இனி ‘கணக்கின்றிப்’ படிக்கலாம்!

மைக்ரோசாப்ட் வேர்டு, பவர்பாய்ன்ட் உள்ளிட்ட செயலிகளின் கோப்புகளை இனி கணக்கு இல்லாமலே பார்க்க முடியும். ஏற்கெனவே ஐபோனுக்கு இருக்கும் இந்த வசதியை ஆண்டிராய்டுக்கும் நீட்டித்து அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

நம்மில் பலர் மைக்ரோசாப்ட் கோப்புகளைப் பகிரும்போது மறுமுனையில் பெறுபவரால் உடனே திறந்து படிக்க முடியவில்லை எனச் சொல்லும் சூழலைச் சந்தித்திருப்போம். முன்பெல்லாம், பகிரப்பட்ட கோப்பை வாசிப்பதற்கே மைக்ரோசாப்ட் கணக்கிற்குள் நுழைய வேண்டியதிருக்கும். அல்லது, கூகுள் டாக்ஸ் போன்ற செயலிக்குக் கோப்புகளை மடை மாற்றி வாசிக்க வேண்டி வரும். இனி அந்த நேர விரயம் தேவையில்லை என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். கோப்புகளைக் கணக்கின்றி திறந்து வாசிக்கும் வசதியை ஆப்பிள் கருவிகளுக்கு வழங்கிவந்த அந்நிறுவனம், தற்போது ஆண்டிராய்டுக்கும் நீட்டித்துள்ளது. 

என்னென்ன செய்யலாம்? செய்ய முடியாது? 

பயனர்களால் அதிகளவில் பகிரப்படும் மைக்ரோசாப்ட் வோர்ட், எக்சல், பவர்பாய்ன்ட் கோப்புகள் சுட்டிகளாக அனுப்பப்படும்போது மைக்ரோசாப்ட் கணக்கு இல்லாமலேயே (அல்லது) உள் நுழையாமலேயே வாசிக்க முடியும். சுட்டியைத் தட்டியவுடன் பார்வை மட்டும் என்ற அம்சத்தில் அந்தக் கோப்புத் திறக்கும். திருத்தம் செய்யவோ, கருத்துகளைச் சேர்க்கவோ, பகிரவோ நாம் கணக்குக்குள் நுழையத்தான் வேண்டும். இந்த வசதி ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் 16.0.18827.20066 அல்லது அதற்கும் மேலான பதிப்புகளில் வழங்கப்படுகிறது.

புதிய முறையில் பகிர்வது எப்படி? 

மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்திருக்கும் இந்தப் புதிய வசதி, தனிநிலைப் பதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். அலுவலகப் பதிப்புகளில் இருந்து பகிரப்படும் சுட்டிகளைக் கணக்குக்குள் நுழைந்தால்தான் பார்க்க முடியும்.

  • முதலில், மைக்ரோசாஃப்ட் தனிநிலை கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  • பகிர விரும்பும் வோர்ட், எக்சல் அல்லது பவர்பாய்ன்ட்  கோப்பை திறக்கவும்.
  • கோப்பின் மேல் பகுதியிலுள்ள பகிர் என்பதை அழுத்தி, சுட்டி அமைப்பை  (Link settings) தொட வேண்டும். 
  • அதில், சுட்டி உள்ள எவரும் பார்க்கும் வசதி (Anyone with the link can view) இருக்கும். அதைத் தேர்வு செய்து நிறுவ வேண்டும். 
  • பிறகு, சுட்டியை வெட்டி, பகிர விரும்பிய இடத்தில் ஒட்டிவிட்டால் அனுப்பி விடலாம். 
  • மறுமுனையில் வாசிக்கும் நபர் கணக்குக்குள் நுழைய வேண்டிய தேவையின்றி பகிரப்பட்ட கோப்பைப் பார்த்துவிடலாம். 

மக்கள் கருத்து 

அதிகமாகக் கோப்புகளைப் பகிர வேண்டிய தேவை இருப்பவர்களுக்கு இவ்வசதி எளிமையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பார்வையாளர்கள் மைக்ரோசாப்ட் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது பற்றிய தேர்வு தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது சுதந்திரம் அளிப்பதாகத் தெரிவிக்கின்றனர். பகிரும் பயனர்கள், திருத்தங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பாகத் தகவல்கள் பரிமாற உகந்த வழி என்று கருதுகின்றனர். தொழில்நுட்ப அறிமுகம் குறைவாக உள்ள பயனர்களுக்கும் இவ்வசதி உதவுவதால் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

  • விவேக்பாரதி

மைக்ரோசாப்ட் கணக்கின்றி கோப்புகள் படிக்கும் வசதி குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now