ஆழ்ந்த சிந்தனையில் கூகுள்

கூகுள் தனது ஜெமினி செயலியில் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு தனித்துவமாக 2.5 டீப் திங்க் (Deep Think) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனித அறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான எல்லைகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், ஜெமினி செயற்கை நுண்ணறிவு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது பல வகையான தகவல்களையும் ஒரே சமயத்தில் புரிந்துகொண்டு செயலாற்றும் திறன் கொண்டது. இதில், கடந்த நிரலாளர்கள் மாநாட்டில் கூறியதை போல, ஆழ்ந்த சிந்தனை என்ற புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் சிக்கலான இடர்பாடுகளை எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பதைப் போலவே, பல்வேறு கோணங்களை ஆராய்ந்து இறுதி பதிலை வழங்குகிறது. அதாவது எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும், அவற்றை மிகவும் பொறுமையாகப் பகுத்து, அதன் தொடக்கம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் ஆராய்கிறது. 

சிக்கல்களைத் தனித்தனிக் கூறுகளாகப் பகுக்கும் இதன் திறனைக் கண்டு பிரம்மிப்படைந்ததாக கூகுள் தனது வலைப்பதிவில் கூறியிருக்கிறது. இந்த திறன் அறிவியல் அறிஞர்களுக்குக் கூட நிச்சயம் உதவிபுரியும். கணித சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளை வழங்குகிறது. இதன் திறனைச் சோதிப்பதற்காக வைக்கப்பட்ட பல்வேறு விதமான சோதனைகளிலும் நல்ல விதமான மதிப்பெண்களை எடுத்திருக்கிறது. அதோடு அனைத்துலக கணித ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறது.

ஜெமினி 2.5 புரோவை காட்டிலும் வேகமாக ஜெமினி 2.5 டீப் திங்க் அம்சம் செயல்படுகிறது. அனைத்து விதங்களிலும் பிற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் காட்டிலும், இது பெருமளவில் சிறந்து விளங்குவதாக கூகுள் கூறியிருக்கிறது. ஆனால் சி​க்கல் இல்லாத கேள்விகளை, ஆழ்ந்த நுண்ணறிவு மாதிரியாகிய என்னால் இதற்கு பதிலளிக்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் ​மூலம் சிக்கல் இருக்கும் இடமெல்லாம் நான் இருப்பேன் எனக் கூறாமல் கூறி​விட்டது ஆழ்ந்த நுண்ணறிவு.

இதனைப் பயன்படுத்துவதற்குக் ​கூகுள் அல்ட்ரா சந்தாதாரராக இருந்தால் மட்டுமே போதுமானது. கட்டளைப் பெட்டியில் (prompt bar) டீப் திங்க் என்பதை தொடுவதன் ​மூலம் பயன்படுத்தலாம். அதன் பிறகென்ன, சவாலான சிக்கல்களையும் கடினமான பாடங்களையும் ஜெமினியின் உதவியால் எளிதாக முடித்துவிடலாம். இதனை மேம்படுத்தும் அடுத்தக்கட்ட முயற்சிகளிலும் இறங்கிவிட்டதாக கூகுள் கூறியிருக்கிறது.

  • மு. இசக்கிமுத்து

கூகுள் வலைப்பதிவு

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now