ஒரு திறன்பேசி எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. உங்கள் திறன்பேசி நீண்ட காலம் நீடிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சராசரி ஆயுட்காலம் வரையாவது நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு சில விஷயங்களைத் திட்டமிட்டால் போதும். ஒவ்வோர் அமைப்பையும் கட்டுப்படுத்தினால் மின்கலன் ஆயுள் மேம்பட்டு திறன்பேசி நீண்ட காலம் நீடிக்கும்.

திறன்பேசியை நீண்ட நாள் நீடிக்க வைக்க உதவும் 6 ஆண்டிராய்டு அமைப்புகள் :
- கறுப்புத் திரை
அதிக வெளிச்சம் கொண்ட முறையிலிருந்து இருண்ட முறைக்குத் திறன் பேசியை மாற்றும்போது அதனால் உண்டாகும் தாக்கத்தைத் தெளிவாகக் காணலாம். ஆராய்ச்சியின் படி இது சராசரியாக 39% முதல் 47% வரை திறன்பேசியின் மின்கலனை சேமிக்க உதவும். இப்போது பெரும்பாலான ஆண்டிராய்டு திறன்பேசிகளில் அறிவிப்பு பகுதியிலிருந்து நேரடியாக திரை அமைப்பைக் கட்டுப்படுத்தலாம் அல்லது அமைப்புகளின் காட்சி பகுதிகளிலும் சென்று மாற்றலாம்.
2. வெளிச்சத்தைக் குறைப்பது
திறன்பேசியின் வெளிச்சம் அதிக மின்சாரத்தை உண்ணும். இது மின்கலனின் வெப்பத்தையும் வேகமாக அதிகப்படுத்தும். வெயிலில் திறன்பேசியைப் பார்க்கும்போது குறைந்த வெளிச்சம் இருந்தால் திரை சரியாகத் தெரியாது. எனவே தானாகவே வெளிச்சத்தை ஏற்றி இறக்கும் முறையைப் பின்பற்றினால் வெளியே இருக்கும் வெளிச்சத்துக்கு ஏற்ப திரையும் தானாகவே மாறிக்கொள்ளும்.
3. மின்கல நலன்
திறன்பேசிக்கு மின்னேற்றம் செய்யும்போது 80% வரையிலும் மின்னேற்றினால் அது மின்கலனின் ஆயுளை நீட்டிக்கும். சில திறன்பேசிகளில் இந்த அம்சம் பொதுவாகவே இருக்கும்.
4. இருப்பிட அமைப்பு கட்டுப்பாடு
இருப்பிட சேவைகள் தொடர்ந்து இயங்கினால் மின்கலன் விரைவில் தீர்ந்துபோகும். இதைத் தடுக்க செயலியைப் பயன்படுத்தும்போது மட்டும் இருப்பிட அமைப்பு தோன்றும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
5. பின்புல செயல்பாடு
பின்புலத்தில் செயல்படும் செயலிகள் நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் மின்சாரம் உண்ணும். எனவே வேலை மற்றும் முக்கிய செயலிகள் தவிரப் பிறவற்றை அவ்வப்போது நீக்கி பின்புல செயல்பாட்டைத் தடுக்கலாம்.
6. மென்பொருள் புதுப்பிப்பு
மேலே சொன்ன அனைத்தையும் செய்தும் பிரச்சினை இருந்தால் புதிய மென்பொருள் புதுப்பிப்பு உள்ளதா என்று பார்த்து அதை மேம்படுத்தலாம். பல நேரங்களில் மென்பொருள் புதுப்பிப்பு மின்கலனின் செயல்திறனை மேம்படுத்தும்.
திறன்பேசியின் ஆயுளை நீட்டிப்பது மின்கலனின் பாதுகாப்பு மட்டுமல்ல உடல் சேதத்திலிருந்தும் பாதுகாக்கும்.
- சத்யா கோபாலன்.
