உற்பத்தித்திறன் பெருக்கும் கருவிகள்

மனித நாகரிகத்தின் வரலாற்றில் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நமது வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரத்திலிருந்து கணினி வரை, ஒவ்வொரு கருவியும் மனிதனின் திறமையைப் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, நமது பணித் திறனையும் தனிப்பட்ட வாழ்க்கையின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்கான கருவிகளின் தேவை அதிகரித்து வருகிறது.

உற்பத்தித்திறன் கருவிகள் என்பது அன்றாடப் பணிகளில் திறமையையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளாகும். இந்த கருவிகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த கருவிகளின் அனைத்து வகைகளும் செயல்திறனையும் கவனத்தையும் மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை பல்வேறு முறைகளில் நமக்கு உதவுகின்றன. நமது மதிப்புமிக்க நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இந்த கருவிகள் வழிகாட்டுகின்றன. அவை நமது பணி அட்டவணையை ஒழுங்குபடுத்துகின்றன. குழப்பமான பணிச்சூழலைத் தவிர்த்து, திட்டமிட்ட முறையில் வேலைகளை முன்னெடுக்க உதவுகின்றன.

உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இரண்டு உற்பத்தித்திறன் கருவிகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறோம். முதலாவதாக குரல் பதிவு மற்றும் குறிப்பு எடுத்தலில் பெரியளவில் உதவி புரியும் பிளாட் ஏஐ (plaud ai) நிறுவனத்தின், பிளாட் நோட், பிளாட் நோட் பின் கருவிகளைப் பற்​றி பார்ப்போம். இவை வெறும் குரல் பதிவு கருவிகள் அல்ல, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உங்கள் குரலை துல்லியமான உரையாக மாற்றும் அற்புதமான கருவிகள். 

112 க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசுவதை உரையாக மாற்றும் திறன், தானாகவே பத்திகளாகப் பிரித்துத் தரும் வசதி போன்ற அம்சங்கள் இதைத் தனித்துவமாக்குகின்றன. இரண்டுமே ஒரே வித தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றின் வடிவமைப்பும் பயன்பாட்டு முறையும் வித்தியாசமானவை. பற்று  அட்டை அளவுள்ளது பிளாட் நோட் கருவி. மேக்சேப் திறன்பேசி உரை மூலம், திறன்பேசியின் பின்புறத்தில் காந்த சக்தியால் ஒட்டிக்கொள்ளும். இது கூட்டங்கள், அலுவலக சூழலுக்கு மிகவும் ஏற்றது.

இதை விடச் சிறிய அளவில் உள்ள நோட்பின் கருவியை, காந்த ஒட்டுதல் அல்லது மணிக்கட்டு பட்டை ஆகியவற்றின் மூலம் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது பயணத்தின் போதும், எங்கும் செல்லும் போதும் குரல் பதிவு செய்ய ஏற்றது. நீங்கள் இரண்டில் எந்த குரல் பதிவு கருவியைத் தேர்ந்தெடுத்தாலும், அது உங்கள் குறிப்பு எடுக்கும் முறையை முற்றிலும் மாற்றிவிடும். செயற்கை நுண்ணறிவு கருவிகள் உடனடியாக உள்ளடக்கத்தைச் சுருக்கி, ஒழுங்குபடுத்தி, உங்கள் அடுத்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கும். பதிவுகளை கேட்டுக்கொண்டு நேரத்தை வீணடிக்கும் அவசியம் இனி இருக்காது.

அடுத்த கருவி அடிக்கடி கா​ணொளி அழைப்புகள், இணையக் கூட்டங்களில் பங்கேற்போர் பயன்படுத்தக் கூடிய இணைய படக்கருவிக்கானது. லாஜிடெக் நிறுவனத்தின் லாஜிடெக் எம்எக்ஸ் பிரியோ இணையப் படக்கருவி உணர்வி ப​லரின் தேர்வாக இருக்கிறது. இது 4K தெளிவுத்திறனில் நுணுக்கமான விவரங்களைக்கூட படம்பிடிக்கிறது. இது வன்பொருள் மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்திப் படத்தரத்தை மேம்படுத்துகிறது.  

பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப படத்தின் சுயவிவரத்தை மாற்றிக்கொள்ளலாம். வெளிப்பாடு, வெள்ளைச் சமநிலை, நிறச்சாயல், ஷட்டர் வேகம் போன்ற பல்வேறு அமைப்புகளை மாற்றியமைக்கும் வசதி உள்ளது. மேலும், ஒலிவாங்கிகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பின்னணி இரைச்சல்களை அகற்றி, தெளிவான ஒலி அனுபவத்தை வழங்குகின்றன.

இவை மட்டுமில்லாமல், ஆப்பிள் இன்சைடர் தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில், இன்னும் பல உற்பத்தித்திறன் கருவிகளைப் ப​ற்றி அலசியிருக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து

ஆப்பிள் இன்சைடர் கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now