வழிகாட்டும் செயற்கை நுண்ணறிவு

கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்களுக்கு விருப்பமான தகவல்களைப் பெற உதவியாக இருந்த பின்தொடரும் அம்சத்தை விரைவில் நீக்கப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

உலகளாவிய பயனாளர்களால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் கூகுள் மேப்ஸ் புதிய இடங்களை கண்டுபிடிப்பதிலிருந்து நேரத்தைச் சேமிப்பது வரை பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. அவற்றில், பின்தொடரல் எனப்படும் ஒரு முக்கியமான அம்சம், விரைவில் முடிவுக்கு வருவதாக Google உறுதிப்படுத்தியுள்ளது.

‘பின்தொடரல்’ அம்சம் என்றால் என்ன?

சமூக ஊடகங்களில் இருப்பது போல் கூகுள் மேப்ஸ் செயலியிலும் வழங்கப்படும் பின்தொடரல் அம்சத்தின் மூலம் நமக்குப் பிடித்த உணவகங்கள், புத்தகக் கடைகள், தேநீர்க் கடைகள் முதலிய முக்கியமான இடங்களைப் பின்தொடர முடியும். அதன்மூலம் புதிய அறிவிப்புகள், வேலை நேரம், சலுகைகள், படங்கள், மேம்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் போன்றவை மேப்ஸின் முகப்புப் பகுதியில் தோன்றும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள், தனி நபர்கள், சிறிய வணிகர்கள் ஆகியோருக்கு தங்களது பயனர்களை நேரடியாக அணுகும் ஒரு பக்கம் போன்றதாக இருந்தது.

ஏன் கூகுள் இந்த அம்சத்தை நீக்குகிறது?

இயல்பில் கூகுள் வழிகாட்டுதலுக்கும் இடங்கள் சார்ந்த தகவல்களை வழங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் செயலி ஆகும். அதனாலேயே அதற்குள் கொடுக்கப்பட்டுள்ள பின்தொடரல் அம்சத்தைப் பயனர்களில் பலர் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சமூக ஊடகமாக கூகுள் மேப்ஸைப் பயன்படுத்த முயன்றாலும் அதில் சமூக ஊடகத்தன்மை குறைவாக உள்ளதும் முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. இதனாலேயே கூகுள் இந்த அம்சத்தைக் கைவிட முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அந்நிறுவனத்தின் அறிவிப்புப்படி இந்த அம்சம் செப்டம்பர் 2025 முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும், ஏற்கெனவே இதில் பின் தொடரப்பட்ட இடங்களை மேப்ஸில் காண்பது, செய்திகளைப் பெறுவது உள்ளிட்ட சேவைகள் அதன்பின் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேப்ஸில் இணையும் செயற்கை நுண்ணறிவு

பின்தொடரல் அம்சம் நீக்கப்படுவது பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல்தான் என்றாலும் அதற்கு ஈடாக மேப்ஸில் அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, நமது பயண வரலாற்றைப் பதிவு செய்துகொள்ளும். நாம் தேடும் இடங்களின் தகவல்களை ஆராய்ந்து இவற்றின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும். நாம் மதிப்பீடு அளிக்கும் இடங்களுக்கு ஏற்ப பரிந்துரைகள் அமையும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் கூகுள் மேப்ஸை அந்நிறுவனம் தனிப்பயனாக்க முயல்வதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். அதாவது, விருப்பங்கள், பயண நேரம், வழக்கமான இடங்கள், உணவக வகை தேர்வுகள் போன்றவற்றைப் புரிந்துகொண்டு, தேவையான நேரத்தில் சூழலுக்கு ஏற்ப பரிந்துரைகளை மேப்ஸில் வழங்கும் முயற்சியில் உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழிகளைக் கண்காணித்து, அதிலும் மேம்படுத்தப்பட்ட தனிப்பயனாக்கச் சேவைகளை கூகுள் மேப்ஸ் வழங்கவுள்ளது. இது பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் கருதுகின்றனர்.

  • விவேக்பாரதி

கூகுள் நிறுவனத்தின் அறிவிப்புகள்

கூகுள் மேப்ஸ் பின் தொடரல் நீக்கப்படுவது குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now