தூங்கவைக்கும் ஒலிப்பெட்டி

தூக்கமின்றி அவதிப்படுவோர், சிறிய அளவு ஒலிபெட்டிகள் (Speakers) மூலம் உதவி பெற முடியும். தூக்கம் ஓரளவுக்கு சீரடைந்துள்ளதாகப் பயன்படுத்தியோர் தெரிவிக்கின்றனர்.

மார்ச் ஒன்பதாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தூக்க விழிப்புணர்வு வாரம் என்பதைச் செய்திகளில் பார்த்திருப்போம். உடலும், மூளையும் சோர்வடைந்தால், சரியாக வேலை செய்வதில்லை. தேவையான அளவு ஓய்வு கொடுத்துக் கிடைக்கும் புத்துணர்ச்சியால் மட்டுமே நம்மால் கவனத்துடன் பணியாற்ற முடியும்.

sleeping

தூக்கமின்மை மிகச் சிலருக்கே உரிய சிக்கலாக இருந்தது ஒருகாலம். தற்காலத்தில் திறன்கருவிகள் வருகை கூடியிருப்பதால் கிட்டத்தட்ட அனைவருமே தூக்கமின்மையை எதிர்கொள்கிறோம். கையடக்கக் கருவியாக இருப்பதால் படுக்கையில் படுத்துக்கொண்டே திறன்பேசியைப் பார்க்கும் வழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. வெளிச்சம் குறைவாக வைத்துக் காட்சிகளைப் பார்த்தாலும் கூட தூக்கம் தடைபடும். தூங்கினால் அடிக்கடி விழிப்புத்தட்டும். 68 விழுக்காடு மக்கள் போதுமான அளவுக்குக்குத் தூங்குவதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

திறன்பேசி உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் படுக்கை அறைக்கு வெளியே வைப்பதன் மூலம் மட்டுமே பலருடைய தூக்கச் சிக்கல் சரியாகிவிட வாய்ப்புள்ளது. எனினும் சிலருக்கு அதைவிடக் கூடுதலாக உதவி தேவைப்படும். சிறு ஒலி கேட்டாலும் விழிக்கச் சொல்லும் மூளை வாய்த்தவர்களும் இருக்கிறார்கள். அறையில் மின்விசிறி, குளிர்சாதனக் கருவியை ஓடவிட்டுத் தூக்குவதன் மூலம் உருவாகும் குறைந்த அளவு ஒலியானது இந்தச் சிக்கலைத் தீர்க்கச் சிலருக்குப் பயன்படும். அறையில் மின்விசிறியின் ஒலி இருந்துகொண்டே இருந்தால் அதைவிடப் பெரிய ஒலி கேட்டால் மட்டுமே விழிப்புதட்டும்.

கண்களை உறுத்தும் காட்சிகளை இரவில் பார்ப்பதற்குப் பதில், வலைபரப்பு (Podcast) கேட்கும் வழக்கத்தையும் சிலர் வைத்திருக்கிறார்கள். புத்தகங்களைப் படித்துக்காட்டுதல், கதை சொல்லுதல், தகவல்களை, ஆய்வுகளைப் பேசுதல் எனப் பலவகை வலைபரப்பு சேவைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுக்கொண்டே கண்ணைமூடிப் படுத்திருந்தால் இவர்களுக்குத் தூக்கம் வரும். சில மணிநேரத்தில் விழிப்பு வந்தால் மீண்டும் ஒலிக்கவிட்டுத் தூங்க முயலலாம். ஆனால் இப்படி எழுந்து திறன்பேசித் திரையைப் பார்த்து ஒலிக்கவிட்டுத் தூங்க முயன்றால் அந்த வேலையை செய்து முடிப்பதற்குள் அரைகுறையாக வந்த விழிப்புநிலை முற்றிலும் விழித்துக்கொள்ளும்படியாகும்.

இதைத் தவிர்க்கவும் கருவிகள் உள்ளன. ஆப்பிள் இன்சைடர் தளத்தில் பயனர் ஒருவர் குறிப்பிட்ட ஒலிப்பெட்டியைப் பற்றிய தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குட்டி ஒலிப்பெட்டி அது. ஜாபிஸ் பீஸ் ஸ்பீக்கர் எனும் அக்கருவியை ஐபோன் உடன் இணைக்க முடியும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தானாகவே நின்றுபோக வேண்டிய நேரத்தையும் முன்கூட்டியே அமைத்துவிடலாம். இதெல்லாமே அரைத்தூக்கத்தில் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலமே செய்யலாம் என்பதே இதன் சிறப்பு. இதன் மூலம் நீண்ட நேரத் தூக்கம் கிடைப்பதுடன், தகவல்களை மூளைக்குள் ஏற்றிவிடும் நல்லதும் நடக்கிறது.

சந்தையில் இதுபோன்ற நிறைய ஒலிப்பெட்டிகள் உள்ளன. தலையணை உடன் இணைந்த ஒலிப்பெட்டிகள், மேசையில் வைக்கும் சிறிய அளவிலான ஒலிப்பெட்டிகள் எனப் பலத் தீர்வுகள் உள்ளன. தூக்கமின்மை என்ற நிலைக்குச் சென்றுவிடாமல் இருக்க, திறன்கருவிகளின் பயன்பாட்டைக் குறைப்பதும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் அவசியமானது. எளிய உடற்பயிற்சிகள், மனத்தை ஒருநிலைப்படுத்தும் முயற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் போன்றவையும் உதவும். தூக்கமின்மை வந்துவிட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று முடிவெடுப்பதும் செயல்படுத்துவதும் நல்லது.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now