சொற்கட்டளையில் உருவாகும் காணொளி

கூகுள் தனது ஜெமினி செயலி மற்றும் விஸ்க் எனும் பரிசோதனை கருவியின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு காணொளி உருவாக்கும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள், கூகுள் டீப் மைண்ட் உருவாக்கிய “வியூ 2” எனும் காணொளி உருவாக்கும் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.

AI

ஏற்கெனவே இருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக உருவாக்கும் திறனுடைய தொழில்நுட்பமான செய்யறிவு நட்பம் (Generative AI) உலகம் முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் கூகுள்  உருவாக்கிய வியூ 2, நாம் தரும் கட்டளையைக்கொண்டு தரம் வாய்ந்த காணொளிகளை உருவாக்கும் திறன் பெற்றது. எளிமையாக சொன்னால், நாம் என்ன  கற்பனை செய்கிறோமோ அதைச் சொற்களில் விவரித்தாலே வியூ 2  ஒரு காணொளியாக்கி காட்டும். யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) உட்பட பல சுருக்கமான காணொளி வடிவங்களுக்கு இது அடிப்படையாக விளங்குகிறது. இதன் மூலம், 8 விநாடி நீளமுடைய 720p தரமான, 16:9 விகிதத்தில் MP4 வடிவில் காணொளிகளை உருவாக்க முடிகிறது. இயற்கை காட்சிகள், திரைப்பட இயக்கம், காணொளிக்கருவி சுழற்சி போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய காணொளிகளை விரைவாக உருவாக்கும் திறன் பெற்றது இந்த தொழில்நுட்பம்.

தூண்டுதல்களின் விவரங்களை புரிந்து கொண்டு, அவற்றை காணொளி உருவாக்கத்திற்கான பொருண்மை வரைபடமாக (semantic blueprint) மாற்றும் விஸ்க் ஒரு இயந்திரக் கற்றல் மாதிரியாக செயல்பட்டுகிறது. திரைப்பட இயக்கம், ஒளி அமைப்பு, காட்சி சூழல் போன்ற அம்சங்களை துல்லியமாக திட்டமிடுகிறது. தற்போது கூகிள் ஒன்ஏ ஐ பிரிமியம் (Google One AI Premium) சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விஸ்க், உரையிலிருந்தும் (text-to-video) படங்களிலிருந்தும் (image-to-video) காணொளி உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. விஸ்க் மற்றும் வீயூ 2 சேர்ந்து கலைமிக்க, அறிவுபூர்வமான காணொளிகளை உருவாக்குகின்றன.

இந்த சேவையை கூகிள் ஜெமினி அட்வான்ஸ்டு (Google Gemini Advanced) பயனர்கள் இணையம் மற்றும் திறன்பேசி  வாயிலாகப் பெற முடிகிறது. பயனர்கள் தெளிவான கட்டளைகளை வழங்கினால், அதற்கேற்ப பொருத்தமான காணொளிகளை உருவாக்குகிறது. வியூ 2 மூலம் உருவாக்கப்படும் அனைத்து காணொளிகளும், அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை தெரிவிக்க ஒவ்வொரு காட்சியிலும் “சிந்த்ஐடி”  (SynthID) எனப்படும் கணிம முத்திரை பதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, நாம் “பனிக்காற்றில் ஓடும் ஒரு முயல் ” என ஒரு உரைக் கட்டளையை வழங்கினால், அதனடிப்படையில் இயற்கையான பனிவிழும் சூழலில் முயல் இயல்பாக ஓடுவது போன்ற திரைப்படத்  தர காட்சியுடன் கூடிய காணொளி உருவாகும். ஒரு காணொளிக்கருவி இல்லாமல், திரைக்கதை எழுதாமல், வெறும் சொற்கள் மூலம் திரைப்படத்தின்  தரத்திற்கு காட்சிகளை உருவாக்க முடியும் என்ற புரட்சியை, கூகுள் தங்களின் விஸ்க் மற்றும் வியூ 2 போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இன்று நடைமுறையில் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் உதவியால் உங்கள் கற்பனையை சொற்களில் பதித்து காணொளி உருவாக்கிப்பயன்பெறலாம்.

  • நவீனா

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now