களைகட்டும் ஐபோன்17 விற்பனை

ஐபோன் 17 வரி​சை திறன்பேசிகளின் அறிமுகம் தொழில்நுட்ப உலகில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ்
ஆகிய 4 ரக திறன்பேசிகளை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 256ஜிபி சேமிப்பகம் கொண்ட ஐபோன் 17 திறன்பேசி 799 டாலருக்கும், ஐபோன் ஏர் திறன்பேசி 999 டாலருக்கும், ஐபோன் 17 புரோ திறன்பேசி 1,099 டாலருக்கும், ​ஐபோன் 17 புரோ மேக்ஸ் திறன்​பேசி 1,199 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 512 ஜிபி சேமிப்பகம் கொண்ட திறன்பேசிகளுக்கு கூடுதலாக 200 டாலர்கள் வீதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திறன்பேசிக​ளின் விற்பனை முன்பதிவு சீனாவில் களைகட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா, ஆப்பிள் நிறுவனத்தி​ன் மிக முக்கியமான சந்தையாகும். ஆனால் பல ஆண்டுகளாக அந்த சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஆப்பிள் போராடிவருகிறது. இப்போது வெளியாகியுள்ள புதிய ஐபோன் 17 வரிசையின்  வெளியீட்டுக்காக, ஆப்பிள் நிறுவனம் சீனாவில் வெற்றிகரமான வெளியீட்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

இதனாலோ என்னவோ ஐபோன் 17 வரிசைக்கான முன்பதிவுகள் சீனாவில், வழக்கமான விற்பனை சாதனைகளை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன முன்பதிவுகள் தொடங்கிய ஒரே நிமிடத்தில், முக்கிய விற்பனையாளரான JD.com மூலம் விற்பனையானவை ஐபோன்16 தொடரின் முதல் நாள் முன்பதிவு அளவை மிஞ்சின.

இது மட்டும் அல்லாது, பிற விற்பனையாளர்கள் ​மூலமும் இதே அளவிலான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதீத முன்பதிவினால், ஆப்பிளின் இணைய தளங்கள்கூட கதிகலங்கிவிட்டன. பணத்தை செலுத்துவதற்கு 5 நிமிடங்கள் ஆனதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். சாங்காயில் உள்ள ஆப்பிள் நிறுவனக் கடைகளில், 20 நிமிடங்களுக்குள் மொத்த முன்பதிவும் ​நிறைவடைந்துவிட்டன.  

இந்த விற்பனைக்காக ஆப்பிளை ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர். ஆப்பிள் தனது தயாரிப்பு வரிசையை பிரித்து, ஒவ்வொரு ரகமு​ம் குறிப்பிட்ட பயனர் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதுதான் நல்ல விற்பனைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐபோன் ஏர்-க்கான முன்பதிவுகள், அரசின் ஒப்புதலை பெற தாமதம் ஏற்பட்டதால், தற்போது சீனாவில் கிடைக்கவில்லை. வி​ரைவி​ல் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பயனர்களின் கரங்களை சென்று சேரப்போகிறது ஐபோன் 17 வரிசை. அதன்பிறகு பயனர்கள் வழங்கப்போகும், மதிப்பாய்வுகளுக்காக காத்திருக்கிறது ஆப்பிள்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now