ஆப்பிள் கணக்கு பரிமாற்றம்

ஓர் ஆப்பிள் கணக்கில் வாங்கிய செயலிகளுக்கான சந்தாவை மற்றோர் ஆப்பிள் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Apple

ஆப்பிள் பயனர்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குச் செயலிகளுக்கான சந்தாவை மாற்றும் அம்சத்தை வழங்க வேண்டுமென வெகுகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு ஆப்பிள் நிறுவனத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை ஆப்பிள் பயனர்கள் செயலிகளுக்கான சந்தாவை தங்கள் குடும்பத்தினரின் கணக்குகளோடு பகிர்ந்துகொள்ளும் அம்சம் பயன்பாட்டிலிருந்தது. அதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செயலிகள், புத்தகங்கள், திரைப்படங்களை எளிதாகப் பகிர்ந்து பயன்படுத்தி வந்தனர் .

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இடம்பெயரும் அம்சத்தின்படி, சந்தாக்கள் ஒரு கணக்கிலிருந்து அகற்றப்பட்டு, பயனரின் விருப்பப்படி வேறு ஒன்றில் சேர்க்கப்படும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு ஆப்பிள் கணக்குகளைப் பயன்படுத்தும் பயனர்கள் மட்டுமே செய்துகொள்ள முடியும். ஐகிளவுடில் (iCloud) பயன்படுத்தும் கணக்கு முதன்மைக் கணக்கு எனவும், ஆப் ஸ்டோரில் பயன்படுத்தும் கணக்கு இரண்டாம் கணக்கு எனவும் கூறப்படுகிறது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்குக் கொஞ்சம் கெடுபிடியான விதிகளைத்தான் வழங்கியிருக்கிறது ஆப்பிள். அதன்படி இரண்டு கணக்குகளும் ஒரே நாட்டிற்குட்பட்டவையாக இருக்க வேண்டும். இந்த பரிமாற்றம் இரண்டு காரணி அங்கீகாரம் (Two factor authentication) மூலமாகச் செய்யப்படுகிறது. குடும்பப் பகிர்வு செய்யப்பட்டிருந்தால் பரிமாற்றம் செய்ய இயலாது. மேலும் பூட்டப்பட்ட, முடக்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. பயனரின் முதன்மைக் கணக்கு ஒரு முறையாவது சந்தாவை வாங்குவதற்கோ பதிவிறக்குவதற்கோ பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் கணக்குப் பரிமாற்றத்தை மேற்கொள்ள இயலும்.

விதிமுறைகள் கடினமாக இருந்தாலும், பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறை எளிமையானதுதான். பரிமாற்றம் செய்வதற்கு அமைப்புகள் செயலியைத் திறந்து உங்கள் ஆப்பிள் கணக்குப் பெயரைத் தட்டவும். ஊடகம் மற்றும் வாங்குதல் (Media and Purchase) என்ற பொத்தானைத் தட்டவும். தொடர்ந்து வாங்குதல்களை நகர்த்து (Migrate Purchases) என்ற பக்கத்தைத் தொடுங்கள். இதற்குப் பிறகு, உங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கணக்குகளுக்கான கணக்குத் தகவலைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களுக்குத் தேவையான செயலிகளின் சந்தாவைப் பரிமாற்றம் செய்துகொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்தவுடன், நீங்கள் வாங்கிய செயலிகள் நகர்த்தப்பட்டது தொடர்பான மின்னஞ்சல்களை இரு கணக்குகளிலும் பெறுவீர்கள்.

இந்த செயல்முறை முடிவுற்ற பின்னர் உங்கள் இரண்டாம் நிலை கணக்கை இனி வாங்குதல்களுக்குப் பயன்படுத்த முடியாது. இதற்கு மாற்று வழிகளையும் ஆப்பிள் தன் இணையதளத்தில் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படவில்லை. இது தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு ஆப்பிளின் உதவிப் பக்கத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now