குரோய் பாடல் ஆப்பிள் படக்கருவி

இசையும் புதிய தொழில்நுட்பங்களும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெ​ளி வந்திருக்கிறது ஜப்பானிய இசைக்குழு குரோய் (Kroi) வழங்கியுள்ள புதிய பாடல் ஒன்று. இந்த இசைக்குழு தங்களின் புதிய பாடல் `Method`-ன் காணொளியை 40 ஐபோன் 16 புரோ திறன்பேசிகளை பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறது. படப்பிடிப்பிற்கென இருக்கும் எந்த ஓர் ஒளிப்பதிவு கருவியும் இல்லாமல், முழுவதும் ஆப்பிள் திறன்பேசிகளின் படக்கருவியை பயன்படுத்தி காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜப்பானிய மொழியில் குரோய் என்றால் கருப்பு என்று பொருள். 2018 பிப்ரவரி 3-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த இசைக்குழு ஐந்து பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. உருவான ஒரே ஆண்டி​ல் ஜப்பான் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள்தான் ஐபோன் 16 புரோ திறன்பேசிகளை பயன்படுத்தி, இசையின் உருவாக்க காணொளியை தயாரித்திருக்கிறார்கள்.

சுமார் $40,000 மதிப்பிலான 40 ஐபோன்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிளின் “Shot on iPhone” என்ற முன்னெடுப்பிற்கு உதாரணமாகவும் இந்த இசை காணொளி உருவாகியிருக்கிறது. அந்த விளம்பரத்தை போன்றே, ஆப்பிள் திறன்பேசிகளின் படக்கருவி தரம் எப்படி இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நி​ரூபித்திருக்கிறது.

இசை காணொளியுடன் நில்லாமல், இசைக்குழு தங்களின் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பின்னணி காணொளியையும் உருவாக்கியுள்ளது. 40 ஐபோன்களும் எவ்வாறு அமைக்கப்பட்டன, எப்படி படமெடுப்பு நடந்தது என்பதை விரிவாக காட்டும் வகையில் பின்னணி காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காணொளியில் இசைக்குழுவின் முன்பக்கம் ஏராளமான ஐபோன்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் வித்தியாசமாக, கீபோர்ட், கிட்டார் போன்ற இசைக்கருவிகளிலும், கூரையிலிருந்து கீழ்நோக்கியும் ஐபோன்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது படமெடுப்பில் முற்றிலும் புதிய கோணங்களை உருவாக்கியது. பார்வையாளர்களுக்கும் புதுவித அனுபவத்தை உருவாக்கியது.

யூடியூபில் இந்த காணொளி 6.8 மில்லியன் பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணி உருவாக்க காணொளியை ஆப்பிளின் மூத்த துணைத் தலைவர் கிரேக் ஜோஸ் ஜோஸ்வியாக் (Greg Joz Joswiak) தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் குரோய் இசைக்குழுவினரின் திறமையையும் பாராட்டியுள்ளார்.  

“28 Years Later” என்ற திகில் திரைப்படத்தில் சில காட்சிகள் ஐபோன்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக குரோயின் பாடலும் வெளியாகியுள்ளது. இவை ஐபோன்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பனவையாகவே உள்ளன.

  • மு. இசக்கிமுத்து

எக்ஸ் தளப் பதிவு

மேத்தட் பாடல் காணெளி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now