கூகுள் தொலைக்காட்சி விமர்சனம்

கூகுள் டிவி செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் சுருக்கக் குறிப்புகளும், விமர்சனங்களை வழங்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் ஒரு காணொளியைக்கூட நம்மால் முழுவதுமாகப் பார்க்க முடிவதில்லை. தேவையான விஷயங்களை பார்ப்பதற்கு மட்டுமே நம்மில் பலர் நேரத்தை ஒதுக்குகின்றோம். நம்முடைய பொன்னான நேரத்தைப் பாதுகாப்பதற்காக, கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சுருக்கக் குறிப்பு ‌அம்சத்தை யூடியூபில் வழங்கியது. இதன்மூலம் ஒரு காணொளியைத் திறக்காமலேயே, அதன் உள்ளடக்கத்தை குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்த சுருக்கக் குறிப்புகள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டன.

Google TV

இந்நிலையில் கூகுள் டிவி செயலியிலும் செயற்கை நுண்ணறிவு சுருக்கக் குறிப்பு, விமர்சனம் அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கூகுள் டிவி என்பது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகக் கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியாகும்‌. ஆண்டிராய்டு தொலைக்காட்சியை அடிப்படையாகக் கொண்ட இது கடந்த 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் நீங்கள் இதை ஆண்டிராய்டு திறன்பேசிகள், திறன் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அனைத்து நவீனக் கருவிகளிலும் பயன்படுத்தலாம்.

திறன்பேசிகளிலும் டேப்லெட்களிலும் செயலி வடிவில் பயன்படுத்தப்படுகிறது கூகுள் டிவி. ஆனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், குரோம்காஸ்ட்(Chromecast) போன்றவற்றில் ஒரு மென்பொருளாகவே இணைத்து வழங்கப்படுகிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுருக்கக் குறிப்பு, விமர்சனம் அம்சங்களின் மூலம், நமது நேரம் பெருமளவில் பாதுகாக்கப்படும். ஏனெனில் இரண்டரை மணிநேரம் கொண்ட ஒரு திரைப்படத்தைக் கூகுள் டிவியில் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இரண்டரை மணிநேர திரைக்கதையை ஒரு சில வரிகளில் சுருக்கி வழங்கிவிடும் இந்த செயற்கை நுண்ணறிவு.

அதோடு எல்லா விமர்சனங்களையும் அலசி அவற்றின் சுருக்கத்தையும் பொதுவான கருத்தையும் வழங்கிவிடுகிறது செயற்கை நுண்ணறிவு. இவற்றை வாசிப்பதும் எளிமையானதுதான். நீங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சியின் சிறுபடத்திற்கு(Thumbnail) கீழே சுருக்க குறிப்புகள், விமர்சனங்கள் என்ற பக்கம் காண்பிக்கப்படும். ( Summaries, reviews & more) அதைத் தொட்டால் அந்த நிகழ்ச்சியின் சுருக்கத்தைப் பற்றிய காட்சி வில்லை தோன்றும். அதைத் தொடர்ந்து விமர்சன சுருக்கம், பார்வையாளர்கள் வழங்கிய விமர்சனங்கள், திரை விமர்சகர்களிடமிருந்து பெறப்பட்ட விமர்சனங்கள், பார்ப்பவருக்கான ஆலோசனை என ஒவ்வொன்றும் தனித்தனி காட்சி வில்லைகளாகத் தோன்றும்.

அத்தனையையும் பார்த்துவிட்டு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now