தமிழில் பெயர் வைப்போம்

மலேசியத் தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன்,  மே முதல் தேதி அன்று தமிழ்ப்பெயர் இணையச்செயலியின் இலவச முன்னோட்டப் பதிப்பை வெளியிட்டுள்ளார். 

Tamil name

முகிலன், தமிழ்ச் கணினித் துறையில் இருபத்தைந்தாண்டுகள் அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் மொழியியல் துறையிலும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வகையிலான தளங்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மொழி தொடர்பான திட்டப்பணிகளைச் செயல்படுத்தியுள்ளார். மொழி என்கிற விளையாட்டு செயலிகள் தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.

மலேசிய பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையுடன் இணைந்து இயங்கிவருகிறார். பல செயலிகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள தமிழ்ப் பெயர்கள் செயலியும் மொழியியல் வல்லுநர்கள் ஆலோசனையுடனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடனும் உருவாகியுள்ளது.

அவரைத் தொடர்பு கொண்டு புதிய செயலி பற்றிப் பேசினோம். “நிறைய பேருக்குத் தமிழில் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் சுருக்கமான எளிமையான பெயர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை தாம் விரும்பும்படி நவீன காலத்துக்கு ஏற்றதாக இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் எண் கணிதம், ஜோதிடம் இவற்றில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். இப்படி எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.

நம்பிக்கை இருப்போர், குழந்தையின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் நட்சத்திரம், ராசி உள்ளிட்ட தகவல்களுடன் எந்த முதல் எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடும். பெயர்களையும் பரிந்துரைக்கும். எண்கணித முறைப்படியும் பெயர்களை வழங்கும். இவற்றில் நம்பிக்கை இல்லாதோர் நேரடியாக உள்ளே சென்று பெயர்களைத் தேடலாம்.

தேர்ந்தெடுக்கும் பெயர்களுக்கு உரிய பொருளையும், சிறப்புக் கூறுகளையும் வரலாற்றில் பதிந்த பெயர் எனில் அந்தத் தகவலையும் கொடுக்கும். இச்செயலி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்திறன் மூலம் இயங்கும். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் உள்ளது. எனவே இளைய தலைமுறையினரும் ஆர்வமாகப் பயன்படுத்துவர். 60,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்கள் இத்தளத்தில் உள்ளன. ” என்று தெரிவித்தார்.

கீழே இணைப்பைக் கொடுத்திருக்கிறோம். பயன்படுத்திப் பாருங்கள்.

tamilname இணையத்தள முகவரி

மொழி விளையாட்டுகள்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now