படைப்புலகில் ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் புத்துணர்வூட்டும் கதை ஒன்று இருக்கும். ”இந்தப் பாடல் இப்படிப் பிறந்தது, இந்தப் படத்தின் கரு இப்படித் தோன்றியது” என்று திரைப்புகழ் கொண்டோர் பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். கலைஞர்களை நேர்காணல் செய்யும்போதுகூட அவர்களது படைப்புகளின் பின்னணிக் கதைகளை அறிய ஆவலாக இருப்போம். செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன் உருவாக்கிய எழுத்துருக்களுக்குப் பின்னும் களிநயமிக்க கதைகள் பல உண்டு.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலேசியாவின் வைகறைக் கூடம் காணொளி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. அவ்வமைப்பின் இளவரசு நெடுமாறன், எஸ்.பி.பிக்கு அஞ்சலியாகப் பாடல் ஒன்றை உருவாக்கினார்.
முன்னணிப் பாடகர் டி.ஆர் மகாராஜன் உட்பட மலேசியாவைச் சேர்ந்த பாடகர்கள் பலர் இணைந்து அப்பாடலைப் பாடினர். வாணிஸ்ரீ பாடல் வரிகளை எழுதினார். இசைக்கலைஞருக்குப் புதிய பாடல் எழுதப்பட்டுப் பாடகர்கள் பாடி அஞ்சலி செலுத்துவது வழக்கமான நடைமுறைதான். அதனால், வைகறைக் கூடம் இத்துடன் புதிய படைப்பாக்கம் ஒன்றுக்கு விதையிட்டது.
காணொளியில் பாடகர்கள் பாடும்போது தோன்றும் பாடல் வரிகள் அழகான எழுத்துருவில் தோன்ற வேண்டும் என்று இளவரசு நெடுமாறன் விரும்பினார். அதற்காக முத்து நெடுமாறனிடம் ஆலோசனை கேட்கப்பட்டபோது, அழகிய எழுத்துரு என்ன, இதற்கென்று புதிய எழுத்துருவையே உருவாக்கிவிடலாம் என்று இறங்கினார். அப்படித்தான் எஸ்.பி.பிக்கு காணிக்கையாக்கப்படும் காணொளிக்குப் புதிய எழுத்துருவே உருவாக்கப்பட்டது.
பாடகர்களும் இசைக் கலைஞர்களும் அவர்கள் கலைவழி எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்த, முத்து நெடுமாறன் தமது எழுத்துருக் கலை மூலம் அஞ்சலி செலுத்தினார். இந்தக் காணொளிக்காக அவர் உருவாக்கிய எழுத்துருவுக்கு ‘அஞ்சல் நிலா’ என்று பெயரிட்டார்.

எஸ்.பி.பி பரவலாகப் ‘பாடும் நிலா’ என்று அழைக்கப்படுவதால் அவருக்கு அஞ்சலி செலுத்த செய்யப்பட்ட எழுத்துருவும் ‘அஞ்சல் நிலா’ என்ற பெயரைத் தாங்கியது. உருவத்தில் எஸ்.பி.பியின் குழந்தைத் தனமான இயல்பைப் போலவே குண்டு குண்டு உருண்டை எழுத்துகளால் ‘அஞ்சல் நிலா’ உருவாக்கப்பட்டது. எழுத்துகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகச் சீராக, எஸ்.பி.பியின் முதிர்ந்த குணச்சித்திரத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த அஞ்சல் நிலா எழுத்துரு, முரசு அஞ்சலின் புதிய பதிப்பில் கிடைக்கவுள்ளது.
முரசு அஞ்சலின் புதிய பதிப்பு மூன்று நாடுகளில் வெளியாகிறது. இதன் விழா, ஜூன் 27-ம் தேதி மலேசியாவிலும், ஜூலை 5-ம் தேதி சிங்கப்பூரிலும், ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன. முன்பதிவுக்கு விரையுங்கள்.
இதோ முன்பதிவு செய்யும் இணைப்பு
முரசு அஞ்சல் வெளியீடு குறித்த விரிவான செய்தி
எஸ்.பி.பி அஞ்சலிப் பாடல் காணொளி
- விவேக்பாரதி
