தமிழ்நாட்டு நாணயங்களின் வரலாற்றை விளக்கும் `வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்` என்ற நூல் வெளியாகியிருக்கிறது.

நாணயங்கள் வெறும் பரிமாற்ற ஊடகங்கள் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், கலை, மதம், வாழ்வியலின் காலத்தின் பதிவாகும். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய நாணயங்கள், வளமான வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுகளாக விளங்குகின்றன. சங்க காலம் முதல் விஜயநகர பேரரசு வரை, ஒவ்வொரு நாணயமும் தனது கால கட்டத்தின் கதையைக் கூறுகிறது. இந்த நாணயங்களின் கதையைக் கூறும் `வரலாறு கூறும் தமிழ்நாட்டு காசுகள்’ என்ற நூல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் ஆறுமுக சீதாராமன் ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள். இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் நூலை வெளியிட, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், முன்னாள் இந்தியக் குடிமையியல் பணி அதிகாரி, பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள இந்நூல், தமிழ்நாட்டு நாணயங்களின் வரலாற்றை நம் கண்முன் நிறுத்துகிறது. சங்க காலத்திலிருந்து பிற்கால அரசுகள் வரை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட தனித்துவமான காசுகளைப் பற்றிய விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அக்காலத்திய வணிகம், பொருளாதாரம், அரசர்களின் செல்வாக்கு போன்றவற்றை இந்த நாணயங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ரோமானியர்களுடனான வணிகத் தொடர்புகளின் சாட்சியாக, தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட ரோமானியர் நாணயங்களும் இந்தத் தொகுப்பில் ஆராயப்படுகின்றன. ரோமானியர் நாணயங்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உலக வர்த்தகத்தில் சிறந்து விளங்கியுள்ளதை உணர்த்துகின்றன. பல்லவர்கள், விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் காலத்து நாணயங்கள் வரை, ஒவ்வொரு காலகட்டத்தின் உலோகவியல், வடிவமைப்பு ஆகியவை தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழக காசுகளின் சிறப்பை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. பண்டைய காசுகளின் ஒளிப் படங்களும் வழங்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள், நாணயவியல் ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாட்டின் கடந்த காலத்தை அறிய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு விலைமதிப்பற்ற களஞ்சியமாகும்.
இன்றைய மின்னணு பணம் மற்றும் கிரிப்டோ நாணயத்தின் காலத்தில், இந்த பண்டைய நாணயங்களின் ஆய்வு, பணத்தின் உண்மையான மதிப்பு மக்களின் நம்பிக்கையில் இருக்கிறது என்பதைக் கூறுகிறது.
- மு. இசக்கிமுத்து
