ஆண்டிராய்டு திறன்பேசிகளில் இனி அமேசான் ஆப்ஸ்டோர் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அமேசான் ஆப்ஸ்டோருக்கான ஆண்டிராய்டு செயலியை நீக்கப்போவதாக அமேசான் கூறியுள்ளது. இதன்மூலம் கூகுள் பிளேஸ்டோருக்கு மாற்றாக 14 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செயலியின் கதை முடிவுக்கு வருகிறது.

அமேசான் ஆப்ஸ்டோர் உருவானது ஏன்?
திறன்பேசிகள் அனைத்தும் செயலிகளின் துணைகொண்டே இயங்குகின்றன. அவற்றை நிறுவ, உலகம் முழுவதும் ஏகோபித்த செயலி பதிவிறக்கும் இடமாக கூகுள் பிளேஸ்டோர் திகழ்கிறது. ஆனால் அதன் ஏகாதிபத்தியமே சந்தையில் அதற்குப் போட்டியாக மற்ற நிறுவனங்களின் செயலிக் கடைகள் உருவாகவும் காரணம் ஆனது. அப்படி அமேசான் நிறுவனம் 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியதே அமேசான் ஆப்ஸ்டோர். அமேசான் நிறுவனம் இதைத் திறன்பேசிகள், அமேசான் தொலைக்காட்சிகள், பயர்ஸ்டிக், டேப்கள் போன்ற கருவிகளுக்காக உருவாக்கியது. கூகுளுக்கு மாற்று விரும்பிய பயனர்கள் சிலரால் அமேசான் ஆப்ஸ்டோர் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் திறன்பேசிகளில் கூகுள் பிளேஸ்டோரே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஏன் அமேசான் ஆப்ஸ்டோரை நீக்குகிறார்கள்?
திறன்பேசிகளைக் காட்டிலும் அமேசான் ஆப்ஸ்டோர் அந்நிறுவனங்களின் சொந்த கருவிகளான அமேசான் தொலைக்காட்சி, பயர் டேப்லட், பயர் ஸ்டிக் போன்றவற்றுக்கு மட்டுமே இயல்புநிலைச் செயலி வழங்கியாகச் செயல்பட்டு வந்தது. திறன்பேசிக்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ்டோர் செயலியைத் தரவிறக்கியவர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாக உயராமலேயே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வணிக காரணங்களுக்காகவே அமேசான் ஆப்ஸ்டோர் செயலி திறன்பேசிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும், அமேசான் நிறுவனம் பொதுப்படையான கருவிகளையும் செயலிகளையும் உருவாக்குவதை விட, தனிப்பட்ட முறையில் அமேசான் தளக்கூட்டம் (Amazon Ecosystem) கட்டமைப்பதில் கவனம் காட்டி வருகிறது. இதன் காரணமாகவும் தங்கள் சொந்தக் கருவிகளில் மட்டும் இயல்புநிலைச் செயலியாக நிறுவும் வகையில் இம்முடிவை அந்நிறுவனம் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமேசான் ஆப்ஸ்டோர் பயனர்கள் கவனிக்க வேண்டியவை
ஆப்ஸ்டோர் சேவை நிறுத்தப்படுவது ஆண்டிராய்டு பயனர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இச்செயலி, ஆகஸ்ட் 20, 2025-க்குப் பின் செயல்படாது. இதனால், அமேசான் ஆப்ஸ்டோரில் இருந்து பதிவிறக்கப்பட்டு பயன்படுத்தி வந்த செயலிகள், ஆகஸ்ட் 20-க்குப் பின் செயல்படாமல் போகலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், அமேசான் ஆப்ஸ்டோரில் தரவிறக்கிய செயலிகளை நீக்கிவிட்டு, கூகுள் பிளேஸ்டோரில் அதே செயலிகளை மீண்டும் தரவிறக்கிப் பயன்படுத்துவது சிரமத்தைத் தவிர்க்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல், அமேசான் காய்ன்ஸ் மூலம் ஆப்ஸ்டோரில் செயலிகளைப் பெறும் பயனர்களுக்கு, அவற்றில் மீதம் இருந்தால் ஆகஸ்ட் 20-க்குப் பின் அந்தத் தொகை பயனர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை அமேசான் விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் ஆப்ஸ்டோர் என்ன ஆகும்?
வரும் ஆகஸ்ட் 20 முதல் ஆண்டிராய்டு கருவிகளுக்கான செயலி சேவை மட்டுமே நிறுத்தப்படுகிறது. அமேசானின் சொந்தத் தயாரிப்புகளான பயர் டிவி மற்றும் பயர் டேப்லெட்களில் அமேசான் ஆப்ஸ்டோர் தொடர்ந்து இயங்கும். இதனால், அவற்றின் பயனர்கள் எந்த பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள். இந்த முடிவு, ஒரு காலத்தில் கூகுள் ப்ளே ஸ்டோருக்குப் போட்டியாக இருந்த ஒரு தளம், இப்போது தனது களத்தை மாற்றிக்கொண்டு, அமேசானின் சொந்த கருவிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது.
- விவேக்பாரதி
அமேசான் ஆப்ஸ்டோர் நீக்கப்படுவது குறித்த செய்தி
