இருபத்தோராம் நூற்றாண்டு போட்டோஷாப் வரைகலை நுட்பங்கள் கோலோச்சிய காலமல்லவா. மெக் ஓஎஸ் எக்ஸ், விண்டோஸ் எக்ஸ்பி என அந்த காலக்கட்டத்தில் வந்த எல்லாமே உண்மைத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்தன. பளபளத்தன. மின்னின. ஒளி ஊடுருவும் தன்மையுள்ள தோற்றத்தில் நிறைய படவுருக்கள் வந்தன. தற்கால உண்மைத் தோற்றம் என்பதையும் தாண்டி எதிர்காலத்தில் வரப்போகும் வடிவங்களும் இருந்தன. வேற்றுகிரகங்களில் பயன்பாட்டில் இருக்கும் என எண்ணத்தக்க வகையில் கற்பனை தறிகெட்டு ஓடியது.

அப்புறம் வந்தது, ஆப்பிள் திறன்பேசி. அதன் பிறகு ஆண்டிராய்டு. இவையெல்லாம் அண்மைக்கால அறிமுகங்கள்தானே. கொஞ்சம் கிளறிப்பார்த்தால் எல்லாம் நம் நினைவிலேயே இருக்கும். சதுரமான கருப்புச் சட்டத்தின் உள்ளே வெள்ளை வட்டத்தில் இருக்கும் கடிகாரம். மேடுபள்ளங்கள் கூடத் தெரியும் விதத்தில் இருந்த படக்கருவியின் லென்ஸ். துருப்பிடிக்கும் இரும்பல்ல, டைட்டானியமாகத்தான் இருக்கும் என எண்ணத்தோன்றும் பல்லுச்சக்கரங்கள் கொண்ட அமைப்புகள் படவுரு. உலக வரைபடத்தைக் காட்டும் படவுரு. ஒலிவாங்கி. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எல்லாமே அழகுதான். கலையும் தொழில்நுட்பமும் போட்டி போட்டுக்கொண்டு நம் கண்களுக்கு விருந்தளித்தன. எனினும் படவுரு ரசிகர்கள் பெரும்பாலும் இந்தப் பத்தாண்டுகளைக் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட எண்ணுவதுண்டு. கருப்பு வெள்ளை பிட்மேப் படங்களில் தொடங்கிய சூசன் கேரின் கலைப்பயணம், நிறங்களோடு இருக்கும் படவுரு காலத்திலும் தொடர்ந்தது. பேஸ்புக்கில் வரும் மெய்நிகர் பரிசுப் படங்களையும் சூசன்தான் (2007) செய்து கொடுத்தார். பின்னர், பின்ட்ரெஸ்ட் நிறுவனத்தின் படைப்பு இயக்குநர் ஆனார்.
ஆனால், சூசன் கேர் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல குறைவான விவரங்களுடன் பூரணத் தன்மையைக் கொடுக்கும் படவுருக்களுக்கு வரவேற்பு என்றுமே இருந்தது. 2010க்குப் பிறகு தட்டையான எளிமையான வடிவங்கள் மீண்டும் தலையெடுத்தன. விண்டோஸ் 7 திறன்பேசியில் இருந்த படவுருக்கள் அப்படித்தான் இருந்தன. பயனர்கள் கொண்டாடினர். வழி தவறிய ஆடு திரும்பி வந்த கதை போல அதற்குப் பிறகு ஓரிரண்டு நிறங்களைப் பயன்படுத்தும் எளிமையான படவுருக்களே தற்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
நிறைந்தது.
- கோகிலா
தொடர்புடைய தளங்கள்
சூசன் வரைந்த படங்கள் அருங்காட்சியகத்தில்
அமிகோ ஒர்க்பென்ச் வண்ணப்படவுரு
குப்பைத்தொட்டிப் படவுரு வரலாறு
