கணிப்பொறி உலகில் ஏற்கெனவே பல கருவிகளில் வேரூன்றிவிட்ட கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி, இப்போது திறன்கடிகாரம், கூகுள் தொலைக்காட்சி உள்ளிட்ட பிற தளங்களுக்கும் தனது சேவையை நீட்டிக்கவுள்ளது. இதனால் கூகுள் கருவிகளின் ஒட்டுமொத்த பயன்பாட்டிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் சீரான அனுபவத்தை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

கூகுளின் செல்லக் குழந்தையான ஜெமினி செயற்கை நுண்ணறிவை அதன் அனைத்துத் தளங்களிலும் விளையாட விட்டுப் பார்க்கிறது அந்நிறுவனம். தேடுபொறி உதவியில் தொடங்கி, கூகுள் டாக்ஸ், ஜிமெயிலில் எழுத்துதவி, படங்களின் மூலம் விவரங்களை அறிந்து சொல்லும் பணி என அனைத்திலும் ஜெமினி கட்டுபாடின்றி இயங்கி, பயனர்களின் வேலையை எளிமையாக்கி வருகிறது. அதன் அடுத்தகட்டமாக மேலும் சில கருவிகளுக்கு அதன் சேவைகளை நீட்டிக்கிறது கூகுள் நிறுவனம். இதன் மூலம் திறன்கடிகாரத்திலும் இனி ஜெமினி செயற்கை நுண்ணறிவின் சேவையைப் பெறலாம்.
திறன்கடிகாரங்களில் ஜெமினி
திறன்கடிகாரங்களுக்குப் பயன்படும் வியர் ஓஎஸ் இயங்குதளத்தில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திறன்பேசியில் கேட்பது போலவே குரல் வழியாகவோ, தட்டச்சு செய்தோ நமக்குத் தேவையான தகவல்களைத் திறன்கடிகாரத்திடமே பெற்றுவிடலாம். கைப்பேசியைப் பையை விட்டு எடுக்கக் கூட வேண்டாம். கேள்விகளுக்கு நேரடி பதில்கள், நாள் திட்டமிடல்கள், சீரான நுட்ப ஆலோசனைகள் என பல வகையான உதவிகளை திறன்கடிகாரங்களில் ஜெமினி வழங்குகிறது. “இது பயனர்களின் நாளைய இயக்கத்தை விரைவாகவும் சிறப்பாகவும் திட்டமிட உதவும்” என்று கூகுள் தெரிவித்துள்ளது.
ஆண்டிராய்டு ஆட்டோவும் கூகுள் டிவியும்
கடிகாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜெமினியின் இதே செயற்கை நுண்ணறிவு அம்சம், விரைவில் கூகுளின் ஆண்டிராய்டு ஆட்டோ செயலிக்கும் கூகுள் தொலைக்கட்சிக்கும் கூட வரப்போகிறது. மகிழுந்தில் திறன்பேசியின் சலுகைகளை அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆண்டிராய்டு ஆட்டோ செயலியில் ஜெமினி இணைகிறது. அதன்மூலம் பயனரின் செயல்களைக் கணித்து துல்லியமான வழியில் நேரடியாக வழிகாட்ட முடியும். பயணம் போகும் இடங்களுக்கு ஏற்ப பாடல்கள் அல்லது செய்திகளை ஜெமினியைப் பரிந்துரைக்கச் செய்யலாம். வாகனங்கள் பற்றிய தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
கூகுள் தொலைக்காட்சியில் ஜெமினி நுழைவதன் மூலம் பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப திரைப்படங்கள், தொடர்களின் பரிந்துரைகளைக் கேட்டுப் பெறலாம். திரைப்படங்களுக்கான தேடலை குறிப்பிட்ட திரைக்கலைஞரைச் சார்ந்து அமையும்படி தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். தொலைக்காட்சியுடன் குரல் வழியே உரையாடி உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு அனுபவங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி
கூகுள் தனது ஜெமினி செயற்கை நுண்ணறிவு சேவையை பல்வேறு தளங்களில் ஒரே விதமான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைத்து வருகிறது. “ஒரே ஏஐ அனுபவம், பல கருவிகளில்” என்ற தத்துவத்தின் கீழ், கைக்கடிகாரம் முதல் மகிழுந்து வரை, கைப்பேசி முதல் வீட்டுப் பெரிய திரை வரை ஒரே மாதிரியான தனிப்பயனாக்க அனுபவத்தைப் பெற உதவுகிறது.
ஏற்கெனவே மின்னஞ்சல்களை வடிகட்டுதல், நிகழ்வுகளை நினைவுபடுத்துதல், புகைப்படங்களை வகைப்படுத்துதல், உரை உருவாக்குதல், வழி வழிகாட்டுதல், பொழுதுபோக்கு பரிந்துரைகள் என பல அம்சங்கள் ஜெமினி மூலம் எளிமையாகச் சாத்தியமாகியுள்ளன. இவற்றை ஆங்கிலத்தைக் கடந்து பிற மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெமினியின் இந்த நீட்டிப்பு அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- விவேக்பாரதி
ஜெமினி செயற்கை நுண்ணறிவு நீட்டிப்பு குறித்த செய்தி
