ஆப்பிள் திறன்கடிகாரத்தி்ல் உள்ள இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் அம்சம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
ஆப்பிள் திறன் கைக்கடிகாரங்களில் பல்வேறு உடல் நலன் பேணும் அம்சங்கள் உள்ளன. அவை வெறும் அம்சமாக மட்டுமே இல்லாமல், அதன் பயனர்களைக் காக்கும் பெருமையைப் பெற்றுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூட ஆப்பிள் திறன்கடிகாரம் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வைப் பற்றிக் கூறியுள்ளார். அண்மையில் ஒருவரின் கார் விபத்துக்குள்ளாகி குளத்தில் தலைகீழாக மூழ்கிய போது, ஆப்பிள் திறன்கடிகாரத்தின் விபத்தைக் கண்டறியும் அம்சம் அவரைக் காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக் கோமஸ். இவரும் பிற பயனர்களைப் போலவே உடற்பயிற்சிகள், உடல் எரிக்கும் சக்தியின் அளவைக் கண்காணித்தல், இதயத்துடிப்பு போன்றவற்றிற்காக ஆப்பிள் திறன்கடிகாரத்தை வாங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் கோமஸின் ஆப்பிள் திறன்கடிகாரம், அவரது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாக எச்சரித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) என்ற பிரச்சினை இருப்பதாக எச்சரிக்கும் வகையிலான ஐந்து அறிவிப்புகளைப் பெற்றார்.
ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்பது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகும். இதில் இதயத்தின் மேல் அறைகள் ஒழுங்கற்ற முறையில் துடிக்கத் தொடங்குகின்றன. இந்த நிலை பெரும்பாலும் இதயத்தில் இரத்த உறைவுக்கு வழிவகுக்கும். அதோடு மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழக்கும் நிலையும் இதன்மூலம் ஏற்படுகிறது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோமஸூக்கு இதைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனாலும் அவர் ஆப்பிளின் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்களை அணுகியுள்ளார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் தீவிரமாக இருப்பதைக் கண்டறிந்தனர். மருத்து சிகிச்சைக்குப் பிறகு இப்போது நலமுடன் இருக்கிறார் கோமஸ்.
அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ”உங்கள் உடல் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். அதற்காக ஒரு திறன்கடிகாரம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வெளியே நடந்து சென்று உடற்பயிற்சி செய்தாலும் சரி. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நாளை யாருக்கும் நிச்சயமில்லை.” என அறிவுரையையும் வழங்கியிருக்கிறார்.
நோயால் பாதிக்கப்படும் முன்னர், வாய்ப்பிருப்போர் ஆப்பிள் திறன்கடிகாரங்களைப் பயன்படுத்துவது சிறந்த வழிதான்.
- மு .இசக்கிமுத்து
