கணினிக்கு மரியாதை

நம்மில் சிலர் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகளிடம் ஒரு கட்டளையை அளிக்கும்போது ‘தயவு செய்து’ என்றும், சொன்னது செய்யப்பட்டதும் ‘நன்றி’ என்றும் சொல்லி உரையாடும் வழக்கத்தைக் கொண்டிருப்போம். அப்படி நாம் மனிதாபிமான அடிப்படையில் தரும் மரியாதைக்கு, ஓபன்ஏஐ நிறுவனம் மிகப்பெரிய செலவு செய்கிறது என்கிறார், அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மன்.

ChatGPT

சமூக வலைதளங்களில் மீம் ஒன்று அண்மையில் பரவி பிரபலமானது. அதில், எதிர்காலத்தில் இயந்திரங்கள் உலகை மொத்தமும் ஆக்கிரமிக்கும் நிலை உருவாகி, யாரெல்லாம் செயற்கை நுண்ணறிவுக்கு ‘நன்றி’ சொன்னார்களோ அவர்களை மட்டும் கணினிகள் மரியாதையோடு நடத்துவதுபோல் சித்திரிக்கப்பட்டது. பலரை இந்த மீம் உண்மையாகவே பாதித்திருக்கும் போலும். அதன் தாக்கத்தில் எழுந்த கேள்வி ஒன்றின் விடையாகவே, இப்படி ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.

ஏன் மரியாதை?

இணையத்தில் கேட்பதையெல்லாம் கொடுக்கும் அதிசயப் பெட்டகமான தேடுபொறியின் அடுத்த பரிணாமமாக செயற்கை நுண்ணறிவு திகழ்கிறது. கட்டளைகளைக் கருத்தாய்ச் செய்து முடிக்கிறது இந்தச் செயற்கை நுண்ணறிவு. அதனாலேயே இதனுடன் மக்கள் நட்புணர்வோடு நடந்து கொள்கின்றனர். ‘தயவு செய்து’, ‘நன்றி’ போன்ற மரியாதைச் சொற்களோடு உரையாடுகின்றனர். கேட்பதற்கு இயல்பாகத் தோன்றும் இது, செலவு வைக்கும் பழக்கம் என்கிறார்கள்.

மரியாதை எப்படிச் செலவாகும்? 

அண்மையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மன், மக்கள் சொல்லும் எளிய மரியாதைச் சொற்கள் கூட கணிசமான கணினி வளங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளதால், அந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் செலவாகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து சாட்ஜிபிடி பின்வருமாறு விளக்குகிறது.

அதாவது, சாட்ஜிபிடி பயனர்கள் கேட்கும் கேள்விகளின் ஒவ்வொரு சொல்லையும் டோக்கன்களாகக் கணக்கெடுக்கிறது. அதில் நாம் உள்ளிடும் மரியாதைச் சொற்களுக்கு 1-2 டோக்கன்களைப் பயன்படுத்துகிறது. சாட்ஜிபிடிக்கு அன்றாடம் தரப்படும் நூறு கோடி உள்ளீடுகளில் பத்து விழுக்காடு மரியாதைச் சொற்கள் இடம்பெறுவதாகக் கொண்டாலும் ஆண்டுக்கு ஆயிரம் டாலர் செலவுதான். பொருளற்ற கேள்விகளைக் கேட்டு, பயனற்ற படங்களை உருவாக்கி நாம் வீணடிக்கும் டோக்கன்களுடன் ஒப்பிட்டால் இது ஒரு பொருட்டே அல்ல.

இது நல்லதா? கெட்டதா? 

சாட்ஜிபிடி வசூலிக்கும் கட்டணத்தில் சொற்களின் எண்ணிக்கை முக்கியமானதென்பதால் பயனருக்கு வீணாகப் பணம் செலவாகும். மேலும்,  கூகுளிடம் நாம் இப்படி உரையாடுவதில்லை என்பதால், செயற்கை நுண்ணறிவுக்கு இது தேவையில்லாத மரியாதை என்றும் இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

மறுபுறம், மரியாதைச் சொற்கள் செயற்கை நுண்ணறிவுச் சேவைகளின் பதில்களை மேம்படுத்தும் என்றும், மனித உணர்ச்சிகளையும் வழக்கங்களையும் கணினி அறிந்துகொள்வதற்கு உதவும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 70% பயனர்கள், செயற்கை நுண்ணறிவுடன் மரியாதையாகப் பேசுவது தெரிய வந்துள்ளது. சாம் சொல்வது போல மரியாதைக்குச் செலவான தொகை நல்ல செவவுதான் என்கின்றனர். இவ்விரண்டு கருத்துகளுமே இந்த விவாதத்தை இணையத்தில் சூடு பிடிக்க வைத்துள்ளது.

  • விவேக்பாரதி 

ஓபன்ஏஐ தலைமை நிர்வாகியின் கருத்து

செலவினங்களின் மரியாதை மற்றும் பாதிப்புகள் குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now