பேராசானின் மாணவர் பேராசிரியர்
மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) ஓர் அங்கமாகச் செயல்படும், தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் (IDC) பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஸ்ரீகுமார், அங்கேயே பயின்றவர். அவருடைய ஆசான் அவருக்கு அளித்த பாடங்களையும் நுணுக்கங்களையுமே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

2000மாவது ஆண்டில், அவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு நாள் அவருடைய ஆசானும், வனப்பெழுத்துத் துறையில் முன்னோடியுமான ஆர்.கே ஜோஷி கல்லூரிக்கு வருகை தந்தார். அவரை மரியாதையுடன் வரவேற்ற ஸ்ரீகுமார், பின்னொருநாள் தம் மாணவர்களுக்கும், ஆசான் ஆர்.கே ஜோஷிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், மாணவர்களை சந்தித்த ஜோஷி, தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றியும், அதில் வடிவமைப்பின் பணிகளைப் பற்றியும் விரிவான உரையை வழங்கினார்.
அப்போது ஸ்ரீகுமாருக்கும் முக்கியமான பாடத்தை வழங்கினார். ”நான் சாதித்தது என்று எதையும் என்னால் சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்திற்கும் மேலே ஒரு சக்தி உண்டு. அதுதான் என் கைகளைப் பிடித்து வழி நடத்துகிறது. நான் ஒரு கருவி மட்டுமே” என்ற தத்துவ வார்த்தை, பேராசிரியர் ஸ்ரீகுமாருக்கு வாழ்க்கையாக மாறியது.
இந்தச் சம்பவத்தை உருக்கமாகத் தமது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார், வடிவமைப்பு மற்றும் வனப்பெழுத்துகளை மாணவர்களுக்கு ஆர்வமாகக் கற்பிக்கும் பேராசிரியர் ஜி.வி ஸ்ரீகுமார். கேரளாவைச் சேர்ந்த இவர், வடிவமைப்பு, ஊடகத்துறை மீதுள்ள ஆர்வத்தினால் மும்பை ஐடிசியில் படித்து, அங்கேயே பேராசிரியராகப் பணி செய்கிறார். அச்சுக்கலை, வனப்பெழுத்து, இதழ் வடிவமைப்பு, தகவல் வரைகலை, வடிவமைப்பு கற்பித்தல், மன நல அழுத்த மேலாண்மை எனப் பல துறைகளில் வித்தகராகத் திகழ்கிறார் ஸ்ரீகுமார். நாடு முழுவதிலும் வனப்பெழுத்து மற்றும் வரைகலை குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.
சந்தமாமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களின் வடிவமைப்புகளுக்கு வித்திட்டவர் ஸ்ரீகுமார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், நாட்டின் வனப்பெழுத்துக் கலைஞர்களை ஒன்றுசேர்த்து, வைஷ்ணவ ஜனதோ பாடலின் வரிகளை வெவ்வேறு மொழிகளில் எழுத வைத்து காணொளி ஒன்றை இயக்கினார். ஸ்ரீகுமார் இதற்காகப் பலருடைய பாராட்டைப்பெற்றார். அண்மையில் சென்னையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்திய எழுத்துருப் பயிலரங்கத்தில் இவர் ஆற்றிய உரை தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் பயனுள்ளதாயிருந்தது.
கலை வளர்க்கும் மைத்துளிகள்
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்க் டிராப்ஸ் என்று தனியாக வனப்பெழுத்துப் பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார் கோபால் பட்டேல். குஜராத்தி மொழியில் வனப்பெழுத்துகளை எழுதும் கலைஞரான இவர் அச்சுத் பாலவ், ஸ்ரீகுமார் போன்ற முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து பல வனப்பெழுத்துப் பயிலரங்குகளை நடத்தியவர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார் கோபால் பட்டேல். வனப்பெழுத்து மட்டுமன்றி ஓவியம், படம் வரைதல், வரைகலை, சிலை வடித்தல், குடைகளுக்கு வண்ணமிடுதல் என மாணவர்களைக் கவரும் கலைமுறைகளை முன்னெடுத்து வருகிறார்.
- விவேக்பாரதி
ஸ்ரீகுமாரின் இன்ஸ்டாகிராம் பக்கம்
கோபால் படேலின் இன்ஸ்டாகிராம் பக்கம்
