ஆப்பிள் – டாட்டா கூட்டு

இந்தியாவில்​ ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்க்கும் பணிகளை டாடா குழுமத்திடம் ஆப்பிள் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

முதலில் உற்பத்தி, பழுதுபார்ப்பு என ஆப்பிளின் அனைத்து நடவடிக்கைகளும் சீனாவை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வந்தன. இந்த நிலை கொஞ்சம் மாறி, இந்தியா போன்ற பிற நாடுகளுக்கும் தன் உற்பத்தி கட்டமைப்பைக் கொண்டுவந்தது ஆப்பிள். 2017 முதல் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் இந்தியாவில் திறன்பேசிகளை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் 2022 வரை, பழைய ரக ஐபோன்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

அதன்பிறகு புதிய ரக ஐபோன்களும் இந்தியாவிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கின. இந்தியாவில் மொத்தம் ஏழு நிறுவனங்கள் ஆப்பிள் திறன்பேசிகளை உற்பத்தி செய்துவருகின்றன. இதில் ஃபாக்​ஸ்கான், டாடா ஆகியவை முக்கியமானவை. ஐபோன் உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஐபோன் 16 புரோ, புரோ மேக்ஸ் ரக திறன்பேசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 

இந்நிறுவனம்தான் இந்தியாவில் முதன்முறையாக ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன்பிறகே டாட்டா, பெகட்ரான் போன்ற நிறுவனங்கள் ஐபோனை உருவாக்க தொடங்கின. இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள புதிய ஐபோன் 17ஐ இந்தியாவிலிருந்து உருவாக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட 11 மில்லியன் திறன்பேசிகள் உலகெங்கிலும் உள்ள ஐபோன் விரும்பிக​ளி​ன் கைகளை அலங்கரித்து வருகின்றன.

2020ல் இந்தியா ​மூலம் ஐபோன் உற்பத்தியின் அளவு 1 விழுக்காடாக இருந்த நிலையில், இப்போது அது 7 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இப்போது இந்த உற்பத்தி போட்டியில் டாட்டா நிறுவனத்தின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7ல் பெகட்ரான் நிறுவனத்தின் பங்குகளை டா​ட்டா நிறுவனம் வாங்கியதால், அதன் உற்பத்தி அலகுகள் முழுவதும் டாட்டாவின் வசமானது. 

இப்போது ஐபோன், மேக்புக்குடைய பழுதுபார்க்கும் பணிகளைச் செய்துவந்த விஸ்டர்ன் நிறுவனத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது டாட்டா. இதன்​மூலம் உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மையான முகமாக வளர்ந்திருக்கிறது. இந்த பழுதுபார்க்கும் தொழிற்சாலையின்​மூலம், ஐபோன்,​ மேக்புக்கின் பெரிய அளவிலான பழுதுகள் சரிபார்க்கப்பட உள்ளன.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now