கேள்வியும் நானே பதிலும் நானே

மாணவர்களின் கல்வி கற்றலில் முக்கியமானது கல்லூரிப் பருவம். அக்கறையோடு ஊட்டி வளர்க்கப்படும் பள்ளிச் சூழலில் இருந்து வெளிவரும் மாணவர்கள், உண்மை உலகின் போட்டிகளைச் சந்திப்பது கல்லூரியில்தான். அந்தச் சூழலில்தான் மாணவர்களின் உண்மையான திறனும் அதை நம்பிய எதிர்காலமும் வெளிப்படும். 

பள்ளியை விடக் கல்லூரிப் படிப்பில்தான் பாடப்புத்தகங்களைக் கடந்த அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாதது ஆகிறது. அதற்காக நூலகம், இணையம் போன்றவை தோழர்களாய் இருந்து உதவிய மாணவக் குலத்திற்கு இன்று செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. ஜெமினி, சாட்ஜிபிடி, கிளாடு போன்ற மொழி மாதிரிகளின் உதவியால் மாணவர்கள் என்னென்ன செய்து கொள்ளலாம் என்பதைப் பெரும் பட்டியலாகவே உருவாக்கலாம். அவற்றுள் சில. 

கேள்விகளுக்கு உதவும் தோழன் 

சரியான கேள்விதான் தெளிவான பதிலைக் கொடுக்கும் என்பது உளவியல் கூற்று. செயற்கை நுண்ணறிவின் மொழி மாதிரிகள், மாணவர்களுக்குத் தெளிவாகக் கேள்வி கேட்பதைக் கற்றுக் கொடுக்கின்றன. அவற்றின் உதவி கொண்டு பேராசிரியர்களிடம் ஐயங்களைத் தீர்த்துக் கொள்வது, சுயமாக தமக்குள் தேடலை வளர்த்துக் கொள்வதில் தொடங்கி, மாணவர்கள் திறமையான கேள்விகளைக் கொண்டு தெளிவான அறிவை அடைகின்றனர். வகுப்பில் எந்தக் கேள்விகளைக் கேட்டால் எப்படிச் சிறந்த பதில்களைப் பெறலாம் என்று மொழி மாதிரிகள் சொல்லிக் கொடுப்பதால் கேள்வி கேட்கும் தயக்கத்திலிருந்தும் மாணவர்கள் விடுபடுகின்றனர்.

நள்ளிரவு ஐயங்களின் நண்பன் 

நடிகர் விவேக்கின் திரைப்பட நகைச்சுவை காட்சி போல் நள்ளிரவில் தோன்றும் ஐயங்களைத் தீர்த்து வைக்க செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள் உதவுகின்றன. மாணவர் தனக்கு உகந்த நேரத்தில் கல்வி கற்கும்போது ஐயம் தீர்க்கத் தயாராக இவை உள்ளன. ஒரு மாணவர் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகவும், தெளிவாகவும் பதில் அளிக்கின்றன. அடிப்படைக் கருத்துக்களைப் புரிய வைப்பது முதல், சிக்கலான கணக்குகளைப் படிநிலைகளாகப் பிரித்து விளக்குவது வரை, ஒரு தனிப்பட்ட பயிற்சியாளரைப் போலச் செயல்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் சுய கற்றலையும் மதிப்பீட்டையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது.

பயிற்சிக்கு உதவும் துணைவன்

கணினி அறிவியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் மாணவர்கள் பல படிநிலைகளைக் கொண்ட கணக்குகளைத் தீர்க்க வேண்டியுள்ளது. ஒரு சிறிய தவறு கூட முழு பதிலையும் மாற்றிவிடும். ஆனால், ஒரு மாணவன் தனது விடையை சரிபார்க்க விரும்பும்போது, செயற்கை நுண்ணறிவின் மொழி மாதிரிகளை நாடலாம். அவை விடையின் சரியான தன்மையைச் சரிபார்த்து, தவறு நடக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், மென்பொருள் குறியீடுகளைக் (coding) கற்க விரும்புபவர்களுக்கு, அவை சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. அடிப்படையான குறியீடுகளைப் பயிற்றுவிப்பது, பயிற்சி வினாக்களை உருவாக்குவது, பிழைகளைச் சரிசெய்வது எனப் பலவிதங்களில் உதவுகின்றன. 

பாடங்களை எளிதாக்கும் பாங்கன் 

விரிவான குறிப்புகளை எடுக்கும் மாணவர்கள், அவற்றை ஒழுங்கமைப்பது அல்லது முக்கிய தகவல்களை மட்டும் பிரித்தெடுப்பது போன்ற பணிகளில் பல மணிநேரம் செலவிடுவார்கள். செயற்கை நுண்ணறிவு, அந்தச் சிரமத்தை எளிதாக்கித் தருகின்றன. ஒரு பெரிய கட்டுரையையோ குறிப்பையோ கொடுத்தால், அதைப் பல துணை தலைப்புகளாகப் பிரித்து, அட்டவணைகளை உருவாக்கி, முக்கிய வரையறைகளைப் பட்டியலிட்டுத் தருகின்றன. மேலும் அதை எளிதில் நினைவு வைத்துக் கொள்ளும்படியான விளக்கப்படங்கள், நினைவு வரைபடங்கள், முக்கியமான சொற்கள் போன்றவற்றைக் கோடிட்டுக் காட்டி கற்றலை எளிமை செய்கின்றன.

வருங்காலம் சொல்லும் வழிகாட்டி 

மாணவர்களுக்கு, கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு என்ன செய்வது என்ற கவலை அதிகமிருக்கும். செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள், ஒரு மாணவரின் துறையைப் பொறுத்து, கடிதங்களை வடிவமைக்க, சுயவிவரங்களைத் திருத்த, பணிக்குத் தேவையான திறன்களைப் பட்டியலிட உதவுகின்றன. இது பட்டப்படிப்பிற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் வேலை தேடல் போராட்டத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.

இதுபோன்ற பணிகளைச் செய்வதால் கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் கவலையும் பயமும் இன்றி, தெளிவுடன் அனுபவிக்கும் வழிவகையைச் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள் உறுதி செய்கின்றன. உற்ற தோழனாக, உதவும் நண்பனாக, கையடக்கப் பேராசிரியராக விளங்கும் அவற்றின் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவம் உயரும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பது மறுக்கமுடியாததே.

  • விவேக்பாரதி

கல்லூரி மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு உதவும் வழிகள் குறித்த கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now