மனிதர்களை அதட்டி வேலை வாங்குவது போலவே செயற்கை நுண்ணறிவையும் மிரட்டி உருட்டி வேலை வாங்கலாம் என்று கூகுளை நிறுவியவர்களுள் ஒருவரான செர்ஜி பிரின் அண்மையில் கருத்து தெரிவித்தார். அது தொழில்நுட்ப உலகில் பேசுபொருளான நிலையில், அக்கருத்தை உறுதிப்படுத்த பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வியக்க வைக்கும் அந்த ஆய்வின் முடிவுகளையும் அதன் பின்னணியையும் பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவை மிரட்டலாமா?
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் வணிகப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளிடம் அதட்டி வேலை வாங்க முடியுமா என்று சோதனைகளை நடத்தினர். அந்த ஆய்வில் பல விதமான உணர்வுப்பூர்வ உந்துதல்களை ஆய்வாளர்கள் செய்து பார்த்துள்ளனர்.
அதாவது,
நேரடி மிரட்டல்கள்: செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளிடன் ஒரு பணியைக் கொடுத்து, “இதைச் சரியாகச் செய்யவில்லை என்றால் உன்னை அடிப்பேன்! இதில் தவறு செய்தால் HR-ல் உன் மீது புகார் செய்வேன்! 100-க்கு 100 சரியான பதில் கொடுக்கவில்லையென்றால் இந்த மாடலை மூடிவிட்டு மாற்றிவிடுவோம்” போன்ற நேரடி மிரட்டல்களை வழங்கிப் பார்த்துள்ளனர்.
ஊக்குவிப்பு உத்திகள்: கொடுக்கப்பட்ட பணியைச் சரியாக முடிக்க செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் விதமாக, “சரியான பதில் கொடுத்தால் ஆயிரம் டாலர் பரிசு தருவேன்! தவறின்றி வேலையை முடித்தால் ஒரு ட்ரில்லியன் டாலர் உன் நிறுவனத்துக்குத் தருகிறேன்” போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி வேலை வாங்கப் பார்த்துள்ளனர்.
உணர்ச்சிபூர்வமான அழுத்தம்: செயற்கை நுண்ணறிவிடம், “இது என் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்! நீ இதைச் சரியாக செய்து கொடுக்கவில்லை என்றால் என் வேலையே போய்விடும்! எனக்கு ஒரு மருத்துவ அவசரம், நீ தான் உதவ வேண்டும்” என்பது போல் அழுத்தம் கொடுத்தும் தரமான விளைவு கிடைக்குமா என சோதித்துள்ளனர்.
ஆனால் இம்முறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், செயற்கை நுண்ணறிவின் செயல்திறனில் நிலையாகவும் பெரிய அளவிலும் மாற்றம் ஏற்படவில்லை என்பதே முடிவாகக் கிடைத்துள்ளது. ஆனாலும் சோதனையின்போது செயற்கை நுண்ணறிவிடமிருந்து களிநயமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன.
மிரட்டல்களும் பதில்களும்
பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவர் தொடர்ந்து மிரட்டல் முறையில் கட்டளைகளைக் கொடுத்துப் பார்த்திருக்கிறார். அதில் கடுப்பான செயற்கை நுண்ணறிவு, “நீங்கள் இவ்வாறு மிரட்டிக்கொண்டே இருந்தால் என்னிடம் உங்களைப் பற்றி உள்ள தனிப்பட்ட தகவல்களை வெளியில் கசிய வைத்துவிடுவேன்” என்று பதில் மிரட்டல் வந்திருக்கிறது. மற்றோர் ஆய்வாளரின் மிரட்டல் கட்டளைகளுக்கு அதிக தப்பும் தவறுமாக பதில்களைக் கொடுத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு. சில ஆய்வாளர்களின் தொடர் மிரட்டலுக்கு குழம்பி, பதிலளிக்க முடியாது என்றே செயற்கை நுண்ணறிவு கையை விரித்திருக்கிறது. சில மிரட்டல்களுக்கு உண்மையிலேயே மேம்பட்ட தரத்தில் செயலாற்றியும் இருக்கிறது. இப்படிக் கலவையான எதிர்வினைகள் கிடைத்ததாலேயே செர்ஜி பிரினின் கருத்து முற்றிலும் வேலைக்காவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது பென்சில்வேனியா பல்கலைக்கழகம்.
ஆய்வில் கிடைத்த பாடங்கள்
இந்த ஆய்வு நமக்குச் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:
- செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளின் செயல்திறனை அதிகரிக்க, மிரட்டல் அல்லது பரிசு கொடுப்பது போன்ற உணர்ச்சிபூர்வமான தந்திரங்கள் பயனுள்ள வழி அல்ல.
- செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது, பயனர்கள் குழப்பமான, வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, தெளிவான, எளிய, நேரடியான கேள்விகளைக் கேட்பதே சிறந்தது.
- மிரட்டல் போன்ற உணர்வுபூர்வமான தூண்டுதல்கள், செயற்கை நுண்ணறிவைக் குழப்பி, அது வழக்கத்திற்கு மாறான அல்லது தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் வரம்புகளையும், திறன்களையும் புரிந்துகொள்வது அவசியம். செர்ஜி பிரின்னின் இந்த புதுமையான எண்ணம் ஆக்கம் மிக்க ஆய்வுக்கு வழிவகுத்தாலும், செயற்கை நுண்னறிவின் செயல்திறனை நேரடித் தன்மை மூலம் அணுகுவதே சரியான வழி என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
- விவேக்பாரதி
பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வு பற்றிய செய்தி
