தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

கணினித் தட்டெழுத்து உள்ளிடு முறைக்கு வரும் முன்பு கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொள்வோம். தட்டெழுதும் முறையின் வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்ப்பது நம் புரிதலைக்கூட்டும். கல்வெட்டு, பனையோலை என எதில் எழுதுகிறோமோ அதற்குத் தக்க, தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தமிழி வடிவத்துக்கும் இப்போதுள்ள தமிழ் எழுத்து வடிவுக்கும் பல நூற்றாண்டு கால இடைவெளியிருக்கிறது. 

tamil typewriter

தமிழை அச்சிட ஆரம்பித்த பிறகு எழுத்து மாற்றத்துக்கான தேவை அதிகமானது. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமாக நடைபெற்ற எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைய வடிவத்துக்கு முக்கியமான காரணமாகின்றன. வீரமாமுனிவர், சீகன்பால்கு, ஜி.பு.போப், மு.சாமிநாத மாதவராயர், குமரன் இதழின் ஆசிரியர் முருகப்பா, பெரியார் ஈ.வே.ரா. போன்ற பலர் இதற்குக் காரணமாக இருந்துள்ளனர்.

யானை தூக்கிவைத்திருக்கும் துதிக்கை மாதிரி வடிவத்தில் இருந்த ஐகார மெய்யெழுத்துகள் னை, லை என மாற வலியுறுத்தப்பட்டன. ரகர எழுத்தையும் நெடில் குறியாகிய துணைக்காலையும் வேறுபடுத்த, ரகரத்திற்குக் கீழே கோடிட்டனர். இப்படிப் பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. பின்னர் தமிழ் தட்டச்சு இயந்திரத்துக்கான தேவையும் வந்தது. அதை உருவாக்கியவர் ஆர்.முத்தையா. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். தன் பதின்ம வயதில் மலேசியா (மலாயா) சென்று பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றினார். 1930வரை அங்கே பணியில் இருந்த காலகட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். 

ஆங்கிலத்துக்காக உருவான தட்டச்சு இயந்திரத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கை விசைகளில், 247 தமிழ் எழுத்துகளைத் தட்டெழுதும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைத்து உருவாக்கினார். மெய்யெழுத்தின் புள்ளி, இகர, ஈகாரக் கொக்கி, ஐகாரத் துணை எழுத்து போன்றவற்றை பிரித்து அதற்கென ஓர் இடம் கொடுத்தாலே பாதி எழுத்துகள் குறைந்துவிடுமல்லவா. க, ங, ச வரிசை எழுத்துகள் உடன் தனியாக ஒரு விசையில் வைத்திருக்கும் புள்ளி, இகர, ஈகார விசையைச் சேர்த்து அடித்தால் க் வரிசை, கி வரிசை, கீ வரிசை எழுத்துகள் எல்லாமே அடித்துவிடலாம். அதில் இயந்திரத்தின் இயல்பை ஒட்டி ஒரு சிக்கல் எழுந்தது.

தட்டச்சு இயந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு விசையில் இருக்கும். ஒன்றைத் தட்டினால் அதைத் தாளில் அச்சடித்துவிட்டு தன் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும். ஓர் எழுத்தைப் பதிந்துகொண்டு, காகிதத்தாள் கொஞ்சம் நகர்ந்து இன்னொரு எழுத்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். எழுத்து வர, வர இப்படி நகர்ந்து கொண்டே போவதுதான் தட்டச்சு இயந்திரத்தின் அடிப்படை நுட்பம். க் எழுத்தில் க தனியாக ் புள்ளி தனியாக ஒவ்வொரு விசையில் வைத்து இடப் பிரச்சினையைத் தீர்த்தாயிற்று. ஆனால் ஒரு விசையை அடித்ததும் தாள் நகர்ந்துவிட்டால் க எழுத்துக்குப் பக்கத்தில் புள்ளி வரும். இந்தச் சிக்கல், நகரா விசை (dead key) என்றொரு நுட்பத்தை அறிமுகப்படுத்தித் தீர்த்துவைக்கப்பட்டது.

மெய் எழுத்தை அடிப்பதாக இருந்தால் க விசையை முதலில் தட்டக்கூடாது. அதைத் தட்டினால் தட்டச்சு இயந்திரம் அதை அச்சிட்டதும் அடுத்த இடத்துக்குப் போய்விடும். முதலில் மெய்யெழுத்துப் புள்ளியைத்தான் தட்ட வேண்டும். புள்ளி, நகரா விசை என்பதால் தாளில் உச்சிப் புள்ளி அச்சாகி, தாள் நகராமல் அங்கேயே இருக்கும். அடுத்து க விசையைத் தட்டினால் புள்ளிக்குக் கீழே போய் க உட்கார்ந்து கொள்ளும். கி, கீ, பு, பூ போன்ற எழுத்துகளும் இவ்விதமே. கூட்டத்தோடு சேராமல், கூ போல கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் எழுத்துகளைத் தனி விசையாகவே வைத்திருந்தனர். ஆங்கிலத்தைப் போலவே இரு கைகளையும் பயன்படுத்தித் தட்டெழுதும் வகையில் விசைகள் அமைந்திருந்தது தனிச்சிறப்பு. 

பதிப்பகங்கள்தாம் அச்சிடும் என்ற நிலையை தட்டச்சு இயந்திரம் மாற்றியது. சாதாரண மனிதர்களும் தட்டச்சு செய்து ஆவணங்கள் உருவாக்க முடிந்தது. தட்டச்சு செய்தே வெளியிடும்படியான செய்தி இதழ்களும், நூல்களும் உருவாயின. அடுத்தது கணினிக் காலம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now