சகலகலா சாட்ஜிபிடி

இணைய உலகின் அண்மைக்காலச் செல்லக்குட்டியான சாட்ஜிபிடியில் பல புதிய அம்சங்களை ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே சகலகலா வல்லவனாக இருக்கும் சாட்ஜிபிடியின் அடுத்தடுத்த புதிய அம்சங்களும், அதுகுறித்துப் பரவும் அனுமானங்களும் வியப்பூட்டுகின்றன. 

ChatGPT shopping

மனித வாழ்க்கையைக் கணினிகள் மிக நெருக்கமாக புரிந்து கொண்டு உதவத் தொடங்கிவிட்டன. நண்பனாய், நல்லாசிரியராய் பதவி வகித்துக்கொண்டிருக்கும் இணையதளம், தன் அரியாசனத்தில் அடுத்ததாக செயற்கை நுண்ணறிவை அமரச் செய்திருக்கிறது. அதன் செயல்பாடுகள், நம் பணிகளை நாளுக்கு நாள் இலகுவாக்கி வருகின்றன. கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் தொடங்கி, படம் வரைவது, வரைவுகளை உருவாக்கித் தருவது, கட்டுரைகள், கதைகள் எழுதுவது, பரிந்துரைகள் வழங்குவது என்று செயற்கை நுண்ணறிவின் மொழிமாதிரியான சாட்ஜிபிடி செய்யாத காரியமே இல்லை. அது இப்போது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

எதை வாங்கலாம்? சாட்ஜிபிடி!  

இனி நாம் பொருள்களை வாங்குவதற்கும் சிறந்த பரிந்துரைகளை சாட்ஜிபிடி தந்து உதவப்போகிறது. இணையத்தில் பொதுவாக நாம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொருளைப் பற்றி தேடுபொறிகளில் தேடுவோம். உடனே கூகுளில் விளம்பரப்படுத்தியுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னே வந்து நிற்கும். விளம்பர அடிப்படையில் இந்த உதவியைத் தேடுபொறிகள் செய்துகொண்டிருக்க, விளம்பரமில்லாப் பரிந்துரைகளை சாட்ஜிபிடி வழங்கவுள்ளது. நமக்காக இணையதளத்தைத் துழாவி, எதற்கு எது சிறந்தது என்று எடுத்து வைக்கிறது. தன் பரிந்துரைகள் மட்டுமன்றி, விலையுடன் கூடிய தகவல்கள், மதிப்பீடுகள், வாங்குவதற்கான இணையதள சுட்டிகள் என அனைத்தையும் சாட்ஜிபிடி நமக்கு வழங்கிவிடும். விரும்பிய பொருள்களில் சிறந்ததைப் பெற நாம் மதிப்பீடுகளைத் தேடி அலையத் தேவையில்லை. 

கூடுதல் அம்சமாக பயனர்களின் தனிப்பயனாக்கத்தை சாட்ஜிபிடி நினைவில் வைத்துக் கொள்வதால் பிடித்த நிறம், பிடித்த வகை போன்றவற்றுக்குப் பரிந்துரைகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். உலகப் பயனர்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தைக் கணக்கு தொடங்காமலும் யன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறுகிறது. 

வாட்சாப்-ல் பேசலாம் சாட்ஜிபிடி!

சாட்ஜிபிடியில் கொண்டு வரப்பட்டிருக்கும் முதல் அம்சமே பயனர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இந்நிலையில், அடுத்தகட்டமாக அதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்சாப் செயலிக்குள்ளும் கொண்டு வந்துவிட்டது ஓபப்ன்ஏஐ. சாட்ஜிபிடிக்கு என்று தனித்துவமான அழைப்பிலக்கம் உள்ளது. (+1-800-242-8478) அதைச் சேமித்து வைத்துக்கொண்டு, அன்றாட செய்திகள் முதல் கிரிக்கெட் ஸ்கோர் நிலவரங்கள் வரை எதை வேண்டுமானாலும் உடனுக்குடன் கேட்டுப் பெறலாம். ஒரு படத்தை அனுப்பி விளக்கம் கேட்பது, குரல் வழிப் பதிவாகத் தகவல்களைக் கேட்டுப் பெறுதல் என அனைத்திற்கும் இந்தப் புதிய அம்சம் இடமளிக்கிறது. தனிச் செயலியாக உள்ள சாட்ஜிபிடியை வாட்சாப்புக்குள் கொண்டு வந்தது, மக்கள் பயன்பாட்டில் புதிய அணுக்கத்தை உருவாக்குகிறது. 

இது எப்படிச் சாத்தியமானது? 

உலகப் பயனர்களின் அனுபவத்தை மிக எளிமை ஆக்கியிருக்கும் இவ்விரண்டு மேம்படுத்தல்களுக்கான காரணத்தையும் ஓபன் ஏஐ கூறுகிறது. கேட்கப்படும் கேள்விக்கு, கட்டளைக்கு இணையத்தில் விடை தேடும் சாட்ஜிபிடி, பொதுவாகத் தான் துழாவிய இடங்களை எல்லாம் மேற்கோள் காட்டும். தற்போது, அதிக மேற்கோள்களைக் காட்டும் வகையில், அந்தத் தொழில்நுட்பத்தை இதில் மேம்படுத்தியுள்ளனர். அந்த விரிவாக்கமே இவ்வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார்கள். இதன்மூலம் சாட்ஜிபிடி வெறும் உரையாடல் மாதிரியாக மட்டுமல்லாமல் பயனரின் உதவியாளராக, திறன்மிக்க வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள். 

கூகுள் கிரோமில் சாட் ஜிபிடி?

ஓப்பன்ஏஐ மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகள் அனைத்தும், கூகுள் குரோமை வாங்கும் நோக்கில் நிகழ்த்தப்படுவதாக கருதப்படுகிறது. கூகுள் தன் குரோம் உலவியை விற்கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஓப்பன்ஏஐ வாங்கிக் கொண்டால் எப்படி மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் உலவியில் கோபைலட் செயற்கை நுண்ணறிவைத் தகவமைத்துப் பயன்பாட்டை மேம்படுத்தியதோ அதற்கு நிகரான மாற்றங்கள் குரோமிலும் நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குரோம் பயன்பாட்டை இன்னும் எளிய தளத்திற்கு உயர்த்தும் என்றும் இணைய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • விவேக்பாரதி

ஓபன் ஏஐ நிறுவனத்தின் அறிவிப்பு

வாட்ஸ்ஆப்பில் சாட்ஜிபிடி குறித்த செய்தி

சாட்ஜிபிடியின் பரிந்துரைகள் குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now