தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டச்சு இயந்திரங்களுக்கு அடுத்து வந்த கணினி யுகத்தில், தட்டச்சு நுட்பத்தை அப்படியே கணினி விசைப்பலகையிலும் பின்பற்றத் தொடங்கினோம். புள்ளியையோ, இகரக் கொக்கியையோ தட்டினால் கணினி மென்பொருள் அதை வாங்கி வைத்துக்கொண்டு சும்மாவே இருக்கும். அதன் பின்னர் க போன்ற மெய்யெழுத்துகளைத் தட்டினால் லபக்கென்று அதையும் பிடித்து முன்னரே வாங்கி வைத்த புள்ளியோடு சேர்த்து க் என்று காண்பித்துவிடும். எழுத்துகளைச் சேர்க்கும் இந்தப் பணியைக் கணினி உள்ளிருக்கும் மென்பொருள் செய்தது. இது பலருக்குக் குழப்பமாக இருந்தது. சிலருக்கு வேடிக்கையாகவும் இருந்தது.

முன்னரே தமிழ் தட்டச்சு பயின்று நகராவிசையைப் பழகியிருந்தோர், அந்த விசை நகராமல் இருக்க வேண்டியதின் அவசியத்தை கண்ணெதிரே கண்டதினால் அதன் பயனை அறிவார்கள். ஆனால் கணினியில் தட்டச்சு செய்வோருக்கு அந்த வாய்ப்பு இல்லையென்பதால் குழப்பம் உண்டானது. எழுதும் போது யாரும் புள்ளியையோ, கொக்கியையோ எழுதிவிட்டுப் பின்னர் உயிர்மெய் எழுத்தை எழுதுவதில்லை. க எழுதிய பிறகே இகரக் கொக்கியை எழுதி கி என்றாகிறது. தட்டெழுதும்போது மட்டும் ஏன் மாற்றிச் செய்யவேண்டும்? எனவே எழுதும் முறைப்படியே மெய்யெழுத்தினை முதலில் எழுதிப் பின்னர் தேவைக்கேற்ப புள்ளி, கொக்கி தட்டும் முறை வந்தது. புதிய டைப்ரைட்டர் முறை என்று இதற்குப் பெயரிட்டார்கள். தட்டச்சு இயந்திரமே பழையதாகிவிட்ட இக்காலத்தில் புதிய என்ற சொல்லை நீக்கிவிட்டார்கள்.

இதில் எழுத்துரு பற்றிய ஒரு துணைக்கதை இருக்கிறது. விவரமாக இல்லையென்றாலும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

கணினியில் தமிழ் என்பது தமிழர்களுடைய பெருங்கனவு. கணினியோடு புழங்கிய தமிழர்கள் பலரும் தன்னால் இயன்ற வகையில் இதற்கு முயன்றார்கள். அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு கணினிப் பயன்பாடு முதலில் வாய்த்ததால் அவர்களே இதில் முன்னணியில் இருந்தனர். தமிழ்நாடுவாழ் தமிழர்களும் பின்தங்கிவிடாமல் போட்டி போட்டுத் தமிழை வளர்த்தனர். இப்படி ஆளாளுக்குத் தமிழைத் தாங்கிப் பிடித்ததில் அவரவருக்கு வசதியான முறையைப் பின்பற்றி எழுத்துருக்களையும், உள்ளிடு முறைகளையும் ஏகப்பட்டது உருவாக்கினர்.

தமிழ் தட்டச்சு முறையானது asdfgf என்கிற இடத்தில் யளனகபக என்பதாக இருக்கும். இதைப் பலர் பரவலாக உள்ளிடு முறையாகப் பயன்படுத்தினர். சிலர் a இடத்தில் அ, A இடத்தில் ஆ வைத்து உள்ளிடு முறையை உருவாக்கினர். வேறு சிலர் முதல் வரி முழுக்க உயிர்மெய், இரண்டாவது வரி முழுக்க உயிர் எழுத்து என்று வைத்து உள்ளிடு முறையை உருவாக்கினர். ஷிப்ட் விசையை அழுத்திப் பிடிப்பதன் மூலம் இன்னும் சில விசைகளைப் பெறுவோம். 1, 2 எண்களுக்கு இருக்கும் விசைகளைப் பயன்படுத்தவே மாட்டேன் என முடிவெடுத்து அந்த விசைகளிலும் சில தமிழ் எழுத்துகளை நிரப்பலாம். எழுத்துருவில் ஆங்கில எழுத்துகளுக்கான இடத்தையும் தமிழுக்கே கொடுத்தும் தமிழ் எழுத்துருவை உருவாக்கலாம். இதற்கு மென்பொருள் அறிவு கூடத் தேவையில்லை. அடிப்படையான கணினி பயன்பாட்டு அறிவிருந்தால் யார் வேண்டுமானாலும் எழுத்துரு உருவாக்கலாம். அதற்கான உள்ளிடு முறையை அவர்களே தீர்மானிக்கலாம். Y எழுத்து இருக்குமிடத்தில்தான் ழ இருக்குமென உருவாக்கியவர் தீர்மானித்தால் அப்படித்தான் இருக்கும். அந்த எழுத்துருவை நாம் பயன்படுத்தினால் Y தட்டினால்தான் ழ வரும். எழுத்துரு உருவாக்கத் தேவையான விதிகளைப் பின்பற்றாமல் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு சேமிக்கப்பட்ட (Hacked encoding / ASCII encoding) இம்மாதிரி எழுத்துருக்கள் பல்கிப் பெருகின.

உருவாக்கியவர் மட்டுமே நினைவில் வைத்துத் தட்டச்சு செய்யும் ரகசியக் குறியீடு போல குறுகிய வட்டத்தில் நிறைய உள்ளிடு முறைகள் வந்தன. ரொம்பச் சிக்கலானவை குறுகிய காலத்தில் அழிந்தன. எளிதானவை பயன்பாட்டில் தொடர்ந்தன. 

உள்ளிடு முறை அல்லாது கீபோர்ட் லேஅவுட் வகையில் அமைந்த பாமினி, மயிலை போன்றவவை மென்பொருள் வைத்து எதையும் மாற்றவில்லை. எழுத்துருவில் நேரடியாக மாற்றம் செய்து உருவாக்கப்பட்டவை. இவை பெருந்திரளான மக்களால் பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் பாமினி இன்றும் கூட பயன்பாட்டில் இருக்கிறது. 
இப்படி உருவாக்கியவர்கள் எண்ணத்தில் குறையேதும் இல்லை. தமிழுக்கு நிறைய எழுத்துருக்கள் வேண்டும் என்கிற ஆர்வத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட பணிகள் இவை. ஆனால் எல்லாரும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துப் பயன்படுத்த முடியாது. எனவே உள்ளிடு முறையைத் தரப்படுத்தக் கோரிக்கை எழுந்தது.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now