் பிரதியெடுத்து தரம் குறைந்த வகையில் பதிப்பித்து எழுத்தாளருக்குப் பங்கு கொடுக்காமல் குறைந்த விலைக்கு விற்று வரும் லாபத்தைக் களவாடுவோர் எடுத்துக்கொள்வர். அச்சகம், வடிவமைப்பு, முதலீடு எல்லாம் தேவைப்படும் அச்சுநூல்களுக்கே இந்தக் கதி எனில் மின் புத்தகங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
கணினி மென்பொருள்கள் பற்றிக் கொஞ்சம் தெரிந்தால்கூடப் போதும். பாதுகாப்புக் கதவுகளை உடைத்துப் புத்தகத்தை தரவிறக்கி எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய லாபத்தை இல்லாமல் செய்துவிடுவர். நிறைய எழுத்தாளர்கள் தங்கள் நூலை மின் வடிவமாக மாற்றாமல் வைத்திருந்தால் களவாடும் வாய்ப்பு குறையும் என நினைக்கும் அளவுக்கு இது பெரிய தொல்லைதான்.
அமேசான் பல காலமாக இதைத் தடுக்க முயல்கிறது. அமேசான் மின் படிப்பானாக இருந்தாலும் அதில் மற்ற மின் புத்தகங்களையும் படிக்க முடியும். அமேசான் மட்டுமே மின் புத்தகங்களை விற்கவில்லையே. வேறு எங்காவது வாங்கிய மின் புத்தகங்களை அமேசான் கிண்டில் மின் படிப்பானில் ஏற்றுவதற்குப் பல மென்பொருள்கள் உள்ளன. யுஎஸ்பி மூலம் மின் படிப்பானை கணினியில் இணைத்து மின் புத்தகங்களைத் தரவிறக்கவும் பதிவேற்றவும் முடியும். சைட்லோடிங் என்பார்கள்.
இப்படிச் செய்யும்போது இந்தக் கோப்புகளில் களவாடுவதற்கான மென்பொருள்களைச் சேர்க்கமுடியும். அல்லது வாசகரே கூட நிறைய பிரதி எடுத்து பணம் செலுத்தாமல் படிப்பவர்களுக்கு அனுப்பமுடியும். இதைத் தடுக்க யுஎஸ்பி வசதியை முற்றிலும் எடுத்துவிடலாம் என்று நினைத்தது அமேசான். சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தகவல் வெளியானபோது வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது தங்களுடைய மின் படிப்பானின் புதிய பதிப்பில் இதைச் சற்றே மாற்றி வெளியிட்டுள்ளது அமேசான்.
அதாவது கம்பியில்லா பரிமாற்றம் வழியாக (MTP Media Transfer Protocol ) மட்டுமே மற்ற மின் புத்தகங்களை இனிமேல் அமேசான் மின் படிப்பானில் பதிவேற்ற இயலும். யுஎஸ்பியைச் செருகி இஷ்டம்போல எதையும் ஏற்றவோ இறக்கவோ முடியாது. பன்னிரண்டாம் தலைமுறை அமேசான் மின் படிப்பானில் இந்த அம்சம் நடைமுறைக்கு வருகிறது. எதையாவது தரவிறக்கம் செய்வதாக இருந்தால் பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் செய்துகொள்ளலாம்.
பணம் கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களுக்கு இதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. அவர்கள் வழக்கம்போல அமேசான் மின் படிப்பானில் தங்கள் புத்தகங்களை ஏற்றிக்கொள்ளலாம். களவாடும் எண்ணத்தோடு கையாள்பவர்களுக்கு மட்டுமே தடை போடுகிறது அமேசான்.
