குறைந்த விலை ஆப்பிள் கருவி

ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் 16இ திறன்பேசி, முன்பதிவு செய்த பயனர்களைச் சென்று சேரத் தொடங்கியுள்ளது.

ஆப்பிளின் குறைந்த விலை கொண்ட திறன்பேசியான ஐபோன் எஸ்இ தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தது. விலை குறைவாக இருந்தாலும் அதன் தரத்திலும், அம்சங்களிலும் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கவில்லை ஆப்பிள்.

Apple 16e

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து முன்பதிவு செய்யாமலே நேரடியாகவும் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். இது கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. 128 ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஐபோன் 599 டாலருக்கும், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு அளவு கொண்டவை முறையே 699 மற்றும் 899 டாலருக்கும் கிடைக்கின்றன.

இதன் சிறப்பம்சமாக 6.1-இன்ச் OLED திரை இடம்பெற்றுள்ளது. விரல் ரேகையைப் பயன்படுத்தி திறன்பேசியைத் திறப்பதற்கு மாற்றாக, வடிவங்கள் அல்லது முகவடிவமைப்பைப் பயன்படுத்தித் திறக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.பின்புறத்தில் ஒரு புதிய 48 படவணு கொண்ட படக்கருவி உள்ளது. இதோடு 12MP மெய்நிகர் தொலைநிழற்கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.

A18 நுண்சில்லு மூலம் இயக்கப்படுவதால், ஆப்பிள் நுண்ணறிவு ஐபோன் 16இ-ல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன்மூலம் ஆப்பிள் நுண்ணறிவின் சிறப்பம்சங்களான ஜென்மோஜி, சுருக்கக்குறிப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும். அதோடு சிரி வழியாக சாட்ஜிபிடி மற்றும் காட்சி நுண்ணறிவு போன்ற அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஐபோன் எஸ்இ யின் புதிய பதிப்பாகப் பிப்ரவரி 28 முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது ஐபோன் 16இ. ஆப்பிள் நுண்ணறிவு உட்பட பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான இணைய முன்பதிவு பிப்ரவரி 21 அன்று தொடங்கப்பட்டது. பொதுவாக ஆப்பிளின் பொருள்கள் விற்பனைக்கு வந்தால் முதல் அரைமணி அல்லது ஒருமணி நேரத்திற்குள்ளாகவே விற்றுத் தீர்ந்துவிடும். எடுத்துக்காட்டாகச் செப்டம்பர் 2024 இல், ஐபோன் 16 புரோ மேக்ஸ் வெளியான 18 நிமிடங்களுக்குள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டன.

ஐபோன் 16இ இணையத்தில் இன்னும் முன்பதிவிற்குக் கிடைக்கிறது. இதன் விற்பனை குறைவாகவே உள்ளதாகக் தெரிகிறது.‌ அதிக விற்பனையை எதிர்பார்த்து, ஆப்பிள் அதிக அளவிலான திறன்பேசிகளையும் உற்பத்தி செய்திருந்திருக்கலாம் எனச் சிலர் ஊகிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆப்பிள் விரும்பிகளின் ஐபோன் 16இ தொடர்பான கொண்டாட்டங்களும் குறைவாகவே இருக்கிறது. முன்பதிவு செய்த பயனர்களுக்குப் பிப்ரவரி 28 முதல் திறன்பேசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

  • மு. இசக்கிமுத்து

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now