ஆண்டிராய்டு கைவிட்ட அம்சங்கள்


எந்தெந்த அம்சங்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாததால், ஆண்டிராய்டு பயனர்கள் வருத்தப்படுகின்றனர் என்ற கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்​னூல் வரிக்கு ஏற்றார்போல் எல்லோரும் பழையவற்றைக் களைந்துவிட்டு புதியனவற்றை வாழ்க்கையி​ல் புகு​த்தி வருகிறோம். இதற்கு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. அவையும் அவ்வப்போது பழைய அம்சங்களை நீக்கிவிட்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. என்னதான் புதிய அம்சங்கள் வந்தாலும், பழையவை பயனர்களின் நெஞ்சிலேயே குடிகொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிராய்டின் எந்தெந்த அம்சங்கள் இல்லாமல் பயனர்கள் வருத்தப்படுகிறார்கள் என்பது பற்றி, ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் தங்கள் நெடுநாள் வருத்தங்களை எல்லாம் கொட்டி தீர்த்திருக்கிறார்கள் பயனர்கள். இதில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அதிகபட்சமாக 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கின் இல்லாமையால் ஏங்குவதாக 27​% மக்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்தாக 25%த்துடன் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது மின்கலத்தைக் கழற்றி மாட்டுவது. மின்கலத்தை கழற்றி மாற்ற முடியாதவர்களின் மனக்குமுறல் இந்த கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டிருக்கிறது.

இவ்விரு முடிவுகளையும் பார்த்த ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளம், “இந்த இரு முடிவுகளால் மிகவும் வியப்புக்குள்ளானோம்” எனக் கருத்து தெரிவித்திருக்கிறது. அடுத்தபடியாக, பழைய ஆண்டிராய்டு சாதனங்களின் விரிவாக்கக்கூடிய சேமிப்பக அம்சம் இருந்தது. ஏனெனில் வேகமாக உள்ளகத்திலேயே சேமித்துக்கொள்ளும் விருப்பங்கள், நினைவக அட்டைகளின் தேவையை போக்கிவிட்டன. ஆனால் ஒரு கருவியிலிருந்து மற்றொன்றுக்குத் தரவை மாற்றும்பொழுது, நினைவக அட்டைகள் வழங்கும் எளிமையான பரிமாற்றத்​தை புதிய அம்சத்தால் வழங்க​முடியவில்லை.

அறிவிப்பு வரும்பொழுது தோன்றும் சிறிய ஒளி உமிழ் விளக்கு, பயனர்க​​ளின் அடுத்த விருப்பமாக உள்ளது. இதனை ஆ​ண்டிராய்டு கைவிட்ட பிறகும், சில நிறுவனங்கள் பயன்படுத்த முயன்றன. ஆனால் அவற்றால் ஆண்டிராய்டைப் போன்ற அனுபவத்தை வழங்க முடியவில்லை. இன்னும் சிலர் பழைய வானொலியைத் தவறவிட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அதில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “நாம் பலவற்றைத் தவறவிட்டிருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பந்தயத்தில், முன்பு நம்மிடம் இருந்ததை விடப் பல வழிகளில் திருப்தி அடைந்துவிட்டோம்.” எனக் கூறியிருக்கிறார்.

  • மு. இசக்கிமுத்து

ஆண்டிராய்டு அத்தாரிட்டி கருத்துக் கணிப்பு

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now