ஆப்பிள் நுண்ணவுக்குத் துணையாகக் கூகுள் ஜெமினி போன்ற மூன்றாம் தரப்பு செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழிமாதிரி இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், அதற்கு மாற்றாக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 2024 இல் இருந்தே கூகுள் ஜெமினியுடன் ஆப்பிள் நுண்ணறிவை இணைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆப்பிளின் மென்பொருள் நிர்வாகியான கிரேக் ஃபெடரிகி சில மாதங்களுக்கு முன்னர், “கூகுள் உட்படப் பிற செயற்கை நுண்ணறிவு செயலிகளுடன் நல்ல ஒருந்கிணைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.
இது இப்போது வரவுள்ள ஐஓஎஸ் 18.4 பீட்டா வெளியீட்டின் மூலம் சாத்தியப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அதில் உள்ள நிரல், கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவு பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிரலில் புதிய பீட்டா இயங்குதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பின் தளத்தில் மூன்றாம் தரப்பினர் என்பதற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது கூகுள் ஜெமினியைக் குறிக்காமல் கூகுளைக் குறிக்கிறது. இதே போலத்தான் சாட்ஜிபிடிக்கு பதிலாக அதன் நிறுவனமான ஓப்பன்ஏஐயும் குறிக்கிறது.
கூகுள் ஜெமினி, சாட்ஜிபிடி மற்றும் சீனாவில் உள்ள அலிபாபா போன்ற செயற்கை நுண்ணறிவு சேவைகள் அனைத்தும் ஆப்பிள் நுண்ணறிவுடன் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில், ஒரு பயனரின் கோரிக்கை முதலில் சிரியால் பரிசீலனை செய்யப்படும். பின்னர் தேவைப்பட்டால், அந்த பயனரின் அனுமதியுடன் பிற செயற்கை நுண்ணறிவு சேவைக்கு அனுப்பப்படும். பயனர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ற படி எந்த செயற்கை நுண்ணறிவை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதேபோல், இந்த ஒருங்கிணைப்பு ஆப்பிள் நுண்ணறிவு வழங்கும் பிற அம்சங்களைப் போலவே இலவசமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆப்பிள், சில ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் என்று முன்னர் தகவல் பரவியது. ஆனால் 2027 வரை அதற்கான வாய்ப்பில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
ஐஓஎஸ் 18.4 பீட்டா அம்சத்தில் புதிய செயற்கை நுண்ணறிவுகளுடனான ஒருங்கிணைப்பு பற்றிய தரவுகள் இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- மு. இசக்கிமுத்து
