இந்த ஆண்டிற்கான 77வது பிரைம் டைம் எம்மி விருதுகளில் 81 பரிந்துரைகளைப் பெற்று ஆப்பிள் டிவி பிளஸ் சாதனை படைத்துள்ளது. தொலைக்காட்சித் துறையின் உச்சமாகக் கருதப்படும் எம்மி விருதுகள் “தொலைக்காட்சியின் ஆஸ்கர்” என்று அழைக்கப்படுகின்றன. 1949-இல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயன்சஸ் அமைப்பால் தொடங்கப்பட்ட இவ்விருதுகள், முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளூர் நிகழ்ச்சிகளை கௌரவித்தன; பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்தன.
“எம்மி” (Emmy) என்ற பெயர், தொடக்க கால தொலைக்காட்சிப் படக்கருவிகளில் பயன்படுத்தப்பட்ட “இமேஜ் ஆர்திகான்” குழாய் எனப்படும் கருவியின் செல்லப்பெயரான “இமி”(Immy) என்பதிலிருந்து வந்தது. அணுவை தாங்கிய பறக்கும் பெண்ணின் உருவமாக இருக்கும் சின்னம், கலை, அறிவியல் இணைப்பை பிரதிபலிக்கிறது. காலப்போக்கில், எம்மி விருதுகள் நடிகர்கள், படைப்பாளிகளுடன் சேர்த்து கதைகளை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்ப புதுமைகளையும் கௌரவிக்கும் அளவுகோலாக மாறின.
இந்த வரலாற்று மேடையில், ஆப்பிளின் இணைய ஒளிபரப்பு சேவை ஆப்பிள் டிவி பிளஸ் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்துள்ளது. 2019ல் அறிமுகமான இந்த சேவை, பழைய திரைப்பட நூலகங்களை நம்பாமல், சொந்தமாக உருவாக்கிய புதிய படைப்புகளை மட்டுமே கொண்டு தரத்தை மையப்படுத்திய போட்டியை உருவாக்கியது. எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு வழக்கத்தில் இருக்கும் திரைத்துறைக் கட்டுப்பாடுகளின்றி கனவு கதைகளை உருவாக்கும் சுதந்திரமும் தயாரிப்புக்காகப் பெரிய நிதியும் வழங்கியது.

இதன் விளைவாக செவரன்ஸ், டெட் லாசோ, தி மோர்னிங் ஷோ போன்ற தனித்துவமான தொடர்கள் உருவாகின. அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் கோடா திரைப்படம் ஆஸ்கரில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று, ஸ்ட்ரீமிங் படைப்புகளும் ஹாலிவுட்டின் உயரிய விருதுகளில் இடம் பெற முடியும் என்பதை நிரூபித்தது.
இந்த ஆண்டும் ஆப்பிள் டிவி பிளஸ் எம்மி விருதுகளில் சாதனை படைத்து 81 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. உளவியல் த்ரில்லர் செவரன்ஸ், 27 பரிந்துரைகளுடன் முன்னிலை வகித்து இந்த ஆண்டின் அதிக பரிந்துரைகள் பெற்ற தொடராக மாறியுள்ளது. அதேசமயம், பணியிடத்தை மையமாக கொண்ட நையாண்டி நகைச்சுவை தொடரான தி ஸ்டூடியோ, 23 பரிந்துரைகளுடன் எம்மி வரலாற்றில் அதிக பரிந்துரைகள் பெற்ற நகைச்சுவை தொடராக திகழ்கிறது.
மேலும் ஆப்பிளின் ஸ்லோ ஹார்சஸ் என்ற உளவு த்ரில்லர் தொடர், ஷ்ரின்கிங் என்ற நகைச்சுவை தொடர், பிரிசூம்ட் இன்னசன்ட் என்ற சட்ட த்ரில்லர் ஆகியவை விமர்சக பாராட்டுகளையும் பல பரிந்துரைகளையும் பெற்றுள்ளன. கூடவே, தி கார்ஜ் என்ற ஆப்பிள் டிவி திரைப்படமும் டெஃப் பிரெசிடென்ட் நாவ் ஆவணப்படமும் கவனம் பெற்றுள்ளன.
- நவீனா
