கலையெழுதும் தூரிகை – 3

வகுப்பில் வந்த மாணவக் கனவு

மும்பை பரேல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், 1973-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் அச்சுத்திற்கு அன்று முக்கியமான நாள். காலையில் ஒரு மாணவனை அழைத்து கரும்பலகையில் பழமொழி ஒன்றை எழுதச் சொல்வது ஆசிரியர் வழக்கம். அன்று பழமொழி எழுதுவது அச்சுத்தின் முறை. எழுதி முடித்ததும், வண்ணப் பலப்பங்களைக் கொண்டு எழுதியதை அழகுபடுத்தினான். மற்றவர்களின் கண்களுக்கு வெறும் எழுத்துகளாகத் தெரிந்தவை அச்சுத் கண்களுக்கு கலையாகத் தெரிந்தன.

அச்சுத் பாலவ்

எழுத்தோவியங்களைப் படைக்கும் வனப்பெழுத்துக் கலையில் தன் மனம் லயித்திருப்பதை அவர் கண்டுகொண்டார்.  அடுத்த சில ஆண்டுகளில், மும்பை ஜேஜே கலைக் கல்லூரியில் ஆர்.கே. ஜோஷியின் மாணவராகச் சேர்ந்துவிட்டார். அந்த மாணவர்தான் அண்மையில் வனப்பெழுத்துக் கலைக்காக இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருதைப் பெற்ற, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கலைஞர் அச்சுத் ராமச்சந்திர பாலவ். 

வனப்பெழுத்துத் துறையில் முன்னோடி ஆர்.கே ஜோஷியின் மாணவரான அச்சுத் பாலவ், தமது படைப்புகளில் தேவநாகிரியையும் மராத்தியின் மோடி வரிவடிவத்தையும் முன்னிலைப்படுத்துகிறார். பல் துலக்கும் பிரஷ், சமையல் கரண்டி போன்று அதுவரை யாரும் பயன்படுத்தாத கருவிகளைப் பயன்படுத்தி புதிய படைப்புகளைக் கொடுத்தார். அதனாலேயே கலைஞர்கள் மத்தியில் அதிகப் புகழும் அடைந்தார். மராத்திய இளைஞர்கள் பலரை ஈர்த்த அச்சுத் ஆண்டுதோறும் மராத்தி வனப்பெழுத்து கண்காட்சிகளை நடத்தி, புதிய வனப்பெழுத்துக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.

ரகசியக் கலை மாணவர்

அச்சுத் பாலவ் போலவே மாணவப் பருவத்தில் கிளைத்த சிறு ஆர்வத்தால் வனப்பெழுத்துக் கலைஞராக மாறியவர், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தில்பாக் சிங். இளைஞர் தில்பாக், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி – நிஃப்ட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். பின்னர் அங்கேயே பகுதி நேர விரிவுரையாளராகப் பாடமெடுத்தார். பள்ளியில் விளம்பரத் தட்டி ஒன்றை உருவாக்கச் சொன்னபோது தமக்குள் இருந்த வனப்பெழுத்துக் கலை ஆர்வத்தைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார் தில்பாக் சிங். 

தில்பாக் சிங்

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேலான பின்தொடர்வுகளைக் கொண்டிருக்கும் இவர், அடிக்கடி தன் வனப்பெழுத்துப் படைப்புகளைப் பதிவிட்டு வருகிறார். இந்தி மொழியில் தனக்கென்று தனி பாணியில் வனப்பெழுத்துகளைப் படைத்து வரும் இவர், பெருந்தொற்றுக் கால இடைவெளிக்குப் பின்னர் வனப்பெழுத்து, வடிவமைப்பு கலையைக் கற்றுத்தரும் பாடங்களை இணையத்தளம் வழியாக எடுத்து வருகிறார். பள்ளியின் வனப்பெழுத்து ஆர்வம், தன்னை வடிவமைப்புத் துறையில் கவனம் செலுத்த வைத்தபோது, பெற்றோருக்குத் தெரியாமலேயே போபாலில் உள்ள நிஃப்ட்டில் சேர்ந்து படிக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தில்பாக் சிங். 

அச்சுத் பாலவின் வலைப்பூ

அச்சுத் பாலவ் படைப்புகளைப் பதிவிடும் இன்ஸ்டாகிராம் பக்கம்

தில்பாக் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now