கூகுள் பிக்சல் தகவல் பாதுகாப்பு

நமது திறன்பேசிகளில் தனிப்பட்ட உரையாடல்கள் முதல் புகைப்படங்கள் வரை பல்வேறு முக்கியமான தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்காகக் குறியீட்டு எண், கைரேகை போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்தத் தகவல்கள் தவறானவர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தாலே பலருக்கும் ஒருவித பயம் உருவாகிவிடும்.

ஆண்டிராய்டு இது​போன்ற தாக்குதல்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கிவருகிறது. ஆனால் யாரேனும் வலுக்கட்டாயமாகத் திறன்பேசியை திறக்கவைத்து, அதில் உள்ள தகவல்களைக் கைப்பற்றிவிட்டால் என்ன செய்ய முடியும். இந்த மாதிரியான சூழ்நிலைகளுக்கு கிராஃபின்ஓஎ​​​ஸ் (GrapheneOS) நல்ல ஒரு தீர்வை வழங்குகிறது. கிராஃபின்ஓஎ​​​ஸ் என்பது ஆண்டிராய்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த​மூல அமைப்பாகும். இது தனியுரிமை, தரவு பாதுகாப்பு போன்றவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனைக் கூகுள் பிக்சல் திறன்பேசிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இது வழக்கமான ஆண்டிராய்டை விடவும் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. அத்தகைய அம்சங்களுள் ஒன்றுதான் கட்டாய நிலை குறியீட்டு எண். இந்த இரண்டாம் நிலையாக ஒரு கடவுச் சொல், அவசர காலங்களில் திறன்​பேசியில் உள்ள அனைத்து தரவுகளையும் அழித்துவிடும். அதாவது கட்டாய நிலை குறியீட்டு எண்ணை உள்ளிடும்போது, நீங்கள் யாரோ ஒருவரால்​ கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, தரவுகள் அனைத்தும் அழிக்கப்படும்.

ஒரு முறை கட்டாய நிலை குறியீட்டை உள்ளிட்டுவிட்டால், ஈசிம்(eSIM) தகவல்கள் கூட அழிக்கப்பட்டுவிடுகின்றன. தரவுகள் அழிக்கப்படுவதற்கு எந்த வித இரண்டாம் வாய்ப்புகளோ, அறிவிப்புகளோ கூட வழங்கப்படுவதில்லை. மிகவும் அவசரமான காலங்களில் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். தவறுதலாகக் கட்டாய குறியீட்டு எண்ணை உள்ளிட்டால் கூட தரவுகள் அழிக்கப்படுகின்றன.

கிராஃபின்ஓஎ​​ஸ் கூகுள் பிக்சல் திறன்பேசிகளில் நிறுவுவது கொஞ்சம் பெரிய செயல்முறைதான். அதிகாரப்பூர்வமாக வலை யூஎஸ்பி ​மூலம் நிறுவுவது, கட்டளை வரி நிறுவல் வழிகாட்டியை (Command line installation guide) பயன்படுத்துவது என இரண்டு நிறுவல் வழிமுறைகள் உள்ளன. கட்டளை வரி நிறுவல் முறை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது. அதனால் நாம் சாதாரண பயனர்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் வலை யுஎ​​ஸ்பி முறையைப் பற்றி விரிவாக காண்போம்.

கிராஃபின்ஓஎ​​ஸ்-ஐ நிறுவுவதற்கு முதலில் ஒரு கணினி தேவை. கணினியில் குறைந்தது 2GB இலவச நினைவகம் மற்றும் 32GB இலவச சேமிப்பு இடம் இருக்க வேண்டும். கூகுள் பிக்சல் திறன்பேசியை கணினியுடன் இணைக்க யுஎ​ஸ்பி தேவை. நிறுவல் செயல்முறைக்கு முன்னர் கணினியை மேம்பாடு செய்துகொள்வது நல்லது.

நிறுவல் செயல்முறை

முதல் படியாகத் திறன்​பேசியில் நிரலாளர் அம்சங்களை (Developer Options) செயல்படுத்த வேண்டும். அமைப்புகளுக்குள் சென்று, திறன்பேசியைப் பற்றி என்பதில் உருவாக்க எண்ணை (Build number) பலமுறை அழுத்தி நிரலாளர் அம்சங்களைச் செயல்படுத்துங்கள். அடுத்ததாக நிரலாளர்கள் அம்சங்களுக்குள் சென்று OEM unlocking என்பதைத் தொடுங்கள்

இதை செய்து முடித்துவிட்டு திறன்பேசியை மறுதுவக்கம் செய்ய வேண்டும். அப்போது ஒலியளவு குறைக்கும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து Fastboot Mode, சிவப்பு எச்சரிக்கை முக்கோணம் தெரியும் வரை காத்திருக்கவும். அந்த நேரத்தில் பவர் பொத்தானை அழுத்திவிடக்கூடாது. இப்போது திறன்பேசியைக் கணினியுடன் யுஎ​ஸ்பி இணைப்பு கம்பியைப் பயன்படுத்தி இணைக்க வேண்டும். 

அடுத்ததாகக் கணினியில் கிராஃபின்ஓஎ​​ஸ் வழங்கியிருக்கும் நிறுவல் படிமுறையில் உள்ள ‘Unlock bootloader’ என்ற பொத்தானைத் தொடுங்கள். அதை முடித்துவிட்டு வெளியீட்டைப் பதிவிறக்கு என்ற ‘Download release’ பொத்தானை அழுத்தி கிராஃபின்ஓஎ​​ஸ்-​ஐ ​​​​நிறுவிவிடலாம். அதன் கீழே இருக்கக்கூடிய ‘Flash release’ என்ற பொத்தானையும் அழுத்தவும். செயல்முறை முடியும் வரை காத்திருங்கள்.

இது முடிந்த பிறகு பூட்லோடரை பூட்டுவது முக்கியம். “Lock bootloader” என்பதைத் தொட்டு பூட்லோடர் அம்சத்தை முடக்கிக்கொள்ளலாம். அடுத்ததாக பூட்லோடர் இடைமுகத்தில் தொடங்கு என்பதைத் தொட்டு, கிராஃபின்ஓஎ​​ஸ்-ஐ தொடங்கலாம். இந்த செயல்முறையைப் பற்றிய நிறுவல் படிநிலைக்கான இணைப்பு ​கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிராஃபின்ஓஎஸ் ​மூலம் திறன்பேசியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து

நிறுவல் படிநிலைகளுக்கான இணைப்பு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now