வேஸ் செயலி குட்டித்திரையில்

திசைமாற்றிச் சக்கரத்திற்கு (Steering wheel) அருகில் உள்ள திரையிலும் வழிகாட்டும் வரைபடத்தை இணைத்துக்கொள்ளும் வசதி வேஸ் செயலி அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது.

waze

வழிகாட்டும் செயலிகளுள் ஒன்றான வேஸ், 190 மில்லியன் பயனர்களைக் கொண்டது. இஸ்ரேலில் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இச்செயலி தற்போது, உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கணிசமான பயனர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை 2013ல் கூகுள் நிறுவனம் வாங்கியது. அப்போது முதல் இது கூகுள் நிறுவனத்தின் செயலிகளுள் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.

எனினும் கூகுள் மேப்ஸ் செயலியைக் காட்டிலும் விதவிதமான அம்சங்கள் வேஸ் செயலியில் உள்ளன. மழை நீர் தேங்கி நிற்பது முதல் காவலர் வேகமாக வரும் வாகனத்தைப் பிடிக்க நின்று கொண்டிருப்பது வரை நிகழ்நேரத் தகவல்களை நம் பயணத்தில் அறிந்து கொள்ள உதவுகிறது வேஸ்.

வேஸ் பயனர்களிடமிருந்து வரைபடத் தரவு, பயண நேரங்கள், போக்குவரத்துத் தகவல்களை அதன் சேவையகத்தில் சேகரிக்கிறது. பயனர்கள் வழங்கும் தரவுகளையே பயன்படுத்துவதால், துல்லியமாகவும் குறைந்த முதலீட்டிலும் செயல்படுகிறது. இதன் பயனர்கள் போக்குவரத்து நெரிசல்கள், வேகம், விபத்துகள் போன்றவற்றைச் செயலியில் பதிவிடலாம்‌.

மேலும் இணைய வரைபட திருத்தி மூலம் சாலைகள், அடையாளங்கள், வீட்டு எண்கள் போன்றவற்றையும் புதுப்பிக்கலாம். பயனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சிறந்த பாதைகளையும் நிகழ் நேரப் போக்குவரத்து அறிவிப்புகளையும் வழங்குகிறது. வேஸ் மூலம் பயனர், அருகில் அல்லது அவர் செல்லும் வழியில் உள்ள குறைந்த விலையிலான எரிபொருள் நிலையத்தையும் கண்டறிய முடியும். இத்தகவல்களும் பயனர்களாலேயே வழங்கப்படுகின்றன.

இதில் இப்போது மேலும் ஒரு பயன்தரக்கூடிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. திறன்பேசி மூலம் பயன்படுத்தப்பட்ட இச்செயலியை இனிமேல், வாகனங்களில் திசைமாற்றிச் சக்கரத்திற்கு (Steering wheel) அருகில் உள்ள திரையிலும் பயன்படுத்த முடியும். முன்பெல்லாம் பெரிய தொடுதிரையில் மட்டுமே பயன்படுத்தும் வசதி இருந்து வந்தது.

இனிமேல் ஓட்டுநர்கள் அவசியமின்றி பெரிய திரையைப் பார்த்து கவனச்சிதறல் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. எளிதாகப் போக வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொண்டால் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். எனினும் வேகக் கண்காணிப்பு கேமராக்கள் அல்லது காவல்துறை இருப்பு போன்ற சாலை ஆபத்துகளைத் தேடுகிறீர்கள் என்றால், வழக்கமாக இருக்கும் பெரிய தொடுதிரையைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

எல்லா வண்டியிலும் இரண்டு திரைகள் இருப்பதில்லை. இந்த புதிய அம்சத்தை BMW, Ford, Polestar மற்றும் Volvo போன்ற நிறுவனங்களின் புதிய ரக மகிழுந்துகளில்தாம் பயன்படுத்த முடியும். அதோடு வேஸ் செயலியின் சமீபத்திய பதிப்பான 5.4 ஐ பயன்படுத்த வேண்டும்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now