கற்றலை எளிதாக்க பல பயனுள்ள அம்சங்களை வழங்கும் கூகுள் குரோம், மாணவர்கள் எங்கிருந்தாலும் படிப்பு, ஆராய்ச்சி, நேர மேலாண்மை ஆகியவற்றை திறம்படச் செய்ய உதவுகிறது. இப்போது அதிலிருந்து சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

கற்றலுக்கான அம்சங்கள்
ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு, உலாவியில் நேரடியாக இணைக்கப்பட்ட தனிப்பட்ட ஆசானைப் போன்றது. ஜெமினி சின்னத்தை ஒருமுறை சொடுக்கினால், சிக்கலான தலைப்புகளை எளிமையாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, மாணவர்களுக்கு பயிற்சி கேள்வி–பதில்களையும் வழங்குகிறது. மேலும், கூகுள் நிறுவனம் ஒரு வருட கூகுள் ஏஐ புரோ (Google AI Pro) சந்தாவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் குரோம் ஓர் இடத்தில் அனைத்தையும் கொண்ட முழுமையான படிப்பு துணையாக திகழ்கிறது.
ஆடியோ ஓவர்வியூஸ் (Audio Overviews) என்பது விரைவில் ஆண்டிராய்டுக்கு வரவிருக்கும் புதிய வசதி. நீண்ட கட்டுரைகள், பாடக் குறிப்புகள், ஆன்லைன் பாடப்புத்தக அத்தியாயங்கள் போன்றவற்றை ஓரிரண்டு நிமிட உரையாடல் பாணி குரல் சுருக்கங்களாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, தேர்வு நேரத்திற்கு முன்பு மாணவர்கள் வகுப்பிற்கு நடந்து செல்லும் போது அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போது, முக்கியமான குறிப்புகளை “இந்தப் பக்கத்தை கேட்க” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து கேட்கலாம். இதனால், முழு கட்டுரையை வாசிக்க நேரமில்லை என்றாலும், முக்கியமான அம்சங்களை எளிதாக புரிந்துகொள்ளவும், தேர்வுக்கு முன் விரைவாக மறுபார்வை செய்யவும் முடியும்.
படங்களை அடிப்படையாகக் கொண்டு தகவலைக் கண்டறியும் கூகுள் லென்ஸ் (Google Lens in Chrome), மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆன்லைன் பாடப்புத்தகத்தில் அல்லது பிடிஎப் கோப்பில் இருக்கும் கடினமான இயற்பியல் சமன்பாடு, உயிரியல் வரைபடம், புள்ளிவிவர அட்டவணை போன்றவற்றை லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், குரோம் செயற்கை நுண்ணறிவு அந்தப் பகுதியை ஆய்வு செய்து, விளக்கங்கள், தீர்வுக்கான வழிமுறைகள், மேலும் சில சமயங்களில் கூடுதல் பயிற்சி எடுத்துக்காட்டுகளையும் வழங்கும்.
நேர மேலாண்மைக்கான அம்சங்கள்
படிப்பும் தனிப்பட்ட செயல்களும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, குரோம் ஐஓஎஸ் (iOS) கணக்கு மாறுதல் அம்சம் உதவியாகிறது. இதன் மூலம் கல்வி மற்றும் தனிப்பட்ட கணக்குகளை தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். கல்வி கணக்கில் பாடங்கள், ஆராய்ச்சி குறிப்புகளை சேமிக்கலாம்; தனிப்பட்ட கணக்கில் சமூக வலைத்தளம், பொழுதுபோக்கு போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். சில சொடுக்குகளில் கணக்குகளை மாற்றி, படிப்பு பணிகளுக்கும் தனிப்பட்ட செயல்களுக்கும் இடையில் தெளிவான எல்லையை வைத்திருக்கலாம்.
சேமிக்கப்பட்ட டாப் குழுக்கள் (Saved Tab Groups) அம்சம் மாணவர்கள் இணைய உலாவல் மற்றும் ஆராய்ச்சியை ஒழுங்குபடுத்தி எளிதாகத் தொடர உதவுகிறது. ஒரு திட்டம் அல்லது பாடப்பிரிவுக்கான அனைத்து வலைத்தளங்களையும் தனித்தனி டாப் குழுக்களாக உருவாக்கலாம். நூலகத்தில் லேப்டாப் மூலம் உருவாக்கிய குழுக்கள் தானாகவே கூகுள் கணக்கில் உள்நுழைந்துள்ள பிற கருவிகளிலும் கிடைக்கும். இதனால், நூலகத்தில் தொடங்கிய ஆராய்ச்சியை வீட்டில் இருக்கும் கணினி அல்லது பயணத்தில் இருக்கும் போது திறன்பேசியில் விட்ட இடத்திலிருந்து தொடர முடியும்.
கிராஸ் டிவைஸ் சிங்க் (Cross-Device Sync) மூலம் உலாவல் வரலாறு, புக் மார்க், டாப் குழுக்கள் அனைத்தும் ஒத்திசைந்து செயல்படும். எந்தக் கருவியில் வேலை செய்வதை நிறுத்தினாலும், அதே இடத்திலிருந்து பணியை மற்றொரு கருவியில் தொடரலாம்.
மாணவர்கள் கல்வி பொறுப்புகள், ஆராய்ச்சி வேலைகள், தனிப்பட்ட செயல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டிய சூழலில், குரோம் அளிக்கும் இவ்வசதிகள் நேரத்தை மிச்சப்படுத்தி, கற்றலை சீர்படுத்தி, உற்பத்தித் திறனை உயர்த்துகின்றன. இவை அனைத்தும் கூகுள் குரோம் உலாவியை, மாணவர்களுக்கான முழுமையான மின்னணு படிப்பு துணை (Digital Study Companion) ஆக மாற்றுகின்றன.
- நவீனா
