சமூக ஊடகங்களில் 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளம் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சம் கொண்ட புதிய டீன் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் இளம் வயதினருக்கான தணிக்கை பற்றிய விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் சூழலில் மெட்டாவின் இந்த முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய நவீன உலகில், இளைஞர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைச் சமூக வலைத்தளங்களில்தான் செலவிடுகிறார்கள். இது அவர்களின் நட்பு வட்டத்தை விரிவுபடுத்தி, உலக நடப்புகளை அறிந்துகொள்ள உதவுகிறது. ஆனால், அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் ஏராளம். இணைய அச்சுறுத்தல்கள் (Cyberbullying), போலி கணக்குகள், பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற பல அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது.
இவற்றால் இளைஞர்களின் மனநலம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே சமூக வலைத்தளங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளங்களாக மட்டும் இல்லாமல், அவர்களின் பாதுகாப்பிற்கும் மனநலத்திற்கும் உத்தரவாதம் அளிப்பவையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுதான் இன்ஸ்டாகிராம் டீன் கணக்குகள். இது, இளைஞர்களைப் பாதுகாப்பான எல்லைக்குள் வைத்து, அவர்களது சுதந்திரமான செயல்பாட்டிற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று கூறப்படுகிறது.
மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய டீன் கணக்குகள், இளைஞர்களின் இணைய உலக பயன்பாட்டைப் பாதுகாப்பானதாக ஆக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் இயல்பாகவே தனியுரிமை ஆக்கப்பட்ட கணக்குகளைத்தான் உருவாக்க முடியும். பயன்படுத்த பாதுகாப்பில்லாத உள்ளடக்கங்களை சேர்க்க முடியாது என்பது உட்பட முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சில,
- கணக்குத் தனியுரிமை : புதிய இளம் பயனர்களின் கணக்குகள் தானாகவே ‘மறைவுக் கணக்காக’ (Private Account) அமைக்கப்படும். இதன் மூலம், அவர்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே அவர்களின் பதிவுகளைப் பார்க்கவும், பின்தொடரவும் முடியும்.
- குறைவான உள்ளடக்கம்: இளம் பயனர்களின் ‘ரீல்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்ப்ளோர்’ போன்ற பக்கங்களில், உணர்ச்சிபூர்வமான, வன்முறை சார்ந்த, அல்லது பெரியவர்களுக்கான உள்ளடக்கங்கள் குறைவாகவே காட்டப்படும். இது இளம் வயதினரின் மனநலனைப் பாதுகாக்கும்.
- மடல் கட்டுப்பாடு: இளம் பயனர்களுக்கு ஏற்கெனவே பின்தொடரும் நபர்களிடமிருந்து மட்டுமே மடல்கள் வர முடியும். அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் மடல் கோரிக்கைகள் தானாகவே நிராகரிக்கப்படும்.
- உறங்கும் நிலை: இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை, இளம் பயனர்களுக்கு அறிவிப்புகள் வராமல் தடுக்கும் உறங்கும் நிலை (Sleep mode) தானாகவே செயல்படுத்தப்படும்.
- பயன்பாட்டு நேர வரம்பு: ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் இளம் பயனர்களுக்கு, செயலியை விட்டு வெளியேறும்படி நினைவூட்டல் வரும்.
- பெற்றோர் மேற்பார்வை: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இணைய செயல்பாட்டை மேற்பார்வையிடவும், பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தவும், சில பாதுகாப்பு அமைப்புகளை மாற்றவும் புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பெற்றோரின் அனுமதியின்றி இளம் பயனர்களால் மாற்றி அமைக்க முடியாது.
போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்பட்டுள்ள இம்மாற்றங்கள், விரைவில் மெட்டாவின் மற்ற சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், மெசெஞ்சர் ஆகியவற்றிலும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இளம் வயதினருக்கு மெட்டாவின் அனைத்து தளங்களிலும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. மெட்டாவின் இம்முடிவு, சமூக ஊடகத் துறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் எனப் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
- விவேக்பாரதி
இன்ஸ்டாகிராம் டீன் கணக்குகள் பற்றிய அறிமுகம்
