சென்னை வாரத்தை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சியை நடத்தியது. எழுத்துருவியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் நாள் சென்னை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 2025 ஆகஸ்ட் 16 முதல் 22 வரை அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. பழங்கால நூல்கள், வார, மாத இதழ்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இதற்கு முந்தைய கண்காட்சிகளின் கையேடுகள், ஒரு பண்பாட்டின் பயணம் உள்ளிட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அச்சுத்துறையின் பொற்காலமாகக் கருதப்படும் காலத்தில் வெளிவந்த இதழ்களில் இருந்த எழுத்துகள் கவனம் ஈர்ப்பவையாக இருந்தன. தற்போதைய கணினி யுகம் போன்றல்லாது ஓவியர்கள் தங்கள் கலைத் திறனைக் காட்ட நல்வாய்ப்பு இருந்த காலம் அது. சில இதழ்கள் குறிப்பிட்ட கலைத்தன்மையை மட்டுமே தனித்துவமாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தலைப்பு, உள்ளடக்கம், இதழ்களின் உள்ளே வரையப்படும் படம் அனைத்துமே மெல்லிய கோடுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். சிலவற்றில் இவை அனைத்தும் தூரிகை கொண்டு வரையப்பட்ட விதத்தில் இருக்கும்.
திராவிடன் இதழ் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான தலைப்பெழுத்தை கொண்டிருந்த பத்திரிகை. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதழ் சிவப்பு கறுப்பு வண்ணக் கட்சிக் கொடியின் வண்ணத்தில் நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது.
ஜோதி இதழ் வடிவமும் உள்ளடக்கமும் தற்போது உள்ள வார இதழ்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. மார்க்சியம் இன்று இதழ் முக்கோண வடிவத்தை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஓவியர் ஆதிமூலம் இம்மாதிரி வடிவங்களை அதிகம் பயன்படுத்தியவர்.
குமுதம் இதழில் உள்ள எழுத்துகளின் வடிவம் குடம் போன்ற தோற்றம் உடையவை. கு எழுத்தும் மு எழுத்தும் ஒன்றின்மேல் ஒன்று இருப்பதுபோல வரையப்பட்டிருக்கிறது. மணிக்கொடி, மேலும் போன்ற இதழ்களில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களை வைத்தே இதழின் பெயரை எழுதியுள்ளனர்.
நிகழ் இதழ் முக்கியமான சிறுபத்திரிகைகளில் ஒன்று. இந்தப் பத்திரிகையின் தலைப்பெழுத்து கட்டம், வட்டம் மட்டுமே கொண்டு எழுதப்பட்டுள்ளது. கோடுகளுக்கும் கட்டம், வட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலான வடிவங்களே உள்ளன.
அக்காலத்தில் இருந்த புகழ்பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த எழுத்துகளில் மிகச் சிலவற்றை மட்டுமே இந்தக் கண்காட்சியில் காணலாம். ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள பல்வேறு இதழ்கள், நூல்களில் இப்படி நிறைய புதுமையான, ஆர்வத்தைத் தூண்டும் கவித்துவமான, கலைத்தன்மை உடைய எழுத்துகள் உள்ளன. இன்றைய கணினி உலகில் அவற்றை உயிர்ப்பிக்கும் நடவடிக்கையாகவே தமிழ் எழுத்துருக்கூடம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தால் தொடங்கப்பட்டது.
பழைய எழுத்துகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தற்காலத்துக்கு ஏற்ற கணினி எழுத்துருவாக மாற்றும் பணிகள் நடந்துவருகின்றன. எழுத்துருத் துறையில் நிறைய இளைஞர்கள் வருவதை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறார்கள். முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் வழிகாட்டுதலில் பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் நிதி உதவியுடன் பெரிய கட்டடத்தில் ரோஜா முத்தையா நூலகம் செயல்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பொது மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் இத்தகைய வளங்களை இளையோர் பயன்படுத்தி நவீன காலத்திலும் தமிழை வளர்த்தெடுப்பது அவசியம்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களில் அவர்கள் செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆர்வமுள்ளோர் பின்தொடரலாம்.
