ஜீனி ஆகும் ஐபோன் ‘சிரி’

ஐபோன் என்றாலே கவனம் ஈர்க்கும் அம்சமாக உள்ள குரல்வழி உதவியாளரான சிரி, இப்போது “ஆலம்பனா! கட்டளை இடுங்கள்” என்றபடிக்குச் சொன்னதையெல்லாம் செய்து முடிக்கும் ஜீனியாக உருவெடுத்திருக்கிறது. சிரியிடம் பயனர் சொல்லும் எதையும் செயலிகளுடன் ஒருங்கிணைந்து சிரி செய்து முடிக்கும் புதுப்பிப்பை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இது, பயன்பாட்டு அனுபவத்தை எளிமைப்படுத்தி, பாதுகாப்பையும் வழங்குவதாக பயனர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

ஐபோன் பயனர்களின் செல்லமாக விளங்கும் குரல்வழி உதவியாளர் இயலிதான் சிரி. “இப்போது மணி என்ன?” என்ற அடிப்படைக் கேள்விகளில் தொடங்கி, கூகுளிடம் கேட்க முயலும் கடினமான கேள்விகளுக்குக் கூட பல நேரங்களில் துல்லிய பதில் சொல்லும் ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மாதிரியாகவே சிரி செயல்படுகிறது. அதுதான் இன்று எதையும் செய்யும் பணியாளாக புதிய அம்சம் கொடுக்கப்பட்டு, ஆப்பிள் பயனர்களுக்குப் பரிசாகக் கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது சிரி இயலியில் செயலிகளுடன் ஒருங்கிணைந்து பணி ஆற்றும் அம்சத்தை மேம்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்களின் குரல்வழிக் கட்டளைகளுக்கு ஏற்ப செயலிகளை இயக்கி சிரி பணியை முடிக்கும்படி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே இருந்த சிரி, “என் அம்மாவை அழை, அலாரம் வை, செய்தியை வாசித்துக் காட்டு” என்பது போன்ற எளிய கட்டளைகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்தது. ஆனால், இனி புதிய சிரி, இயந்திர கற்றல், பெரிய மொழி மாதிரிகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நாம் பேசும் மொழியின் முழு சூழலையும் புரிந்துகொள்ளும். இதன் மூலம், பயனர்கள் சிக்கலான, நீண்ட கட்டளைகளைக் கொடுத்தாலும், சிரி அவற்றை துல்லியமாகப் புரிந்துகொண்டு பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும்.

எடுத்துக்காட்டாக, “நேற்று நான் எடுத்த பூக்களின் புகைப்படங்களில் அழகானதாகப் பார்த்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்று” என்றால் சிரி படங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவேற்றிவிடும். அதேபோல், “இசைப்பெட்டியைத் திறந்து எனக்குப் பிடித்த பாடல்களை ஒலிக்கவிடு” என்றால், நாம் அடிக்கடி பயன்படுத்தும் இசை செயலியைத் திறந்து, நம் பாடல் தேர்வுகளைப் புரிந்துகொண்டு திறன்பேசியைப் பாட வைக்கும். “நான் சொல்வதைத் தட்டச்சு செய்து நண்பருக்கு அனுப்பு” என்று கூறிவிட்டுச் செய்தியைச் சொன்னால், அது தட்டச்சு செய்து, நம்மிடம் படித்துக் காட்டி உறுதி செய்துவிட்டு, அனுப்பும். இப்படி இன்னும் பல அடுக்குக் கட்டளைகளைத் திறம்பட முடித்து வைக்கும். இவ்வம்சம் அமேசான், உபெர், யூடியூப் முதலிய அனைத்து செயலிகளுக்கு இடையிலும் ஆழமான ஒருங்கிணைப்புடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிரியில் செயலிகளுக்கு ஊடாக உலவும் அம்சத்தைப் போல், பாதுகாப்பு வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, சிரியால் அனைத்துச் செயலிகளையும் கட்டுப்படுத்த முடிந்தாலும், வங்கிச் செயலிகள், நிதி சார்ந்த செயலிகள் அல்லது பிற முக்கியத் தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் செயலிகளுக்கு இந்த வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பையும் தனிப்பட்ட தகவல்களின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இவ்வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஐபோன் இயங்குதளத்தின் கட்டுக்கோப்பான பாதுகாப்பும் சிரியின் நம்பகத்தன்மையும் இருந்தாலும் நிதி பரிவர்த்தனைகளைச் சிரியால் நேரடியாகக் கையாளும் அணுகலை மட்டும் ஆப்பிள் நிறுவனம் கொடுக்கவில்லை. பல அடுக்குக் கட்டளைகளைப் புரிந்து கொள்வதில் ஏதும் தவறு நேர்ந்தால், பெரும் நிதி இழப்பு நேரும் அபாயம் இருப்பதால் இவ்வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியின் புதிய மேம்படுத்தல் மூலம் ஐபோன்களை முற்றிலும் குரல்வழியாக கட்டுப்படுத்தும் வசதி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. “நீங்கள் சொன்னால் மட்டும் போதும்” என்று சொல்லும் ஆப்பிள் நிறுவனம், ‘எள்’ என்றால் ‘எண்ணெய்’ஆக வேலை செய்யும் அளவு சிரியை ஆயத்தமாக்கியுள்ளது. செயலிகளுக்கு ஊடாகப் பம்பரமாய்ச் சுற்றிப் பணி செய்யும் புதிய சிரி, நிதி பரிவர்த்தனையில் கை வைக்காதபடி அமைத்திருப்பது பயனர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆப்பிள் கொண்டு வந்திருக்கும் இந்தப் புதுப்பிப்பு, பயனர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதிலும், ஐபோன் செயலிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • விவேக்பாரதி

சிரியின் புதிய மேம்படுத்தல் குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now