மேம்படுத்தப்பட்ட தமிழ் மின்நூலக இணையத்தளம் 

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களிடம் உள்ள அரிய நூல்களைப் பதிவேற்றவும் தனக்கெனத் தனி மின் நூலகத்தைப் பராமரிக்கவும் இந்த இணையதளத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல புதிய அம்சங்களும் மேம்படுத்தப்பட்ட தமிழ் மின்நூலக இணையதளத்தில் உள்ளன.

tamil_virtual_library

2001ஆம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது மின்நூலகம். பல்வேறு நூலகங்கள், தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்ட அரிய இதழ்கள், நூல்கள் மின்னுருவாக்கம் செய்து இம்மின்நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. தற்போது கூடுதல் வசதிகளுடன் இணையத்தளம் மேம்பாடு கண்டுள்ளது. 

தனி நபர் தனக்கென இந்த இணைய தளத்தில் பதிவு செய்து கணக்கு தொடங்க முடியும். தான் விரும்பும் நூல்களை தரவிறக்கம் செய்து படிக்கலாம். தளத்திலேயே படிப்பதற்கும் வசதி இருக்கிறது. அப்படிப் படிக்கும் நூல்களை மீண்டும் மீண்டும் சென்று தேடி எடுக்காமல் தன்னுடைய நூலகப் பட்டியலில் சேமித்துவைத்துக் கொண்டும் படிக்கலாம். 

நம்மிடம் அரிய நூல்கள், பழைய இதழ்கள் இருக்குமானால் அதையும் இந்நூலகத்தில் பதிவேற்ற முடியும். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அந்நூலைப் பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிடுவர். பயனர்கள் வலைப்பக்கமும் இருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சொல்வதற்குத் தரமான தகவல்கள் இருப்பின் இந்த வலைப்பூவில் எழுதலாம்.

வழக்கமாக இருக்கும் தேடல் வசதியுடன் சிறப்புத் தேடல் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கீழடி என்னும் சொல்லை உள்ளிட்டுத் தேடினால் அச்சொல் இருக்கும் நூல்களை கூடுதல் தகவல்களுடன் பட்டியலிடுகிறது. 2020ஆம் ஆண்டு, தமிழகத் தொல்லியல் துறை ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அதைப் பதிவேற்றம் செய்தது தமிழ் இணையக் கல்விக் கழகம். மத்திய தொல்லியல் துறையின் நூல் ஒன்று அகழாய்வு வகைப்பாட்டின் கீழ இதே பொருண்மையில் இருக்கிறது. தமிழ்ப் பெருமிதம் என்ற இலக்கியநூல் ஒன்றும் கீழடி தொடர்பாக தனிநபர் ஒருவரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விலாவாரியான தகவல்களுடன் சிறப்புத் தேடல் அம்சமானது விவரங்களைத் தருகிறது.

நாம் படிக்கும் நூல்களைப் பற்றிய விமரிசனங்களைக் கருத்துகளை எழுத முடியும். சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வதும் எளிது.

மின் நூலகத்தில் காட்சி, ஒலிக் கோப்புகள் பெருமளவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. வரைபடங்களும் தகவல்களை எளிதாக வரைந்து புரியவைக்கும் விளக்கப்படங்களும்கூட நூலகத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ளன. சட்டசபையில் அறிஞர் அண்ணாதுரை பேசும் படம், இந்திய முதல்வர் இந்திராகாந்தியுடன் எம்.ஜி.ஆர். பேசிக்கொண்டிருக்கும் படம், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுடன் கருணாநிதி மேடையில் அமர்ந்திருக்கும் படம், போன்ற பல அரிய பழைய படங்கள் இத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவ்வளவு புதிய அம்சங்களுடன் தளம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. வேகமாகவும் இயங்குகிறது.

தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மின்நூலகத்தின் தொடக்கம், செயல்பாடு தொடர்பான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

“கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட நிறுவனங்களிலும் தனிநபர் சேகரிப்பிலுமிருந்து பெறப்பட்ட அரிய நூல்கள், இதழ்கள், ஆவணங்கள் போன்றவற்றை மின்னுருவாக்கம் செய்து இம்மின்நூலகம் உருவாக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்பதிப்பாக்கப் பணிகள், 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்நூலகமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. தமிழ் மின்நூலகத் தளத்தில் கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பெற்றுள்ளன. இம்மின்நூலகம் 17 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைத் தாண்டி செல்கிறது.  

சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த தமிழ் மின்நூலகம் தற்போது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொளிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின்நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் எளிதாகவும் விரைவாகவும்  பயன்படுத்தும் வகையில், நூல்களும், இதழ்களும், ஆவணங்களும் வகைபிரித்து வைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் சிரமமின்றிப் பயன்கொள்ள ஏதுவாக எளிமையாகத் தேடக்கூடிய, பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்பை மின்நூலகம் கொண்டுள்ளது. பயனர் விருப்பத்தின் அடிப்படையில் தேடல் வசதி மற்றும் வகைப்படுத்துதல் போன்ற வசதிகள் உள்ளன.” 

TVA
TVA

பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்டுள்ள தமிழ் மின்நூலகத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மின்னணு சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று (ஆகஸ்டு 8) திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மின்னணு சேவைகள் துறையின் முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப., தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் (பொ) ரெ. கோமகன், உதவி இயக்குநர் (மின் நூலகம்) செல்வ புவியரசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

– செல்லினம் 

தமிழ் மின் நூலகம் இணையதளம்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now