அர்வி – அரபுத் தமிழ்

எழுத்துருக் கலைஞர் தாரிக் அஸீஸ் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அரபுத் தமிழ் பற்றிப் பதிவிட்டிருந்தார். செல்லினம் பயனர்களுக்காக அத்தகவலை இங்கே பதிவிடுகிறோம்.

தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளுடன் அரபு நாடுகளுக்கு இருந்த வணிகத் தொடர்பு பற்றி நாம் அறிவோம். தமிழ் மொழியுடன் அரபு மொழியும் இணைந்து உருவான அர்வி மொழி பற்றி நம்மில் சிலருக்கே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறையினர் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழை எழுதும் தங்கிலிஷ் வழக்கு அதிகரிக்கிறது. அதைப்போல அக்காலத்தில் அரபு எழுத்துகளைக் கொண்டு தமிழை எழுதுவார்கள். அதுவே அர்வி எனப்படுகிறது.

Arwi

எழுத்துகள் அரபு மொழியாக இருந்தாலும் உச்சரிப்பது தமிழ் சொற்களைத்தாம். இப்படி அரபு வரிவடிவத்தைப் பயன்படுத்தி மலாய் மொழியை எழுதுவதை ஜாவி என்று அழைப்பார்கள். அதைப் போலவே Arwi – அர்வி – அரபுத் தமிழ்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், இலங்கையிலும் பயன்பாட்டில் இருந்தது இவ்வரிவடிவம். பிபிசி செய்தியொன்று, ஆங்கிலேயர்களிடமிருந்து தங்கள் வணிக ரகசியத்தைக் காப்பாற்றக் கூட இந்த மொழி பயன்பட்டதாகச் சொல்கிறது. தற்காலத்தில் இது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. தமிழ்நாட்டின் காயல்பட்டினம் பகுதியில் இன்றும் அர்வி மொழியில் எழுதும் வழக்கம் இருக்கிறது. காவியங்கள் சிலவும் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தாரிக் அஸீஸ், மவ்லித், தப்சிர், கிதாப் பிரார்த்தனை நூல்களில் அர்வி பயன்படுகிறது என்கிறார். எழுத்துருக் கலைஞரான இவருடைய ஆக்கங்கள் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பெருநிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

காயல்பட்டினத்தில் உருவாகி கொழும்பு வரைக்கும் பரவி இருந்தது அர்வி. பதினோராம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இம்மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு கீழக்கரையில் உள்ளது. 28 அரபு மொழி எழுத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டதோடு, 12 எழுத்துகளை தமிழ் ஒலிக்கு ஏற்றவாறு மாற்றிப் புதிதாக உருவாக்கியுள்ளனர். 18 அரபு எழுத்துகளுக்கு இணையான தமிழ் எழுத்து கிடையாது. போலவே தனித்துவமான 12 தமிழ் உச்சரிப்பு ஒலிகளுக்கு ஏற்ற எழுத்துகள் அரபு மொழியில் கிடையாது. எனவே அரபு எழுத்துகளில் சில புள்ளிகளையும் குறியீடுகளையும் இணைத்து புதிய 12 எழுத்துகளை உருவாக்கியுள்ளனர். எழுதும்போது வலமிருந்து இடமாகவே எழுதப்படுகிறது. இத்தகவல்களைத் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவாக இட்டுள்ளார் தாரிக் அஸீஸ்.

அர்வி தற்போது யூனிகோட் எழுத்துருவாகவும் உள்ளது. பயன்படுத்துவோர் அதிகமானால் அழியாமல் காக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now