நீல பலூன்கள் விடுவிப்பு

செவ்ரன்ஸ் தொலைக்காட்சித் தொடரின் முடிவுப் பகுதியை முன்னிட்டு, இச்சொல்லை உள்ளிட்டுத் தேடினால் கூகுள், நீல பலூன்களைப் பறக்கவிடுகிறது. கூகுள் தேடுபொறி அவ்வப்போது ஈஸ்டர் முட்டைகளை வெளியிடுவதை நாம் அறிவோம். எதையோ தேடப்போனால் அது தொடர்புடைய குட்டிக் குட்டி அசைவுப்படம், விளையாட்டு என்று காண்பித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

Severance

சில விளையாட்டுகள் பயனர் இடையே பலத்த வரவேற்பைப் பெறுவதும் உண்டு. ஒரு சில நாள்களே இருக்கும் இவ்வகை ஈஸ்டர் முட்டைகளை மீண்டும் பார்க்க விரும்புவோருக்காகவும் ஒரு தளம் இருக்கிறது. புகழ் வீச்சுடைய தொலைக்காட்சித் தொடர்கள், வலைத்தளத் தொடர்கள், திரைப்படங்கள் பலவற்றுக்கும் கூகுள் ஈஸ்டர் முட்டைகளை வெளியிட்டிருக்கிறது. மார்வல் சினிமாட்டிக் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் கதாபாத்திரம் கைச்சொடுக்குப் போட்டதும் பூமியில் பாதி மக்கள் காணாமல் போய்விடுவார்கள். அந்தப் படம் வந்தபோது, தானோஸ் கைக் கவசம் போன்ற ஒரு கூகுள் ஈஸ்டர் முட்டையை வெளியிட்டது கூகுள். அதை அழுத்தினால் நம் திரையில் இருக்கும் தேடுபதில்களில் பாதி காணாமல் போய்விடும்.

இதைப்போலவே தற்போது ஆப்பிள் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான செவ்ரன்ஸ்க்கு ஓர் அசைவுப்படத்தை வெளியிட்டுள்ளது கூகுள். இச்சொல்லை இட்டதும் திரையின் கீழே, கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் பார்ட்டி உணர்ச்சிக்குறி காண்பிக்கும். அதைத் தொட்டதும் நீல நிறப் பலூன்கள் திரை முழுவதும் பறக்கத் தொடங்கும். இதை நிறுத்தவும் இந்த அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் இன்னும் இரு வாய்ப்புகளைக் காண்பிக்கும் பொத்தான்களும் திரையில் தோன்றும்.

ஆப்பிள் தொலைக்காட்சியில் இத்தொடர் மக்கள் வரவேற்பைப் பலமாகப் பெற்றுள்ளது. அநேகம் பேர் பார்க்கும் தொடராகவும் இரு்கிறது. இயக்குனரின் முந்தைய பல சாதனைகளை முறியடித்துள்ளது. மற்ற தளங்களிலும் இத்தொடரைப் பார்க்க விரைவில் வாய்பபு ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். இத்தொடரின் இரண்டாவது பாகத்தின் அத்தியாயம் ஒன்றில் மார்க்கிடம் நீல நிறப் பலூன் வழங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. மற்ற சில அத்தியாயங்களிலும் நீல நிறப் பலூன் ஒரு குறியீடாக வந்து போனது. எனவேதான் இப்படி பலூன்களை வைத்தே இரண்டாவது பாகத்தின் முடிவுப் பகுதியை விளம்பரப்படுத்தியுள்ளனர்.

கூகுளும் இதில் இணைந்து கொண்டுள்ளது தொடரின் விளம்பரத்துக்கு வலு சேர்க்கிறது. செவ்ரன்ஸ் பே என்றால் வேலையை விட்டு அனுப்பப்படும் ஊழியரின் துண்டிப்பு ஊதியம் என்று பொருள். என்னென்னவோ காரணங்களைச் சொல்லி நிறுவனம் ஊதியத்தில் பிடித்தம் செய்யும். வேலையை விட்டுப் போகப்போகும் ஒருவர் விவரத்தைத் தேடிப்பார்க்க கூகுளுக்குத்தான் போவார். செவ்ரன்ஸ் என்று மட்டும் இட்டுத் தேடினால் தனக்கு வேலை போவதை ஏன் கூகுள் பலூன் பறக்கவிட்டுக் கொண்டாட வேண்டும் எனக் குழம்பக்கூடும். முதல் பக்கம் மட்டுமின்றி அடுத்த பல பக்கங்களுக்கும் இந்தத் தொடர் பற்றிய தகல்வகளே இருக்கும். அந்தளவுக்கு இச்சொல்லைப் பயன்படுத்தித் தேடியுள்ளனர் என்பதே இதன் பொருள். அதை அங்கீகரிக்கும் விதமாகத்தான் கூகுள் பலூன்களை விடுவிக்கிறது.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now