மெக்கின்டாஷ் புன்னகை -1

மெக்கின்டாஷ் கணினியில் மகிழ்ச்சியைச் சேர்த்தவர் சூசன் கேர். ஹாப்பி மெக் என அறியப்படும் படவுரு (​icon), இவர் உருவாக்கியது. கணினிப் பிழையை உணர்த்தும் வெடிகுண்டுப் படவுரு, சாய்ந்திருக்கும் வாளியில் இருந்து வண்ணம் வழியும் படவுரு, கணினி இயங்கத் தொடங்கும்வரை காத்திருக்கும் நேரத்தில் திரையில் தோன்றிய கடிகாரப் படவுரு எல்லாமே சூசன் கைவண்ணம்தாம். நான்கு புள்ளி வைத்துப் போடும் கோலம் போல் இருக்கும் குறியீடு மெக் கட்டளை விசையைச் சுட்டச் சரியாக இருக்கும் என்பதும் இவர் முடிவுதான். 

Susan-kare-icons

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருள்களோடு தொடர்புடைய பொருள்களைக் கணினிச் செயல்பாட்டுடன் பொருத்தி உருவாக்கப்பட்ட வடிவங்கள் மூலம், கணினிக்கும் மனிதருக்குமான உரையாடலை எளிமைப்படுத்துபவை படவுருக்கள். அதில் அழகையும் குறும்பையும் சேர்த்து காலத்தால் அழியாத கலைத்தன்மையைச் சேர்த்தவர் சூசன் கேர். இன்று செயற்கை நுண்ணறிவு அரட்டைச் செயலிகளிடம் நட்பு பாராட்டும் நம்முடைய மனத்தை, Hello எனத் திரையில் ஒளிர்ந்த மெக் கணினிகள் அன்றே அறிந்திருந்தன. அந்த ஹல்லோவை வரைந்ததும் சூசன் கேர்தான். பல ஆண்டுகள் இத்துறையில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல. 

ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொருளாளராகப் பணியாற்றிய சூசனின் பள்ளிக்கூட நண்பர், கலைத்துறையில் பட்டம் பெற்ற சூசனிடம் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு வேலை இருக்கிறது என்றார். படிப்பை முடித்து அருங்காட்சியகம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் சூசன். அப்படி ஒன்றும் அவருடைய கலைத்தாகத்தைத் தணிக்கும் பணியல்ல. ஏதோ புதிதாகச் சொல்கிறார்களே என்று ஆப்பிள் நிறுவன வேலைக்கு விண்ணப்பித்தார்.

அப்போது மெக் கணினித் திரையில் கட்டம், செவ்வகம் எல்லாம் நிறைந்திருக்க உள்ளே கட்டளைகள் செய், பெயரை மாற்று, தூக்கிவிடு (Do it, Rename, Remove) என்று சொற்களில் இருந்தன. “ரொம்ப மோசமாக இருக்கும் ஒன்றை நன்றாக மாற்றியமைப்பது என்பது எளிமையான வேலைதான்” என வேடிக்கையாகச் சொல்வார் சூசன். குப்பைத் தொட்டியைக் கூடக் கலைத்தன்மையுடன் உருவாக்க உதவுவது அந்த வேடிக்கையான மனப்பாங்குதான். 

Susan_kare

ஆப்பிள் நிறுவனத்துக்காக சூசன் முதன் முதலில் உருவாக்கியதுதான் சிகாகோ எழுத்துரு. ஐபாட் அறிமுகமானபோது இதுவே அக்கருவியின் இடைமுக எழுத்துருவாக இருந்தது. அக்காலத்தில் வந்த ஆப்பிள் நிறுவன விளம்பரங்களில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் இந்த எழுத்துரு. மெக் கணினியின் இயல்புநிலை எழுத்துரு என்பதால் மேசைக் கணினியைப் பயன்படுத்தி அச்சிட்ட பலரும் தங்கள் விளம்பரங்களில் இதைப் பெருமளவில் பயன்படுத்தினர். ஆப்பிள் எழுத்துருக்களுக்கென்று ஒரு குறுந்தொடரே வெளியிடலாம். இந்தக் குறுந்தொடரில் நாம் காணப்போவது படவுரு பற்றி.

சூசன், ஆப்பிள் கருவிகளில் கலைத்தன்மையுடன் கூடிய படவுருக்களை உருவாக்கித் தனி முத்திரை பதித்திருந்தாலும் முதன் முதலில் படவுரு உருவாக்கியது அவரல்ல. படவுரு அறிமுகமான வரலாறு, காலமாற்றத்திலும் நிலைத்து நின்ற படவுருக்கள், அதை உருவாக்கியவர்களில் சிலர் என விரிவாக இக்குறுந்தொடரில் அறிந்து கொள்ளலாம்.

தொடரும்.

  • கோகிலா

மெக்கின்டாஷ் புன்னகை -2

மெக்கின்டாஷ் புன்னகை -3

மெக்கின்டாஷ் புன்னகை -4

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now