முரசு அஞ்சல் 12.0.3 இன்று வெளியானது!

விண்டோசிலும் மெக் கணினியிலும் இயங்கும் முரசு அஞ்சல் தமிழ் உள்ளீட்டுச் செயலியில் சில மேம்பாடுகளும் சில புதுமைகளும் சேர்க்கப்பட்டன. இலவசப் பயனர்களும் பயன்பெறுவர்.

Murasu Anjal Manager App
முரசு அஞ்சல் முதன்மைச் செயலி

முரசு நிறுவனம் தனது புகழ்பெற்ற முரசு அஞ்சல் செயலியின் 12.0.3ஆம் பதிப்பை இன்று வெளியிட்டது. விண்டோஸ் பயனர்களுக்கான முக்கியப் பயன்பாட்டு மேம்பாடு இப்பதிப்பில் உள்ளது. முரசு நிறுவனம் அவ்வப்போது வெளியிடப்படும் எழுத்துருக்களை உடனுக்குடன் பதிவிறக்கிப் பயன்படுத்தும் புதிய அமைப்பையும் இந்தப் பதிப்பு கொண்டு வருகிறது. இதனை https://anjal.net/download பக்கத்தில் இப்போதே பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

முன்னதாக, விண்டோஸ் கணினிகளில் உள்ளீட்டுத் தேர்வுகளை (input settings) அமைக்கும் வழிமுறையானது பலருக்குச் சவாலாக இருந்தது. விண்டோஸ் மொழிக் கட்டத்தை (language bar) முதலில் அமைத்து, அதன் வழியே முரசு அஞ்சல் உள்ளீட்டுத் தேர்வுகளுக்குச் செல்லவேண்டும். தற்போது இப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை. முரசு அஞ்சல் செயலியின் 12.0.3ஆம் பதிப்பில் விண்டோஸ் அடிக்கட்டத்திலேயே (system tray) முரசு அஞ்சல் சின்னம் இருக்கும். இயங்குதளத்தின் பின்னணியில் இயங்கும் முரசு அஞ்சல் ஐக்கான் வழியாகவே மொழித் தேர்வுகளை அமைத்துக்கொள்ளலாம். ​முரசு அஞ்சல் செயலில் புதிய அம்சங்களாக அறிமுகமாகியுள்ள சொற்பட்டியல், அகராதி, சொல்வன் முதலிய இன்னபிற அம்சங்களைப் பயன்படுத்துவதும் இதனால் எளிதாகிறது. விண்டோஸில் குழப்பமான அமைப்புகள் எதையும் செய்யத் தேவையில்லை.

“தமிழில் தட்டெழுதுவதை எளிமைப்படுத்துவதும், களிப்பூட்டும் ஒன்றாக ஆக்குவதும் எங்கள் தலையாய நோக்கங்களுள் ஒன்று.” என்பதே முரசு அஞ்சல் செயலியின் நிறுவனர் முத்து நெடுமாறன் கூற்று. அதன் பொருட்டு தொடர்ந்து பயனர் கருத்துகளைக் கேட்டறிந்து பயன்பாட்டை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த மேம்பாடு வெளிவந்துள்ளது.

முரசு அஞ்சல் கணினிக்குள் பல நுணுக்கமான வேலைகளைச் செய்யும் ஒரு செயலி. இதனை எளிமையாக நிறுவி, கணினிக்குள் அமைத்து உடனே பயன்படுத்த ஏதுவாக பல புதுமைகள் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளீட்டு முறை அமைப்புகள், புதிய எழுத்துருக்களை உடனுக்குடன் பெறுதல் போன்ற செயல்கள் எல்லாம் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மெக்ஓஎஸ் பதிப்பில் பரிந்துரைகளை வழங்குவதிலும், சொல்வன் செயலியின் செயல்பாட்டிலும் சில மேம்பாடுகளைத் தாங்கி வருகிறது இந்தப் புதிய பதிப்பு.

இந்தியாவிலும் இலங்கையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தட்டச்சு, பாமினி விசைப்பலகை அமைப்புகள் முந்தைய பதிப்பில் சேர்க்கப்பட்டன. இவற்றைப் பயன்படுத்திய பயனர்கள் பலரிடமிருந்து வந்த கருத்துகளுக்கேற்ப இவ்வமைப்புகளும் மேம்பாடு கண்டுள்ளன. அறிவார்ந்த பரிந்துரைகள், பிழைதிருத்தங்கள் போன்ற வசதிகள் அஞ்சல், தமிழ்99 அமைப்புகளில் இருப்பது போலவே தட்டச்சு, பாமினி அமைப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

அறிவார்ந்த பரிந்துரைகளை வழங்குதல், தட்டுப்பிழைகளைத் திருத்துதல் புதிய சொற்களை உடனுக்குடன் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுதல் முதலிய வசதிகள் முரசு அஞ்சல் செயலியின் இலவசப் பதிப்பிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுங்காலப் பயனர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ள முரசு நிறுவனம், மேற்சொன்ன வசதிகள் அனைத்தையும் பழைய விசைப்பலகை அமைப்புகளிலும் சேர்த்துள்ளது.

ஜூன் 2025 இல் வெளியான 12.0ஆம் பதிப்புக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டிற்கு வெளிவரும் முதல் பதிப்பு இதுவே. இதில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியக் கூறுகளையும் மேம்படுத்தும் வழிமுறைகளையும் முரசு அஞ்சல் செயலியின் இணையதளத்தில் காணலாம்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now