ஜிமெயில் சேவையில் மின்னஞ்சலில் உள்ள செய்தியை சுருக்கித் தரும் வசதி பணம் செலுத்தக் கோரும் செய்தியைத் தாங்கி வரும் மின்னஞ்சல்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

உணவுக்கு உப்பு எவ்வளவு அவசியமோ அப்படி செயற்கை நுண்ணறிவு எல்லாத் தொழில்நுட்பங்களிலும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. புதிதாக அறிமுகமானாலும் சரி, ஏற்கெனவே இருக்கும் ஒன்றென்றாலும் சரி, அதில் செயற்கை நுண்ணறிவைச் சேர்த்துவிடுகிறார்கள். கூகுள் மின்னஞ்சல் சேவையான கூகுளும் அதற்கு விதிவிலக்கல்ல.
முன்பொரு காலத்தில் காகிதக் கடிதம் எழுதித் தெரிவித்த விஷயங்களுக்கு மாற்றாக இணையம் மூலம் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்தினோம். தற்போது நிகழ்ச்சிகள், பயணங்கள், பொருள்களை வாங்குதல், இணையம் போன்ற பல்வேறு சேவைகளுக்கு உரிய பணம் செலுத்துதல் என பல்வேறு வகைகளில் மின்னஞ்சல் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்னஞ்சலை முழுவதுமாகப் படிக்கத் தேவையில்லாமல் அதில் உள்ள தகவல்களின் சுருக்கத்தை மட்டும் நமக்குத் தருவதுதான் சுருக்கக் குறிப்பு அட்டைகள் (summary cards). இதற்கு செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
அண்மையில் கூகுள் இந்த சுருக்கக் குறிப்புத் தகவல்களில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. வடிவமைப்பை புதிதாக மாற்றியது. நாம் விமானப் பயணச்சீட்டு வாங்கி அது உறுதி செய்யப்பட்ட தகவல் மின்னஞ்சலில் வந்தால் தலைப்பிலேயே உறுதிசெய்யும் குறியீட்டு எண் இதுதான் எனக் காட்டும். இந்த சுருக்கக் குறிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் விமானத்தில் செக்-இன் செய்யவோ, பயணச்சீட்டில் ஏதேனும் மாறுதல் செய்யவோ தேவையான பொத்தான்களைக் கீழே காட்டுகிறது. ஒரு நிகழ்ச்சிக்கு பதிவு செய்ததை உறுதி செய்து மின்னஞ்சல் வந்தால் கூடவே இந்த நிகழ்ச்சிக்கு வேறு நண்பர்களை அழைக்கவோ, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போக வழி சொல்லவோ கூடுதலாக சில வாய்ப்புகளை இணைத்தே காண்பிக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு பொருள்கள் வாங்குவது தொடர்பான மின்னஞ்சல்களுக்கு இந்த வசதிகள் அறிமுகமாகின. அடுத்து நிகழ்ச்சி தொடர்பான மின்னஞ்சல்களிலும் வந்தது. தற்போது பில்லிங் மின்னஞ்சல்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய மாறுதல் எனினும் இதன் பயன்கள் அதிகம். மின்னஞ்சலில் செய்தியைப் படிக்கும்போதே அதில் உள்ள செய்திக்கு ஏற்றாற்போல் பின்னர் நினைவூட்டு என்றோ, பணத்தைச் செலுத்து என்றோ பொத்தானை அழுத்திட இயலும். நம் வேலைகளை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ள மின்னஞ்சலுக்கு வெளியே வந்து இன்னொரு செயலியைத் திறந்து அதைச் செய்வதைவிட இது மிகவும் எளிது. ஐஓஎஸ், ஆண்டிராய்டு இரண்டிலுமே இது வேலை செய்யும்.
