பதிப்புரிமையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் விலக்கு கோரி கடிதம் எழுதியுள்ளது ஓப்பன்ஏஐ. அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில் சீனா நம்மை இத்துறையில் முந்தாமல் இருக்க இந்த அனுமதி தேவை என்கிறது.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழிமாதிரி, நாம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பளிச் பளிச்சென்று பதில் தருகிறது. தொடக்க காலத்தில் முன்பே தரவுகள் அளித்துப் பயிற்சி கொடுக்கப்பட்ட மொழிமாதிரியாகத்தான் அறிமுகமானது. மக்கள் கொடுத்த பேராதரவினால் மேம்பாடு கண்டது. தான் கொடுக்கும் பதில்களுக்கான தரவுகளை இணையம் முழுவதில் இருந்தும் சேகரிக்கிறது. அதை அப்படியே மானே, தேனே சேர்த்து நமக்கேற்றவாறு கொடுக்கிறது.
அண்மையில் ஜிப்லி வகை ஓவியம் போலவே வரைந்து கொடுத்துப் பரவலாக கண்டனம் எழுந்ததும் நினைவிருக்கும். நாங்கள் எழுதிப்போட்டிருக்கும் செய்திகளை எடுக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் சிலவற்றின் வழக்குகளையும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தளவில் காப்புரிமை, பதிப்புரிமை விதிகள் ஓரளவுக்கு வலுவாகவும் தெளிவாகவும் உள்ளன. இதை எல்லாம் தளர்த்த வேண்டும் என்கிறது ஓப்பன்ஏஐ.
இதற்குத் தலையாய காரணமாக ஓப்பன்ஏஐ சுட்டுவது சீனாவை. அவர்களுடைய செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகள் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் எல்லாத் தரவுகளையும் எடுத்துப் பயனர்களுக்குக் கொடுக்கின்றனவாம். அது தவறென்பது போலத்தான் கடிதம் இருக்கிறது. ஆனால் அந்தத் தவறை நாங்களும் செய்ய அனுமதி வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் இத்துறையில் அமெரிக்காவை சீனா முந்திவிடும் என்றும் எச்சரிக்கிறது ஓப்பன்ஏஐ. இதைத் தடுக்க எழுநூற்றுச் சொச்சம் பதிப்புரிமைச் சட்டங்களில் இருந்து உடனே விலக்கு கொடுங்கள் என்கிறது கடிதம்.
போகிற போக்கில் ஆப்பிள் நிறுவனத்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்கள். மக்களாட்சிக்கும் விதிகளுக்கும் மதிப்பு கொடுக்காத சீனா போன்ற நாடுகளில் இயங்கும் நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பைத் துண்டிக்கவேண்டுமாம். ஆப்பிள், அலிபாபா கூட்டினை முறிக்க இந்தப் பரிந்துரை. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் ஆப்பிள் நுண்ணறிவு மேம்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதுதான் தங்கள் களம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
நாட்டுப்பற்றையும் வியாபாரத்தையும் ஒன்றாக இணைத்து ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தரவுகளையும் தனியாருக்குத் திறந்துவிட்டு செயற்கை நுண்ணறிவைப் புகுத்த வேண்டும் என்பதுதான். அரசாங்கத் தரவுகளை எண்ணிமத் தரவுகளாக (Digital Data) மாற்ற தனியார் நிறுவனங்களைத் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக இதுபற்றி பேச்சுகள் எழுந்துள்ளன.
தரவுகளின் முக்கியத்துவம் அறிந்து இரு நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கையில் இந்தியாவும் இதுபற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி, “இந்தியாவிடம் உற்பத்தித் தரவும் இல்லை, நுகர்வுத் தரவும் இல்லை” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ஓப்பன்ஏஐ எழுதியுள்ள கடிதம் தரவுகளின் உலகில் ஒவ்வொரு நாடும் மேம்படவேண்டியதை உணர்த்துவதாக இருக்கிறது.
தொடர்புடைய இணைப்புகள்
1) கிப்லி – ஜிப்லி – ஜிபுரி – ஜிப்டி
2) ஆப்பிள் நுண்ணறிவு
3) ராகுல் காந்தி பேச்சு
4) ஓப்பன்ஏஐ கடிதம்
