காதில் விழவேண்டிய தகவல்

நம் காது என்றாலும் நாமே குடைந்து சுத்தம் செய்யாமல் மருத்துவரிடம் போவதே நல்லது. ஆனால் காதொலிப்பானை நாமே சுத்தம் செய்யலாம். அது அவசியமும் கூட. பிக்சல் பட்ஸ் புரோ 2 ரக காதொலிப்பான் கருவிகளைச் சுத்தம் செய்வதற்கான வழிமுறையை வெளியிட்டுள்ளது கூகுள்.

google ear buds

கூகுளின் பிக்சல் பட்ஸ் புரோ 2 காதொலிப்பான்கள் ஆண்டிராய்டு இசைப்பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. ஒலியின் தரம் சிறப்பாக இருப்பதாக தங்கள் கருத்துக்களைப் பயனர்கள் தெரிவித்துவருகின்றனர். எனினும், காதில் உள்ள அழுக்குகள் கொஞ்சம் அதிகமாகவே இதில் படிவதாகப் பயனர்கள் கூறிவந்தனர். தூசி போன்றவை படிவதால் ஒலியின் தரம் குறையும் நிலை ஏற்படுகிறது. அதோடு வெளிப்புறத்தில் உள்ள சிறிய திறப்பு (மெஷ் பகுதி) போன்ற பகுதியில் இது போன்ற அழுக்கு சேர்ந்தால், அது உங்கள் இசையின் தரத்தைக் குறைக்கும் எனக் கூறியிருக்கிறது கூகுள்.

எனவே கூகுள் இந்த காதொலிப்பானை எப்படி சுத்தம் செய்ய வேண்டுமென விளக்கமான பதிவு ஒன்றைத் தனது தளத்தில் பதிவிட்டுள்ளது. இதைச் செய்வதற்கு நான்கு எளிமையான பொருள்கள் இருந்தால் போதும். ஒரு காகிதத் துண்டு, ஒரு மென்மையான பல்துலக்கும் தூரிகை, மைக்கேலர் நீர் (micellar water), சாதாரண நீர். அவ்வளவுதான்‌ . இப்போது சுத்தம் செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சாதாரண நீரையும் மற்றொன்றில் மைக்கேலர் நீரையும் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். பல் துலக்கியை மைக்கேலர் நீரில் நன்றாக நனைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் காதொலிப்பானை ஒரு கையில் பிடித்து, 15 விநாடிகளுக்கு ஆழமான வட்ட இயக்கங்களில் மெஷ் பகுதியில் சுத்தம் செய்யுங்கள். இதனைக் கொஞ்சம் பொறுமையாகவே செய்தல் நல்லது. அதனை உலர வைக்க வேண்டுமல்லவா, ஒரு காகிதத்துண்டை எடுத்து, நீங்கள் துடைத்த பகுதிகளில் ஒற்றி எடுத்தால் அது உலர்ந்துவிடும். மீண்டும் ஒரு முறை பல் துலக்கியை மைக்கேலர் நீரில் நனைத்து இதே போல் துடைத்து, உலர்த்திக்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டமாக உங்கள் பல் துலக்கியை மைக்கேலர் நீரில் நனைத்து, பின்னர் சாதாரண தண்ணீரில் நனைக்கவும். பல் துலக்கி நன்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ளதிலேயே முக்கியமான குறிப்பு இது. அழுக்கைக் கொண்டு அழுக்கை நீக்க முடியாதென்கிற வாழ்வியல் தத்துவத்தை சிந்தித்துக்கொண்டே சுத்தம் செய்வதைத் தொடருங்கள். அடுத்து 15 விநாடிகளுக்குக் கொஞ்சம் அழுத்தமான வட்ட இயக்கங்களுடன் மெஷ் பகுதியைச் சுத்தம் செய்யுங்கள்.

இவை அனைத்தையும் முடித்துவிட்டு உங்கள் காதொலிப்பானைக் குறைந்தபட்சம் 2 மணிநேரம் காற்றில் உலர வைக்கவும். பயன்படுத்துவதற்கு முன்பு அவை முற்றிலும் உலர்ந்ததா என்பதை உறுதிப்படுத்தவும். காதொலிப்பானை ஒரு காகிதத் துண்டைப் பயன்படுத்தி மெதுவாகத் துடைப்பதன் மூலம் எங்கேனும் உலராமல் ஈரம் எஞ்சியிருக்கிறதா எனப் பார்க்கலாம். இருந்தாலும் துடைக்கும்போது போய்விடும்.

சுத்தம் செய்யும்போது காதொலிப்பானை மின்னேற்றம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கூகுள் வழங்கியிருக்கும் அதிகாரப்பூர்வ வழிகாட்டும் நெறிமுறை என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டாம். சலவைக்காரங்கள், தெளிப்பான்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைப் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இவை காதொலிப்பானின் உட்கூறுகளைச் சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகக் கூகுள் கூறியுள்ளது.

காதொலிப்பானின் ஒலியைத் தெளிவாகக் கேட்க முடியாமல், துன்பப்படும் உங்கள் நண்பர்களின் காதில் இந்தத் தகவலைப் போட்டு வையுங்கள்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now