மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவுடனேயே விளம்பர மின்னஞ்சல்களும் சந்தா செய்திகளும் குவிந்து கிடப்பதைப் பார்க்க எரிச்சல் உண்டாகிறதா? மின்னஞ்சல் பெட்டியைச் சுத்தம் செய்ய முடியாமல் இருப்பது சிரமத்தை ஏற்படுத்துகிறதா? இதற்குத் தீர்வாக கூகுள் நிறுவனம் ஜிமெயில் பயன்பாட்டில் சந்தாக்களை நிர்வகிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளம்பரம், சந்தா மின்னஞ்சல்கள் என்றால் என்ன?
இணையதளத்தில் நாம் ஏதேனும் வலைத்தளத்திற்குள் நுழையும்போது தன்னிச்சையாகவோ, குறிப்பிட்ட ஒரே ஒரு தேவைக்காகவோ நமது மின்னஞ்சல் முகவரி மூலம் உள்நுழைய நேரும். அதுவே அந்தத் தளத்தின் செய்தி அறிவிப்புகளுக்கு நாம் சந்தாதாரர் ஆகிவிட்டதாய்க் கணக்கு. அதன் பின் தினமும் அவற்றின் அறிவிப்புகளும் விளம்பரங்களும் நம் மின்னஞ்சலில் குவியத் தொடங்கிவிடும். இதுவே நாளடைவில் நமது மின்னஞ்சலின் மொத்த சேமிப்பிடத்தையும் திருடிக் கொண்டு, நமக்குத் தேவையான எதையும் சேமிக்க முடியாத நிலையை உருவாக்கும். பயனர்கள் சந்திக்கும் இந்தச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஜிமெயில் தீர்வம்சமாக சந்தா நிர்வாகத்தை (Manage Subscription) உருவாக்கியுள்ளது.
சந்தா நிர்வாக அம்சம் என்ன செய்யும்?
ஜிமெயிலில் நமது மின்னஞ்சல்களைப் பார்க்கும் இடத்திலேயே சந்தாக்கள், விளம்பர மின்னஞ்சல்கள் புதிய தொகுப்பாகக் காட்டும். அதில் நாம் ஏற்கனவே உறுப்பினராக உள்ள சந்தா மின்னஞ்சல்களின் பட்டியலை ஒரே இடத்தில் காண முடியும். அதோடு, அவற்றிலிருந்து எளிதாக சந்தாவை நீக்கிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ”மின்னஞ்சல் பெட்டியைச் சீரமைக்க புதிய முயற்சி இது. தேவையற்ற மின்னஞ்சல்களில் இருந்து பயனர்கள் விரைவில் விடுபடலாம்,” என Google தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்தலாம்?
- ஜிமெயிலில் நுழைந்த பிறகு, இடது பக்கம் புதிய சந்தாக்கள் என்ற பகுதி காணப்படும்.
- அதில், கடந்த சில வாரங்களில் அதிக மின்னஞ்சல்கள் அனுப்பிய சந்தாபட்டியல்கள் மேலே காட்டப்படும்.
- ஒவ்வொரு சந்தாவுக்குமான ’சந்தாவை நீக்குக’ பொத்தானும் அதன் கீழ் அமைந்திருக்கும். அதைத் தொடுவதன் மூலம் அந்த மின்னஞ்சல்களில் இருந்து விடுபடலாம்.
இந்த வசதி தற்பொழுது சில பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 2025இல் ஆண்டிராய்டு, ஐஓஎஸ் பயன்பாடுகளிலும் இது அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்ன?
சந்தாக்களின் மொத்த எண்ணிக்கையும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மின்னஞ்சல் எண்ணிக்கையும் காட்டப்படும். அதிகமாக மின்னஞ்சல்கள் அனுப்பும் சந்தாக்கள் மேலே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஒரே தொடுதல் மூலம் சந்தாவை நீக்க விரும்பும் நிறுவனத்துக்கு கூகுள் நேரடியாக கோரிக்கையை அனுப்பி, சந்தாவிலிருந்து மின்னஞ்சலை விலக்கிக் கொள்ளும்.
கூகுள் மேம்படுத்தி வரும் தனது செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்டு நமக்கு வரும் மின்னஞ்சல்களில் 99.9 விழுக்காடு முக்கியமற்ற குப்பைச் செய்திகளைத் தடுத்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஆபத்தான மின்னஞ்சல்களை நாம் அறியாமல் தொட்டு, தகவல் திருடப்படும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. கணிப்பொறி பயன்பாட்டில் தவிர்க்கமுடியா இடத்திற்கு வந்துவிட்ட ஜிமெயிலை, இதன்மூலம் சுத்தமாகப் பராமரிக்கலாம் என்பது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- விவேக்பாரதி
ஜிமெயில் சந்தா நிர்வாக அம்சம் குறித்த அறிவிப்பு
