செயற்கை நுண்ணறிவு என்னவெல்லாம் செய்யும் என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் புதுப்புது விடைகள் கிடைத்து வருகின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவு மருத்துவமும் பார்க்கும் என்று சொல்ல வைத்திருக்கிறது சீனப் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மருத்துவமனை முயற்சி.

பொதுவாக மருத்துவர்களின் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் அளவில் தற்போது வரை செயற்கை நுண்ணறிவு உதவி வருகிறது. இதை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், செயற்கை நுண்ணறிவே சிகிச்சை அளிக்கும் வகையில் சீனாவில் முகவர் மருத்துவமனை (Agent hospital) என்ற மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை சீனாவின் முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ட்சிங்குவா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. அதில் மொத்தம் 21 மருத்துவ துறைகளை உள்ளடக்கிய 42 செயற்கை நுண்ணறிவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதய நோயியல், நரம்பியல், குழந்தைகள் மருத்துவம், உளவியல் போன்ற முக்கியத் துறைகளும் இதில் அடக்கம்.
முகவர் மருத்துவமனையின் இந்த செயற்கை நுண்ணறிவு மருத்துவர்கள், அமெரிக்காவின் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் 93% மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றன. செயல்முறைத் தேர்வுகளிலும் தேர்ந்த மனித மருத்துவர்களுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் சில சிறப்புகளும் உள்ளன.
- ஒரு நாளில் 10,000 நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை.
- மனித மருத்துவர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைகளை சில நாள்களில் முடிப்பவை.
- ஓய்வு, சலிப்பு இன்றி தொடர்ந்து உழைக்கும் தன்மை கொண்டவை.
- அனைத்து விதமான மருத்துவத் தேவைகளுக்கும் சீரான செயல்திறனை வெளிக்காட்டுபவை
என்றெல்லாம் இதை உருவாக்கிய வல்லுநர்கள் கூறுகின்றனர். சிகிச்சைகளுக்குப் பல மருத்துவர்களிடம் கேட்கப்படும் பரிந்துரைகளை, ஒரே செயற்கை நுண்ணறிவு கொடுத்துவிடுவது, பயனர்கள் அனுபவத்தை எளிமை ஆக்குகிறது என்கின்றனர்.
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ மாணவர்களுக்குத் தரமான பயிற்சி அனுபவத்தை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. இவற்றில் சேமிக்கப்படும் பலதரப்பட்ட தரவுகளைக் கொண்டு எண்ணற்ற நிலைகளில் செயல்முறை பயிற்சிகளை தரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் மருத்துவ மாணவர்கள் பாடங்களைக் கற்க முடியும் என்று சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளை அதிவேகமாகவும் துல்லியமாகவும் வழங்க இம்முயற்சி படிக்கல்லாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பாதிக்கப்பட்டோரின் தகவல் பாதுகாப்பு, மனித மருத்துவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் ஒருங்கிணைந்த வழிமுறையை உருவாக்குதல் போன்ற வருங்காலப் பணிகள் இதன் மூலம் சாத்தியமாகும் என்றும் தெரிய வருகிறது.
பல தேர்வுகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு மருத்துவமனை இன்னும் பயிற்சி வழங்கப்படும் நிலையில் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் இதைச் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளனர். சீனாவின் முகவர் மருத்துவமனை வெற்றியடைந்தால் மருத்துவ உலகின் புதிய அத்தியாயம் திறக்கும் என்பதில் ஐயமில்லை.
- விவேக்பாரதி
சீனாவின் செயற்கை நுண்ணறிவு மருத்துவமனை குறித்த செய்தி
