தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

இத்தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, எழுத்துகளை உள்ளீடு செய்யும் விதமும் (input method), அந்த எழுத்துகள் சேமிக்கப்படும் முறையும் (encoding) வெவ்வேறு விஷயங்கள். இரண்டுக்குமே தகுதரம் (standardization) தேவைப்பட்டது. 

எழுத்துருக்களை உருவாக்கும் முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் உருவான ஏராளமான எழுத்துருக்களை மக்கள் பெரியளவில் பயன்படுத்தினர். ஒன்றிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்றும் மென்பொருள்களும் நிறைய உருவாகின. இதெல்லாம் யூனிக்கோடுக்கு முன்னர் நடந்த கதை. ஒரு கணினியில் வேலை செய்யும் எழுத்துரு இன்னொரு கணினியில் வேலை செய்யவேண்டுமானால் கையோடு எழுத்துருவையும் எடுத்துக்கொண்டு அலைந்த காலம் அது. உள்ளிடு முறையும் அந்த எழுத்துருவுக்கானதாகவே இருக்கும். திருத்தம் மேற்கொள்ள அந்த எழுத்துருவுக்கான உள்ளிடு முறையை அறிந்திருக்கவேண்டும். எழுத்துரு சேமிக்கப்படுவதில் ஏற்பட்ட படிப்படியான மாற்றங்கள் தனிக்கதை. இது உள்ளிடு முறை பற்றிய கட்டுரைத் தொடரல்லவா. எனவே நேராக யூனிகோடு பயன்பாடு பரவலான காலத்துக்கு வந்துவிடலாம்.

Murasu Anjal Tamil99

யூனிகோடு வந்தபிறகு எழுத்துகளை எங்கே சேமிப்பது என்பதில் ஒரு நிலையான தகுதரம் நிலைத்துவிட்டது. எந்த விதத்தில் தட்டெழுதி உள்ளிட்டாலும் சேமிக்கப்படும் விதம் ஒன்றே. உலகளாவிய தகுதரம் என்பதால் அதை எல்லாருமே பின்பற்றத் தொடங்கிவிட்டோம். மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் இதை இனிமேல் மாற்ற முடியாது என்பதே நிதர்சனம். எனவே யூனிகோடு முறையை ஆதரிக்கும் வகையிலான உள்ளிடு வழிமுறைகளை அனைவரும் உருவாக்கினர்.

இந்திய அரசு ஆய்வின் அடிப்படையில், இன்ஸ்ரிப்ட் உருவானது. நல்ல யோசனைதான் அது. அதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், நமக்கு ஓர் இந்திய மொழி தெரியுமானால் அதை வைத்து மற்றெல்லா இந்திய மொழிகளையும் எளிதாகத் தட்டெழுதிவிட முடியும். தமிழைத் தவிர. 

பஞ்சாபி தெரிந்த ஒருவர் இன்ஸ்கிரிப்ட் உள்ளிடு முறையைக் கற்றுக்கொள்வதன் மூலம் இந்தி தெரியாமலே இந்தியை தட்டெழுதலாம். மராத்தி, குஜராத்தி போன்ற மற்றெல்லா இந்திய மொழிகளையும் அவரால் தட்டெழுத இயலும். ஆனால் அவர், தமிழ் தெரியாமல் தமிழில் தட்டெழுதுவது எளிதல்ல.

இன்ஸ்க்ரிப்ட் பயன்படுத்தி தட்டெழுதுவது தமிழருக்கும் எளிதாக இல்லை. மற்ற இந்திய மொழி தெரியாத தமிழரால் இன்ஸ்க்ரிப்ட் முறையை வைத்து மற்ற மொழிகளில் தட்டெழுதவும் இயலாது. 

தமிழில் நான்கு வகை க, ச எழுத்துகள் இல்லை. மற்ற இந்திய மொழிகளுக்குப் பதினெட்டுக்கும் மேற்பட்ட உயிரெழத்துகள் உண்டு. தமிழுக்குப் பன்னிரண்டு உயிரெழுத்துகளே. கூட்டெழுத்துகள் இல்லை. தமிழ் தனித்துவமானது என்பதே இன்ஸ்கிரிப்ட் இங்கு வரவேற்பு பெறாமல் போக அடிப்படைக் காரணம். தமிழருக்கும் பயனில்லை, தமிழில் தட்டெழுத விரும்பும் தமிழர் அல்லாதவர்க்கும் பயனில்லை என்கிற அளவிலேயே இன்ஸ்கிரிப்ட் நின்றுவிட்டது. 

இந்திய அரசின் பரிந்துரை என்பதால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் இன்ஸ்கிரிப்ட் உள்ளிடு முறையை இயல்புநிலை உள்ளிடு முறையாகக் கொடுத்தன. கொள்வாரில்லை. (இக்கட்டுரைக்காக வெவ்வேறு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பலரிடம் பேசினோம். எவ்வளவு தேடியும் இன்ஸ்கிரிப்ட் பயன்படுத்தும் ஒருவரைக்கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை.)

அவர்களுக்கு வசதி என்பதற்காக, நாம் ஏன் இவ்வளவு சிக்கலான உள்ளிடு முறையை மனப்பாடம் செய்து தமிழைத் தட்டெழுத வேண்டும் என்ற கேள்வி உருவானது. நியாயமான கேள்வியும் கூட. கேட்பதோடு நின்று விடாமல் ஷிப்ட் விசைகூட பயன்படுத்தாமல் எளிதாகத் தமிழை உள்ளிடு செய்யும் முறையையும் தமிழ்க் கணினி வல்லுநர்கள் உருவாக்கிக் காண்பித்தார்கள்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now